கெமர் ரோச் உலக சாதனை; 43 ஓட்டங்களுடன் சுருண்ட பங்களாதேஷ்

1661
AFP

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்குமிடையில் தற்போது நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணியினர் தமது முதல் இன்னிங்சில் 43 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருக்கின்றது.

பங்களாதேஷ் அணியின் இந்த 43 ஓட்டங்கள் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அவர்கள் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக் கொண்ட மிகக் குறைவான மொத்த ஓட்டங்களாகும்.

பந்தை சேதப்படுத்தும் வீரருக்கு தண்டனை அதிகரிப்பு: ஐ.சி.சி. ஒப்புதல்

இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்ததே அவர்களது டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக் கொண்ட மிகக் குறைவான ஓட்டங்களாக இருந்தது. எனவே, 11 வருடங்களின் பின்னர் பங்களாதேஷ் அணியினர் மீண்டும் மோசமான பதிவு ஒன்றைக் காட்டியிருக்கின்றனர்.

பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள், ஒரு T20 போட்டி ஆகியவை கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் போட்டிகள் முடிவடைந்த பின்னர் இன்னும் இரண்டு T20 போட்டிகளில் மீண்டும் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாட பங்களாதேஷ் அணி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றது.

பங்களாதேஷின் இந்த சுற்றுப் பயணங்களின் முதற்கட்டமாக மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. அன்டிகுவாவில் தொடங்கிய இந்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் ஒன்றில் 43 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவரான ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பங்களாதேஷ் அணிக்கு கொடுத்திருந்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கெமர் ரோச்சின் பந்துவீச்சில் தமிம் இக்பாலின் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கெமர் ரோச்சின் பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் முக்கிய வீரர்களான மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், அணித்தலைவர் சகீப் அல்-ஹசன், மஹமதுல்லா ஆகியோர் அடுத்தடுத்து மிக சொற்ப ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தனர். ரோச்சின் அபாரத்தினால் ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 18 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது.

ஓய்வை அறிவித்தார் டேவிட் ரிச்சட்சன்

பங்களாதேஷ் அணியின் எஞ்சிய ஐந்து விக்கெட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேசன் ஹோல்டர், மிகுவேல் கம்மின்ஸ் ஆகியோர் கைப்பற்ற அவ்வணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் 43 ஓட்டங்களுடன் பறிகொடுத்தது.

பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் ஒன்றில் மொத்தமாக பெற்றுக் கொண்ட இந்த 43 ஓட்டங்கள், டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஆசிய அணியொன்று இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக் கொண்ட இரண்டாவது குறைந்த மொத்த ஓட்டங்களாகும். டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் மிகக் குறைவான மொத்த ஓட்டங்களை பெற்ற அணியாக இந்தியா இருக்கின்றது. இந்திய அணி 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக் கொண்ட 42 ஓட்டங்களே ஆசிய அணியொன்று டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக் கொண்ட குறைவான மொத்த ஓட்டங்களாக காணப்படுகின்றது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக லிடன் தாஸ் 25 ஓட்டங்களைப் பெற்றிருக்க ஏனைய அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் பிரம்மாண்டமான முறையில் செயற்பட்ட மேற்கிந்திய தீவுகளின் கேமர் ரோச், வெறும் 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் மிகுவேல் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவரான ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை, இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஐந்து விக்கெட்டுக்களையும் 12 பந்துகளுக்குள் சாய்த்த கெமர் ரோச், டெஸ்ட் போட்டிகளில் குறைவான பந்துகள் இடைவெளிக்குள் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணியின்  சகலதுறை வீரரான ஜேக் கல்லிஸின் உலக சாதனையையும் சமன் செய்தார். கல்லிஸினால் இந்த உலக சாதனை 2002 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராகவே நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமது வேகப்பந்து வீச்சாளர்களின் அதிரடியினால் இலங்கை அணியுடன் அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலைப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்த சிறந்த அடைவாக பங்களாதேஷை 43 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியிருக்கின்றது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<