இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக ஜொலிக்கவுள்ள அவிஷ்க பெர்னாண்டோ

5183

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி பெற்ற நிலையில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியில் 21 வயதுடைய அவிஷ்க பெர்னாண்டோவின் அபார துடுப்பாட்டம் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இதுவரை ஏழு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியிலும் களமிறங்கிய பெர்னாண்டோ இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் விளாசி 39 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி நெருக்கடியில் இருந்தபோது எந்த பதற்றமும் இன்றி அவர் ஓட்டம் குவித்தார்.

இங்கிலாந்தை சோதித்து பல சாதனைகள் படைத்த இலங்கை

பழுப்பு நிறம் கொண்ட ஆடுகளத்தில் இலங்கை அணி 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது பொதுவாக ஆரம்ப வீரராக செயற்படும் பெர்னாண்டோ களமிறங்கி அந்த நெருக்கடியில் இருந்து மீட்டார். அவரது தைரியமான மற்றும் நேர்த்தியான துடுப்பாட்டம் அப்போது இலங்கை அணிக்கு தேவையாக இருந்தது.

இந்த உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் ஜொப்ரா ஆர்ச்சர் புதிய பந்தில் வேகமாக, இலக்கிற்கு பந்து வீசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் முதல் 14 பந்துகளையும் அவதானத்துடன் ஆடிய பெர்னாண்டோ போட்டியில் முதல் பௌண்டரியை பெற்றார். ஆர்ச்சரின் பந்தை கவர் திசையில் அழகாக தட்டிவிட்டார்.   

வலதுகை துடுப்பாட்ட வீரர்களை திக்குமுக்காடச் செய்யும் ஆர்ச்சரின் இரண்டு பந்துகளில் முதல் பந்தை பைன் லெக் திசையில் திருப்பினார். எனினும் அந்த இன்னிங்ஸில் சிறந்த துடுப்பாட்டம் அடுத்த பந்தில் பதிவானது. அந்தப் பந்தை நேர்த்தியாக கவர் திசையில் செலுத்த போட்டியின் 6ஆவது ஓவரில் 14 ஓட்டங்கள் பெறப்பட்டது.   

வேகமாகக் துடுப்பாடக்கூடியவராக இருக்கும் பெர்னாண்டொ தனது கால்களை பந்தை நோக்கி அதிகம் நகர்த்தாத போதும் பந்து வரும் திசையை முன்கூட்டியே அவதானிக்கக் கூடியவராக உள்ளார். துடுப்பை வேகமாக சுழற்றும் அவரின் கைகளும் அதற்கு ஏற்றாற்போல் செயற்படுகின்றன.

குட் லெந்த் பந்துகளுக்கு அவர் கவர் மற்றும் நேர் திசையில் பந்தை செலுத்துவது பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். அப்படியாக ஆர்ச்சிரின் பந்துக்கு கண்களை கவரும் வகையில் அவர் அடித்தபோது அந்தப் பந்து அரங்கிற்கு வெளியே சென்று காணாமல்போனது.   

அவர் தேவையின்றி தேர்ட் மேன் (third man) திசைக்கு பந்தை செலுத்தி பிடிகொடுக்காமல் இருந்திருந்தால் இலங்கை அணியின் ஓட்டங்களில் மேலும் தாக்கம் செலுத்தி இருந்திருப்பார். பெர்னாண்டே முகம்கொடுத்த 39 பந்துகளில் அவர் 14 பந்துகளுக்கு அடித்தாடியதோடு அவர் ஆட்டமிழந்த பந்து மாத்திரமே அவர் இழைத்த தவறாகும் என்பது Cricviz இணையதளத்தின் கணிப்பாகும். அடித்தாடும்போது ஏற்படும் தவறுகளில் அது 7 வீதமாகும். ஆனால் அனைத்து ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் அவ்வாறான தவறு 22 வீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கார்லோஸ் ப்ராத்வைட்டின் துடுப்பாட்டத்தை பாராட்டிய ஜேசன் ஹோல்டர்

“வலைப் பயிற்சியில் அவர் எப்போதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடுவார். அவருக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்க காத்திருந்தோம். அவர் வந்து இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்ததையிட்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன போட்டிக்குப் பின்னர் குறிப்பிட்டார்.   

“அவர் பயமின்றியும் சாதகமாகவும் துடுப்பெடுத்தாடினார். எதிர்காலத்தில் பெரும் ஆட்டங்களை வெளிப்படுத்துவதற்கு இது அவருக்கு ஆரம்பமாக இருக்கும்” என்றும் திமுத் குறிப்பிட்டார்.

பெர்னாண்டோ விளையாடிய ஏழு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆறு போட்டிகள் அவர் இந்த ஆண்டு விளையாடியது என்றபோதும், அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடியது 2016 ஆம் ஆண்டிலாகும். அப்போது அவர் 18 வயது பாடசாலை மாணவனாவார். 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இரண்டு சதங்களுடன் 285 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே அவர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவின் தலைமையிலான தேர்வுக் குழுவினரால் இலங்கை அணிக்கு முதல் முறை அழைக்கப்பட்ட பெர்னாண்டோ மிட்சல் ஸ்டார்க்கின் பந்துக்கு டக் அவுட் ஆனார்.

மறக்க முடியாத அந்த ஆட்டத்திற்கு பின்னர் பெர்னாண்டோ காணாமல் போனார். புனித ஜோசப் கல்லூரிக்கு எதிராக தனது கடைசி பருவத்தை விளையாடிய பின்னர் தனது கோல்ட்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடுபவராக இருக்கவில்லை. எனினும் கடந்த பருவத்தில் அபாரமாக விளையாடிய அவர் 576 ஓட்டங்களை பெற்றதோடு ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமும் குவித்தார். இதன் மூலம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற அயர்லாந்து A அணிக்கு எதிராக இலங்கை A அணிக்கு அழைக்கப்பட்டார்.

ப்ராத்வைட் சதமடித்தும் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மே.தீவுகள்

அயர்லாந்துக்கு எதிராக அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. ஐந்து இன்னிங்சுகளில் அவர் 3 சதங்களுடன் 523 ஓட்டங்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார். 4 இன்னிங்சுகளில் அவர் 71 ஓட்டங்களையே பெற்றார். எவ்வாறாயினும் அவர் மீது தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்தனர். உலகக் கிண்ணத்திற்கு முன்னர் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் ஒருநாள் போட்டிகளில் தனது அதிகூடிய ஓட்டங்களாக 74 ஓட்டங்களை குவித்தார். எனினும் உலகக் கிண்ண ஆரம்பப் போட்டிகளில் அவர் இருக்கையில் வைக்கப்பட்டார். லஹிரு திரிமான்ன சோபிக்காத நிலையிலேயே பெர்னாண்டோவுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

பெர்னாண்டோ சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிக்காட்ட முயன்றபோது அவரது சக வகுப்பறை நண்பர்கள் பலரும் பாடசாலையின் முதல் பதினொருவர் அணியில் விளையாட ஆரம்பித்திருந்தார்கள். இத்தனை திறமை கொண்ட வீரர்களை பாதுகாப்பது அவசியமாக உள்ளது. இலங்கை எதிர்கால கிரிக்கெட்டுக்கு பெர்னாண்டோ நல்லதொரு முதலீடாக உள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<