பங்களாதேஷ் A அணியிடம் போராடித் தோற்ற இலங்கை A அணி

624

பங்களாதேஷ் A அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் திசர பெரேரா தலைமையிலான இலங்கை A அணி வெறும் 2 ஓட்டங்களால் போராடி தோல்வியை சந்தித்தது.

இதன்போது 281 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணிக்கு மத்திய வரிசையில் வந்த தசுன் ஷானக்க அதிரடியாக 78 ஓட்டங்களை விளாசியதோடு கடைசி வரிசை வீரர்கள் வெற்றிக்காக இறுதிப் பந்து வரை போராடினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் A அணி 1-0 என முன்னிலை பெற்றது.

>> சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் தடை

பங்களாதேஷின் சியல்ஹெட்டில் இன்று (17) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பங்களாதேஷ் A அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மிசானுர் ரஹ்மான் நிதானமாக ஆடி அரைச்சதம் ஒன்றை எட்டினார். 107 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 67 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் சர்வதேச அனுபவம் பெற்ற சௌம்யா சர்கரை 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ய சுழல் வீரர் ஷெஹான் ஜயசூரியவால் முடிந்தது.

எனினும் மத்தியவரிசை வீரர்களான பாஸ்ல் மஹ்மூத் (59), அணித்தலைவர் முஹமது மிதுன் (44) மற்றும் ஆரிபுல் ஹக் (47) சிறப்பாக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷ் அணியின் ஓட்டங்களை அதிகரிக்கச் செய்தனர்.

இதன்போது 4 ஆவது விக்கெட்டுக்கு மஹ்மூத் மற்றும் மிதுன் இருவரும் 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அந்த அணிக்கு பலம் சேர்த்தனர்.

இதன் மூலம் பங்களாதேஷ் A அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 280 ஓட்டங்களை பெற்றது. இலங்கை பந்துவீச்சாளர்களில் ஐவர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியபோதும் எந்த பந்துவீச்சாளரும் பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரிதாக நெருக்கடி கொடுக்கவில்லை.

இந்நிலையில் 281 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களான உபுல் தரங்க (10), சதீர சமரவிக்ரம (3) சொற்ப ஓட்டங்களுக்கே வெளியேறினர்.

அடுத்து வந்த லஹிரு திரிமான்ன 29 ஓட்டங்களையும், ஷெஹான் ஜயசூரிய 20 ஓட்டங்களையும் பெற்றபோதும் அவர்களால் அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது.

இதன்போது மத்தியவரிசையில் அஷான் பிரியஞ்சன் மற்றும் தசுன் ஷானக்க சிறப்பாக துடுப்பொடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். 59 பந்துகளுக்கு முகம்கொடுத்த பிரியஞ்சன் 42 ஓட்டங்களை பெற்றதோடு தசுன் ஷானக்க 78 ஓட்டங்களை பெறுவதற்கு 78 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார்.

இதன் மூலம் இலங்கை A அணி வெற்றியை நெருங்கியதோடு அடுத்து வந்த அணித்தலைவர் திசர பெரேரா 20 பந்துகளில் 22 ஓட்டங்களையும் இளம் வீரர் ஷம்மு அஷான் 19 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்று நம்பிக்கை தந்தனர். இதன்போது வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க 12 பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசி 21 ஓட்டங்களை பெற்றபோது இலங்கை அணிக்கு தேவையான ஓட்ட வேகம் கிடைத்தது.

>> டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்னவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம்

20 வயதுடைய வலதுகை சுழல் பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஒருமுனையில் 11 ஓட்டங்களுடன் பொறுப்புடன் துப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையில் மலிந்த புஷ்பகுமார முதல் பந்துக்கே ஆட்டமிழந்து இலங்கை அணியின் எதிர்பார்ப்பை தகர்த்தார்.

பங்களாதேஷ் A அணிக்காக விளையாடும் 38 வயதுடைய மூத்த வீரர் காலித் அஹமது தனது அனுபவ பந்துவீச்சு மூலம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சொரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சில்ஹட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ளது. தொடரை தக்கவைத்துக் கொள்ள இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A அணி முன்னதாக பங்களாதேஷுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் A – 280/7 (50) – மிசானுர் ரஹ்மான் 67, பாஸ்ல் மஹ்மூத் 59, ஆரிபுல் ஹக் 47, முஹமது மிதுன் 44, தசுன் ஷானக்க 1/24, ஷெஹான் ஜயசூரிய 1/39

இலங்கை A – 278 (50) – தசுன் ஷானக்க 78, அஷான் பிரியஞ்சன் 42, லஹிரு திரிமான்ன 29, காலித் அஹமது 4/72, சொரிபுல் இஸ்லாம் 3/54, ஆரிபுல் ஹக் 2/42

முடிவு – பங்களாதேஷ் A அணி 2 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<