மொசாடிக், சர்கார் அபாரம்: வரலாறு படைத்த பங்களாதேஷ் அணி

161
AFP

மேற்கிந்திய தீவுகள் – பங்களாதேஷ் அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சௌமிய சர்கார் மற்றும் மொசாடிக் ஹொசைன் ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகியது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் பங்களாதேஷ் அணி வென்ற முதலாவது முத்தரப்பு ஒருநாள் தொடர் வெற்றி இதுவென்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>அபூ ஜெயிட்டின் அபார பந்துவீச்சில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, நேற்று (17) டப்ளினில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைச் சதம் அடித்து அசத்தினர். மேற்கிந்திய தீவுகள் 20.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 131 ஓட்டங்களை எடுத்த நிலையில், மழை காரணமாக போட்டி தடைப்பட்டது. இதன்போது ஷாய் ஹோப் 68 ஓட்டங்களுடனும், சுனில் அம்ப்ரிஸ் 59 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மழை நின்றதை அடுத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போட்டி 24 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி, மீண்டும் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 24 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்தது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஷாய் ஹோப் 74 ஓட்டங்களையும், சுனில் அம்ப்ரிஸ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும், டேரன் பிராவோ 3 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மெஹின்தி ஹசன் மீராஸ் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, டக்வத் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 24 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் தமீம் இக்பால், சௌமிய சர்கார் இருவரும் சிறப்பாக விளையாடினர்.

தமீம் இக்பால் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சபிர் ரஹ்மான் ஓட்டமின்றி வெளியேறினார். எனினும், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சௌமிய சர்கார் அரைச் சதமடித்து அசத்தினார். அவர் 41 பந்துகளில் 66 ஓட்டங்களை எடுத்து ரய்மன் ரீபரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மொசாடிக் ஹொசைனின் அரைச் சதம் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லாஹ் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

கடந்த 10 வருடங்களில் 6 முத்தரப்பு ஒருநாள் தொடர்களில் பங்களாதேஷ் அணி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில பெற்றுக்கொண்ட முதலாவது முத்தரப்பு ஒருநாள் சம்பியன் பட்டம் இதுவாகும்.

இதன்போது பங்களாதேஷ் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சௌமிய சர்கார் 66 ஓட்டங்களையும், மொசாடிக் ஹொசைன் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஷெனோன் கேப்ரியல் மற்றும் ரெய்மன் ரீபர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பெபியன் அலென் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

>>2019 உலகக் கிண்ணத்தில் கால்பதிக்கும் இளம் நட்சத்திரங்கள்

அத்துடன், அதிரடியாக விளையாடிய மொசாடிக் ஹொசைன், ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காகப் பெற்றுக்கொண்ட மூன்றாவது அதிவேக அரைச் சதத்தைப் பதிவுசெய்ததுடன், 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை எடுத்து போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேநேரம், தொடரின் நாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷாய் ஹோப் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, முத்தரப்பு ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை மூன்று தடவைகள் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்ற பங்களாதேஷ் அணி, எதிர்வரும் ஜுன் மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ள உலகக் கிண்ண முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியையும், இளம் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் இறுதிப் போட்டிவரை முன்னேறிய மேற்கிந்திய தீவுகள் அணி, எதிர்வரும் மே 31 ஆம் திகதி பாகிஸ்தான் அணியையும் எதிர்த்தாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணி – 152/1 (24) – ஷாய் ஹோப் 74, சுனில் அம்ப்ரிஸ் 69*, மெஹென்தி ஹஸன் 1/22

பங்களாதேஷ் அணி – 213/5 (22.5) – சௌமிய சர்கார் 66, மொசாடிக் ஹொசைன் 52*, முஸ்பிகுர் ரஹீம் 36, ரய்மன் ரீபர் 2/23, ஷெனோன் கேப்ரியல் 2/30, பெபியன் அலென் 1/37

முடிவு – பங்களாதேஷ் அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<