இசுரு உதான மற்றும் அவிஷ்கவின் உபாதை குறித்து திமுத் கருணாரத்ன

846

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று (24) நடைபெற்ற உலகக் கிண்ண பயிற்சிப்போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் பூரண குணமடைந்துள்ளனர் என இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய உலகக் கிண்ண தொடருக்கான பயிற்சிப் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் உபாதைக்கு முகங்கொடுத்தனர். இதனால், போட்டியின் பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

திமுத் கருணாரத்னவின் போராட்டம் வீண்; பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று (24) நடைபெற்ற உலகக்…….

இந்நிலையில் துடுப்பெடுத்தாடுவதற்கும் அழைக்கப்படாததால், இவர்களின் உபாதை குறித்து கேள்விகள் எழுந்திருந்தன. எனினும்,  அணியின் தோல்விக்கு பின்னர் கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன, “இருவரும் நலமாக இருக்கின்றனர் (இசுரு உதான மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ). அவர்கள் அடுத்த பயிற்சிப் போட்டியில் விளையாடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது, இலங்கை அணியின் 18 ஆவது ஓவரை இசுரு உதான வீசினார். இந்த ஓவரில் பெப் டு ப்ளெசிஸ் அடித்த பந்து ஒன்றை அவிஷ்க பெர்னாண்டோ தடுக்க முற்பட்ட போது, மைதானத்தில் சறுக்கி விழுந்தார். இதனால் அவரது காலில் உபாதை ஏற்பட்டதுடன், அவரால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஸ்டெச்சர் மூலமாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவிஷ்க பெர்னாண்டோ துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கவில்லை.

அவிஷ்க பெர்னாண்டோ இலங்கை அணியில் எதிர்பார்க்கப்படும் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அரைச்சதம் ஒன்றினை பெற்றிருந்த நிலையில், இவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருந்தது. எனினும், துரதிஷ்டவசமாக இவர் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தமை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியிருந்த போதும், தற்போது அவர் உபாதையிலிருந்து குணமடைந்துள்ளார்.

இதேவேளை, அணியின் அதிரடி சகலதுறை வீரரான இசுரு உதான நேற்றைய தினம் சிறப்பாக பந்து வீசியிருந்தார். இவர் 10 ஓவர்கள் பந்து வீசி 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார். இதன்போது, தனது இறுதி ஓவரை வீசிய இசுரு உதானவின் கையை இரண்டு தடவைகள் பந்து கடுமையாக தாக்கியிருந்தது. குறித்த ஓவரின் 4 ஆவது பந்தை ப்ரிட்டோரியர்ஸ் வேகமாக பந்து வீச்சாளருக்கு நேராக அடிக்க, அதனை இசுரு உதான தடுக்க முற்பட்டார். எனினும், அவரது இடது கை விரல்களை பந்து கடுமையாக தாக்கியது.

உலகக் கிண்ண பயிற்சியின் போது மோர்கன், விஜய் சங்கருக்கு காயம்

உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளின் முதல்…..

இதன் பின்னர், குறித்த ஓவரின் இறுதிப்பந்தினை க்ரிஸ் மொரிஸ் வேகமாக அடிக்க, பந்து நேரடியாக இசுரு உதானவின் முகத்தை நோக்கிச் சென்றது. நொடிப்பொழுதில் பந்தினை தனது வலது கையால் இசுரு உதான தடுக்க, பந்து அவரது மணிக்கட்டு பகுதியில் கடுமையாக தாக்கியது. இதனால், ஓவரை முடித்துக்கொண்ட இசுரு உதான மைதானத்திலிருந்து சிகிச்சைக்காக வெளியேறினார்.

இதன் பின்னர் இலங்கை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கிய போதும், உபாதைக்குள்ளான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கவில்லை. பின்னர், இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 339 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க, இலங்கை அணி 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்திருந்தது.

அதேவேளை, உபாதைக்குள்ளான இருவரும் அடுத்து நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளதாக திமுத் கருணாரத்ன அறிவித்துள்ள நிலையில், இலங்கை அணி அடுத்த பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்ரும் 27 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<