கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவு ஆகியன இணைந்து நடாத்துகின்ற 33 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியது.

கிராமப்புறங்களில் கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை தேசிய மட்டத்தில் மிளிரச் செய்யும் நோக்கில் முதற் தடவையாக கொழும்பை மையப்படுத்தி கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமாகிய இம்முறை விளையாட்டு விழாவின் குழு நிலைப் போட்டிகள் அனைத்தும் நேற்று முன்தினம் (09) நிறைவுக்கு வந்தன.

இதனையடுத்து நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து 700 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6300 பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கின்ற மெய்வல்லுனர் போட்டிகள் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளன.

கொழும்பு மரதனில் கென்ய வீரர்களுக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்

“கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன்” அமைப்பு ஏற்பாடு செய்த 17ஆவது சர்வதேச கொழும்பு மரதன்…

அத்துடன், கடந்த காலங்களில் 15,17,19 மற்றும் 21 ஆகிய வயதுப் பிரிவுகளில் மெய்வல்லுனர் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. எனினும் இவ்வருடத்திலிருந்து 12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட 5 புதிய வயதுப் பிரிவுகளாக போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளதால் புதிய சாதனைகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. எனினும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்ற வீரர்களின் திறமைகள் பதிவுசெய்யப்பட்டு அவை அடுத்த வருடம் முறியடிக்கப்பட்டால் புதிய போட்டி சாதனைகளாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் போட்டிகள் ஒத்திவைப்பு

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தடங்கல் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை நடைபெறவிருந்த அனைத்து மைதான நிகழ்ச்சிகளையும் பிற்போடுவதற்கும், சுவட்டு மைதான நிகழ்கவுகளை மாத்திரம் நடத்துவதற்கும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி இன்று நடைபெறவிருந்த 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் ஆகிய போட்டிகளை நாளைய தினம் (12) நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு ஏமாற்றம்

இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின், மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளான இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பாடசாலை மாணவர்களால் எந்தவொரு வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இதில் கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலை விளையாட்டு விழாவில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றி வெண்கலப் பதக்கம் வென்ற திருகோணமலை மாவட்டம், கிண்ணியா முள்ளிபொத்தானை மத்திய கல்லூரியின் மாணவனான எச்.எம் ரிஹான் இம்முறை போட்டித் தொடரில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவினார்.

தேசிய மெய்வல்லுனர் வீரர் ருவன் பிரதீப்புக்கு 4 வருட போட்டித்தடை

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைக்கால போட்டித் தடைக்கு…

இன்று மாலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட ரிஹான், 50.57 மீற்றர் தூரம் எறிந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், போட்டியின் பிறகு ரிஹானின் உடற்பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றுகின்ற ஏ.சி.ஏ நஷாத் எமது இணையத்துக்கு கருத்து வெளியிடுகையில், ”இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் எமது கல்லூரியிலிருந்து 5 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதிலும் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பதக்கமொன்றை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஹானுக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது. தொடர்ந்து பெய்த மழையால் மைதானத்தில் காணப்பட்ட ஈரலிப்பு தன்மை அவருக்கு சிறந்த தூரத்தைப் பதிவு செய்ய முடியாமல் போனது” என்றார்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கு அதிக கௌரவம்

கடும் மழைக்கும் மத்தியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாடசாலை மாணவர்கள் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.

இதில் 12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் திக்வெல்ல விஜித மத்திய கல்லூரியைச் சேர்ந்த பெஹசர தேனுஜ, 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் பாணந்துறை குட் செபர்ட் கன்னியர் மடத்தைச் சேர்ந்த சிஹாரா சந்தமினி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலில் எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த சத்சரா சந்தீபனி, 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பாணந்துறை லீட்ஸ் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த பூர்ணிமா ஜயமாலி குணரத்ன, 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த சதீபா ஹெண்டர்சன் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வலள ஏ. ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த எஸ். ராஜபக்ஷ ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100, 400 மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் பந்தயங்களுக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் இன்று நடைபெற்றதுடன், இதன் இறுதிப் போட்டிகள் அனைத்தும் நாளை (12) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.