பாகிஸ்தானை வைட்வொஷ் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

82
©AFP

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்டங்களால் இலகு வெற்றியினை பதிவு செய்துள்ளது.

மேலும், இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-0 என வைட்வொஷ் வெற்றியுடன் கைப்பற்றியிருக்கின்றது.

கட்டாரில் ஆரம்பமாகவுள்ள புதிய T10 தொடர்!

கட்டார் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள T10 தொடர் எதிர்வரும் மாதம் 7ம் திகதி முதல் 16ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது………

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறுகின்ற பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்  அணி இன்னிங்ஸ் வெற்றியினை பதிவு செய்து தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (29) அடிலைட் நகரில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் டிம் பெய்ன் முதலில் துடுப்பாடும்  சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காகப் பெற்றுக் கொண்டார். அதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை இலகுவான முறையில் எதிர்கொண்டு 3 விக்கெட்டுக்களை இழந்து 589 ஓட்டங்கள் பெற்றுக் காணப்பட்டிருந்த போது தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் முதல்முறையாக முச்சதம் கடந்த டேவிட் வோர்னர் ஒரு சிக்ஸர் மற்றும் 39 பௌண்டரிகள் அடங்கலாக 335 ஓட்டங்கள் பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸை பதிவு செய்தார். அதேநேரம், மார்னஸ் லபசக்னே தனது இரண்டாவது டெஸ்ட் சதத்துடன் 162 ஓட்டங்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் சஹீன் அப்ரிடி 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை காண்பித்தது. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக பாபர் அசாம் மற்றும் யாசிர் சாஹ் ஆகியோர் போராடினர். தொடர்ந்து, இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 94.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 302 ஓட்டங்களை குவித்தது.   

புதியவகை தலைக்கவசத்துடன் பந்துவீசிய நியூஸிலாந்து வீரர்

நியூஸிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ எல்லிஸ் உள்ளூர் டி20 தொடரின் போது பிரத்தியேகமான தலைக்கவசம் ……..

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் யாசிர் சாஹ் அவரது கன்னி டெஸ்ட் சதத்துடன் 113 ஓட்டங்கள் குவிக்க, பாபர் அசாம் 97 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

அதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் மிச்செல் ஸ்டார்க் 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்க்க, பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார்.

இதன் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதன் முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் அவுஸ்திரேலியாவினை விட 287 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாடியது.

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 239 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில், சான் மசூத் 68 ஓட்டங்கள் பெற்று போராட்டம் காண்பித்திருக்க, அசாத் சபீக் 57 ஓட்டங்களுடன் தன்னால் முடிந்த பங்களிப்பினை வழங்க முயற்சி செய்திருந்தார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்பந்துவீச்சாளரான நதன் லயன் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும், ஜோஸ் ஹேசல்வூட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னருக்கு வழங்கப்பட்டிருந்தது.  

பாகிஸ்தான் அணியுடனான வெற்றியுடன் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் தொடர் ஒன்றுக்காக வழங்கப்படும் 120 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 589/3 (127) டேவிட் வோர்னர் 335, மார்னஸ் லபசக்னே 162, சஹீன் அப்ரிடி 88/3(30)

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 302 (94.4) யாசிர் சாஹ் 113, பாபர் அசாம் 97, மிச்செல் ஸ்டார்க் 66/6, பேட் கம்மின்ஸ் 83/3

பாகிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 239 (82) சான் மசூத் 68, அசாத் சபீக் 57, நதன் லயன் 69/5, ஜோஸ் ஹேசல்வூட் 63/3 

முடிவு – அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<