தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணித் தலைவராக அவிஷ்க பெர்ணான்டோ

2027

ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள, 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணித் தலைவராக புனித செபஸ்தியன் கல்லூரியை சேர்ந்த துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தம்புள்ளையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் சர்வதேச போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ அறிமுகமானார். அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான போட்டியில் இலங்கை A அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். அத்துடன் இவர் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி  இரண்டு சதங்களை பெற்றிருந்ததோடு அணியை வெற்றி பாதைக்கு வழிநடத்தியதன் காரணமாக இலங்கை தேசிய அணிக்கு உள்ளவாங்க காரணமாக அமைந்தார்.

16 பேர் கொண்ட குறித்த அணியானது ஜனவரி மாதம் எட்டாம் திகதி தென்னாபிரிக்கா நோக்கி பயணமாக உள்ளது. சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி, தென்னாபிரிக்கா 19 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் ஜிம்பாப்வே 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுடனான முத்தரப்பு போட்டியொன்று நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து மேலும் சில ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேக்கு செல்லவிருக்கிறது.

அண்மையில் இலங்கையில் முடிவுற்ற இளையோர் ஆசிய கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடாத்தவுள்ள 2018ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ணப் போட்டிகளுக்கு, தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்துக்காக உள்வாங்கப்பட்டிருக்கும் அணித் தலைவர் உள்ளடங்கலாக 5 வீரர்கள் வயதின் அடிப்படையில் குறித்த சர்வதேச போட்டிகளுக்கு உள்வாங்கப்படவில்லை.

அண்மையில் முடிவுற்ற 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணப் போட்டிகளில், வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப்போட்டியில் பங்குபற்றிய 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியை தலைமை தாங்கிய ரிச்மன்ட் கல்லூரியை சேர்ந்த கமிந்து மென்டிஸ் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இளையோர் ஆசிய கிண்ண இறுதி போட்டியில் பங்குபற்றிய எஞ்சிய பத்து வீரர்களும் இந்த குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

அதிரடியாக துடுப்பாடும் புனித செபஸ்தியன் கல்லூரி அணித் தலைவர் மற்றும் பாணதுறை விளையாட்டு கழகத்தை சேர்ந்த சகல துறை ஆட்டக்காரர்  மிஷேன் சில்வா, அவருடன் இசிபதன கல்லூரி மற்றும் களுத்துறை PCC அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் இலங்கை பிரிமியர் லீக் B பிரிவு போட்டிகளில், சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் விளாசி மொத்தமாக 382 ஓட்டங்களை குவித்து மிஷேன் சில்வா இரண்டாவது இடத்தில் உள்ளார். அதே நேரம் நான்கு போட்டிகளில் பங்குபற்றி 337 ஓட்டங்களுடன் பத்தும் நிஸ்ஸங்க முதலிடத்தில் உள்ளார்.

மீண்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சானக : பாணதுறை அணியை மீட்ட சில்வா

ஆனந்த கல்லூரியை சேர்ந்த சம்மு அஷான் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் முன்னணியில் உள்ள கிரிக்கெட் வீரராவார். கடந்த வாரம், சிங்கள விளையாட்டு கழகத்துடன் இணைந்து கொண்டதன் மூலம் இலங்கை முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார். அத்துடன், புனித பேதுரு கல்லூரியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சகல துறை கிரிக்கெட் வீரர் மனேல்கர் டி சில்வா 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணிக்காக முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   

இலங்கை குழாம் மற்றும் போட்டி அட்டவணை குறித்த அறிவித்தல்கள் இதுவரை இலங்கை கிரிக்கெட் சபையினால் உத்தியோகபுர்வமாக ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை.

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாம்

இல பெயர் பாடசாலை கழகம்
1 அவிஷ்க பெர்னாண்டோ (தலைவர்) புனித செபஸ்தியன் கல்லூரி கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
2 கமிந்து மென்டிஸ் (உபதலைவர்) ரிச்மன்ட் கல்லூரி
3 சம்மு அஷான் ஆனந்த கல்லூரி சிங்கள விளையாட்டு கழகம்
அஷேன் பண்டார புனித அலோசியஸ் கல்லூரி
5 ஜெஹான் டேனியல் புனித ஜோசப் கல்லூரி
6 மிஷேன் சில்வா புனித செபஸ்தியன் கல்லூரி பாணதுறை விளையாட்டு கழகம்
7 மனேல்கர் டி சில்வா புனித பேதுரு கல்லூரி
8 பத்தும் நிஸ்ஸங்க இசிபதன கல்லூரி களுத்துறை PCC
9 விஷ்வ சத்துரங்க பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி காலி கிரிக்கெட் கழகம்
10 ரேவன்  கெல்லி புனித ஜோசப் கல்லூரி
11 ஹசித்த போயகொட புனித திரித்துவ கல்லூரி
12 கிரிஷான் சஞ்சுல டி மெசனாட் கல்லூரி
13 பிரவீன் ஜெயவிக்ரம புனித செபஸ்தியன் கல்லூரி
1 ஹரீன் புத்தில புனித அலோசியஸ் கல்லூரி
15 திசறு ரஷ்மிக்க புனித திரித்துவ கல்லூரி
16 நிபுன் ரன்ஷிக்க P. De S குலரத்ன கல்லூரி