ஜிம்பாப்வேயை மீண்டும் இலகுவாக வீழ்த்திய பங்களாதேஷ் தொடர் வெற்றி

127

ஆரம்ப வீரர்களான இம்ருல் கைஸ் மற்றும் லிட்டோன் தாஸின் சதத்தை நெருங்கிய ஓட்டங்கள் மூலம் சித்தகோனில் புதன்கிழமை (24) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்திய பங்களாதேஷ் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை தவறவிட்ட இம்ருல் கைஸ் 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் அது ஜிம்பாப்வே அணியை வீழ்த்துவதற்கு போதுமாக இருந்தது.

சாஹுர் அஹமது சௌத்ரி அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்றதோடு பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 250 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் 144 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷுக்கு வெற்றி தேடிக் கொடுத்த இம்ருல் கைஸ் இரண்டாவது ஒருநாள் போட்டியில் லிட்டோன் தாஸுடன் சேர்ந்து ஆரம்ப விக்கெட்டுக்கு 148 ஓட்டங்களை பகிர்ந்து  கொண்டார். இது இந்த ஆண்டில் பங்களாதேஷின் சிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகும்.

பங்களாதேஷ் இன்னிங்ஸின் முதலாவது ஓவரிலேயே லிட்டோன் தாஸுக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூ மூன்றாவது நடுவரின் மூலம் திரும்பப்பெற்ற நிலையில் அவர் அபாரமாக ஆடி 77 பந்துகளில் 83 ஓட்டங்களை பெற்றார்.

சுழற்பந்து வீச்சாளர் சிகந்தர் ராசா லிட்டோன் தாஸை ஆட்டமிழக்கச் செய்து இணைப்பாட்டத்தை முறித்ததோடு மூன்றாவது வரிசையில் வந்த பஸ்ல் மஹ்மூதையும் தனது அடுத்த ஓவரில் வீழ்த்தினார். எனினும் இம்ருல் மறுமுனையில் இருந்து ஜிம்பாப்வேயில் உற்சாகத்தை சிதறடித்தார்.   

ராசா கடைசியில் இம்ருலின் விக்கெட்டையும் வீழ்த்தி 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பெற்றார்.

ஆடுகளத்தின் பனி சூழல் பற்றி தெரிந்திருந்த பங்களாதேஷ் அணித்தலைவர் மஷ்ரபி மோர்தஸாவுக்கு அது தனது வேலையை இலகுவாக்க உதவியது.  இதனால் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவர் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட ஆழைத்தார்.

இதன்படி துடுப்பெடுத்தாட வந்த ஜிம்பாப்வே அணித்தலைவர் ஹமில்டன் மசகட்ஸாவின் விக்கெட்டை (14) விரைவாக இழந்தது. எனினும் பிரென்டன் டெய்லர் 73 பந்துகளில் 75 ஓட்டங்களை பெற்றதோடு ராசா (49) மற்றும் சீன் வில்லியம்ஸ் (47) துடுப்பாட்டத்தில் சோபித்து பங்களாதேஷுக்கு சவால் கொண்ட இலக்கொன்றை நிர்ணயிக்க உதவினர்.     

பங்களாதேஷ் சகலதுறை வீரரான முஹமது சைபுத்தீன் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.  

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (26) நடைபெறும்.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 246/7 (50) – பிரென்டன் டெய்லர் 75, சிகந்தர் ராசா 49, சீன் வில்லியம்ஸ் 47, முஹமது சைபுத்தீன் 3/45

பங்களாதேஷ் – 250/3 (44.1) – இம்ருல் கைஸ் 90, லிட்டோன் தாஸ் 83, முஷ்பீகுர் ரஹீம் 40*, சிகந்தர் ராசா 3/43

முடிவு – பங்களாதேஷ் 7 விக்கெட்டுகளால் வெற்றி