இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட்டிற்கு இந்திய அணியில் புதிய வீரர்

255
Image courtesy - BCCI

சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலை இணைத்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அவ்வணியின் சகலதுறை வீரரான ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜாவுக்கு தடை விதித்தது ஐ.சி.சி

இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவின்திர ஜடேஜாவுக்கு சர்வதேச..

இலங்கை அணியுடன் கொழும்பில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் 2ஆவது இன்னிங்ஸிற்காக இலங்கை துடுப்பெடுத்தாடிய போது போட்டியின் 58 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் தான் வீசிய பந்துக்கு களத்தடுப்பில் ஈடுபட்ட ஜடேஜா, தனது கோட்டுக்குள் இருந்து வெளியேறாமல் இருந்த இலங்கை துடுப்பாட்ட வீரரின் திசையை நோக்கி பந்தை திரும்ப வீசினார். அந்தப் பந்து மலிந்த புஷ்பகுமாரவைத் தாக்குவது நூலிழையில் தப்பியது.

ஜடேஜா பந்தை ஆபத்தான முறையில் எறிந்ததாக கள நடுவர்கள் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து .சி.சி போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சட்சன் முன்வைத்த முறைப்பாட்டின்படி தன் மீதான குற்றச்சாட்டை ஜடேஜா ஏற்றதை அடுத்து அவருக்கு ஒரு போட்டித்தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீத அபாரதமும் விதிக்கப்பட்டது.  

இதனால், கடந்த 2 ஆண்டுகளில் 6 தரமதிப்பிழப்பு புள்ளிகளை பெற்ற அவருக்கு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே ஜடேஜாவுக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலை 15 பேர் கொண்ட இந்திய அணிக்குள் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இலங்கை அணியுடனான அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த சைனமன் பந்துவீச்சாளரான குல்திப் யாதவ் அல்லது அக்சார் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

தென்னாபிரிக்காவில் நிறைவடைந்த தென்னாபிரிக்க ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடனான முக்கோண ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய 23 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேல், ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் தெரிவுக்குழுவின் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.  இதன்போது ஓப் ஸ்பின் பந்துவீச்சாளரான ஜயந்த் யாதவ் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோரில் ஒருவரை ஜடேஜாவுக்குப் பதிலாக அணிக்குள் இணைத்துக்கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், அணியில் குல்தீப் யாதவ் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதால், அணி முகாமைத்துவத்தின் வேண்டுகோளின்படி குறித்த வீரர்களில் ஒருவரை மாத்திரம் அணியுடன் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பந்து வீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் ஜடேஜாவைப் போன்று விளையாடுகின்ற அக்சார் பட்டேலை இந்திய அணியுடன் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த முத்தரப்பு ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அக்சாரை இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் இணைத்துக்கொள்ளவே இந்திய முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்கும் என அதிகமாக நம்பப்படுகின்றது.

இதுவரை 23 உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள அக்சார், ஒரு சதம் மற்றும் 10 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 79 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி 48.45 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். அத்துடன், இந்திய அணிக்காக 30 ஒருநாள் போட்டிகளில் 35 விக்கெட்டுக்களையும் (30.20 சராசரி) 7 T20 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

இவ்வாறான சிறந்த பதிவுகளைக் கொண்டுள்ள அவர் குறித்த டெஸ்ட் போட்டியின்மூலம், இந்திய டெஸ்ட் அணிக்காக முதற்தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.