ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

172
Bangladesh recall Mosaddek

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவில் உள்ள டேராடூனில் அடுத்த மாதம் 3ஆம், 4ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

முதலாவது இருதரப்பு T20 தொடரில் மோதவுள்ள ஆப்கான் – பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய கிரிக்கெட்..

இதில் பங்களாதேஷ் அணியை சகிப் அல் ஹசன் மீண்டும் வழிநடத்தவுள்ளதுடன், சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு அவ்வணியின் சகலதுறை ஆட்டக்காரரான மொசாடிக் ஹொசைன் டி20 அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை அணியுடன் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது கை விரலில் ஏற்பட்ட உபாதையினால் பங்களாதேஷ் டி20 அணியின் தலைவர் சகிப் அல் ஹசனுக்கு எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

இதனையடுத்து இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளின் பங்குற்றலுடன் கடந்த மார்ச் மாதம் கொழும்பில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடரின் ஆரம்ப லீக் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. எனினும், இலங்கை அணியுடனான இறுதி லீக் ஆட்டம் மற்றும் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் சகிப் மீண்டும் பங்களாதேஷ் அணிக்காக விளையாடியிருந்தார்.

தற்போது உபாதையிலிருந்து பூரணமாக குணமடைந்து ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக வினையாடி வருகின்ற அவர், மீண்டும் பங்களாதேஷ் அணியை வழிநடத்தவுள்ளார்.

இந்நிலையில், சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு அவ்வணியின் சகலதுறை ஆட்டக்காரரான மொசாடிக் ஹொசைன் டி20 அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இறுதியாக அவர் 2017ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடியிருந்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் அவர் இடம்பெற்றிருந்தாலும், துரதிஷ்டவசமாக களத்தடுப்பில் ஈடுபட்ட போது பந்து கண் பகுதியை தாக்கியதை அடுத்து அவர் குறித்த தொடரிலிருந்து நாடு திரும்பினார். இதனால் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இலங்கை தொடர் மற்றும் சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடர் என்பவற்றில் அவரால் விளையாட முடியாமல் போனது.

பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இருதரப்பு தொடர் ஜூலையில்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் நேற்றைய (15)..

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரில் மொசாடிக் ஹொசைனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கியது தொடர்பில் பங்களாதேஷ் தேர்வுக் குழுத் தலைவர் மின்ஹாஜுல் ஆப்டீன் கருத்து வெளியிடுகையில்,

”மொசாடிக் ஹொசைன் மிகவும் திறமையான வீரர். ஆனால் அண்மைக்காலமாக அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது. இதற்கு அவருடைய உபாதையும் முக்கிய காரணம். எனினும், பங்களாதேஷ் அணியில் சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற மெஹெதி ஹசன் மிராஸ் சிறியளவில் உபாதையொன்றுக்கு முகங்கொடுத்து இருப்பதால், மெஹெதியைப் போன்று பந்துவீச்சு, துடுப்பாட்டம் என திறமைகளை வெளிப்படுத்துகின்ற ஆற்றலைக் கொண்ட மொசாடிக் ஹொசைனுக்கும் வாய்ப்பினை வழங்க நாங்கள் தீர்மானித்தோம் என தெரிவித்தார்.

22 வயதான மொசாடிக் ஹொசைன் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். இதில் பங்களாதேஷ் அணிக்காக 2 டெஸ்ட், 18 ஒரு நாள், 6 டி20 போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் நிறைவடைந்த சுதந்திர கிண்ண டி20  தொடரில் அவ்வணிக்காக விளையாடி பிரகாசிக்கத் தவறிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸ், விக்கெட் காப்பாளர் நூருல் ஹசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அஹமட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அதே தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய அபூ ஜயீட் மற்றும் ஆரிபுல் ஹக் ஆகியோர் டி20 அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

இதேவேளை, ஐ.சி.சியின் டி20 அணிகளின் தரப்படுத்தலில் 10ஆவது இடத்தில் உள்ள பங்களாதேஷ் அணிக்கு 8ஆவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணி இத்தொடரில் பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பங்களாதேஷ் குழாம்: சகிப் அல் ஹஸன் (அணித்தலைவர்), மஹ்முதுல்லாஹ் ரியாத் (துணைத் தலைவர்), தமிம் இக்பால், சௌம்ய சர்க்கார், லிட்டன் தாஸ், முஷ்பிக்கூர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), சபீர் ரஹ்மான், மொசாடிக் ஹொசைன், ஆரிபுல் ஹக், மெஹெதி ஹஸன் மிராஸ், நஸ்முல் இஸ்லம், முஸ்தபிசூர் ரஹ்மான், அபு ஹைதர், ருபெல் ஹொஸைன், அபு ஜயீட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<