ஷாமரியின் சதம் வீண்; அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு இலகு வெற்றி

253

மகளிர் உலகக் கிண்ணத்துக்கான குழு நிலைப் போட்டிகளில் இன்றைய தினம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி பிரிஸ்டல் கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி மெக் லேன்னிங் முதலில் இலங்கை மகளிர் அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.

அதற்கமைய முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி முதல் விக்கெட்டினை ஓட்டமெதுவும் பெறாத நிலையில் இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான நிப்புனி ஹன்சிக்கா, போட்டியின் முதல் ஓவரை வீசிய எலிஸ் பெர்ரியின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். அதனையடுத்து களமிறங்கிய சமரி அடபத்து, சமரி பொல்கம்பொலவுடன் இணைந்து ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். 33 பந்துகளை எதிர்கொண்ட சமரி பொல்கம்பொலவும் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் LBW முறையில் வெறும் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனக்கும் மாலிங்கவிற்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவும் இல்லை : அமைச்சர் தயாசிறி

அவரை தொடர்ந்து இலங்கை மகளிர் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளிகளில் இழந்தாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய சமரி அடபத்து 143 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட நிலையில், 22 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 178 ஓட்டங்களை விளாசினார். எனினும், ஷசிகலா சிறிவர்தன 24 ஓட்டங்களை பெற்று தனது பங்களிப்பை வழங்கிய போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.  

சிறப்பாகத் துடுப்பாடிய சமரி அடபத்து 124 ஓட்டங்களை பவுண்டரிகள் மூலமே பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய நிகோல் போல்டன், கிறிஸ்டன் பீம்ஸ் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனையடுத்து 258 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி தனது முதலாவது விக்கெட்டை 5 ஓட்டங்களில் இழந்தது. பின்னர் 2ஆவது விக்கெட்டுக்காக களம் நுழைந்த அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவி மெக் லேன்னிங் மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களைக் இணைப்பாட்டமாகப் பெற்றார். இரண்டாவது விக்கெட்டாக நிகோல் போல்டன் எட்டு பவுண்டரிகள் உள்ளடங்கலாக 60 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஷசிகலா சிறிவர்தனவின் பந்து வீச்சில் ஹன்சிகாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய எலிஸ் பெர்ரி அணித் தலைவி மெக் லேன்னிங் உடன் இணைந்து ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை பங்களிப்பு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதிரடியாக துடுப்பாடிய அவுஸ்திரலிய மகளிர் அணித் தலைவி மெக் லேன்னிங் 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 152 ஓட்டங்களை குவித்தார்.

இலங்கை அணியில் மீண்டும் களமிறங்கவுள்ள அமில அபொன்சோ

அவுஸ்திரலிய மகளிர் அணி 43.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 37 பந்துகள் எஞ்சிய நிலையில் இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.

அதேநேரம், இலங்கை மகளிர் அணி சார்பாக ஸ்ரீபாலி வீரக்கொடி மற்றும் சஷிகலா சிறிவர்தன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி பங்குபற்றும் அடுத்த போட்டி இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி டான்டனில் நடைபெறவுள்ளது.      

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 257/9 (50) – சமரி அத்தபத்து 178, சஷிகலா சிறிவர்தன 24, எஷானி லொக்குசுரியகே 13, நிகோல் போல்டன் 18/2, கிறிஸ்டன் பீம்ஸ் 49/2, எலிஸ் பெர்ரி 52/2

அவுஸ்திரேலியா – 262/2 (43.5) – மெக் லேன்னிங் 152, நிகோல் போல்டன் 60, எலிஸ் பெர்ரி 39, ஸ்ரீபாலி வீரக்கொடி 39/1, சஷிகலா சிறிவர்தன 62/1

முடிவு – அவுஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி.