Avishka Gunwardena and Roy Dias

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர்களான அவிஷ்க குணவர்தன மற்றும் ரோய் டயஸ் ஆகியோர் இலங்கை இளைய அணிகளின் பயிற்சி பொறுப்பை ஏற்றுள்ளார்கள்.

இதன் அடிப்படையில் இலங்கை “ஏ” அணியின் பயிற்சிவிப்பாளராக அவிஷ்க குணவர்தனவும், இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியின்  யிற்சிவிப்பாளராக ரோய் டயஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை “ஏ” மற்றும் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது. அத்தோடு இங்கிலாந்து தொடரின் பின் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி தென் ஆபிரிக்காவிற்கும் சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது.

அவிஷ்க குணவர்தன இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியின் உதவி பயிற்சியாளராக செயற்பட்டு வந்திருந்ததோடு இலங்கை கிரிக்கட் பயிற்சி குழுவின் ஒரு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்.

இன்னும் 8 தினங்களில் தனது 39ஆவது வயதை எட்டும் அவிஷ்க குணவர்த்தன இலங்கை அணிக்காக 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 6 டெஸ்ட் மற்றும் 61 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 2000ஆம் ஆண்டு ஐசிசி “நொக் அவுட்” போட்டி ஒன்றின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சதம் பெற்றிருந்தார்.

ரோய் டயஸ் இலங்கை அணிக்காக 1979ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 20 டெஸ்ட் மற்றும் 58 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஓமான் மற்றும் நேபால் கிரிக்கட் அணிகளுக்கு பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார். அதற்கு முன் 1998ஆம் ஆண்டு ரோய் டயஸ் இலங்கை அணியின் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தார்.

இலங்கை “ஏ” அணி ஜூலை மாதம் 03ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் “ஏ” அணியோடு 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பின் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் இலங்கை “ஏ” அணி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து “ஏ” அணிகளோடு முத்தரப்பு 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடவுள்ளது.

அத்தோடு இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி ஜூலை மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்டோர் அணியோடு 2 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன் பின் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்டோர் அணியோடு விளையாடவுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்