பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

66
©Getty Images

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இடம்பெறும் பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களால் இலகு வெற்றியினை பதிவு செய்துள்ளது. 

T10 லீக் இறுதிப் போட்டியில் மராத்தா அரபியன்ஸ், டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிகள்

T10 லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஒப் சுற்று……

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பினை 2 போட்டிகள் டெஸ்ட் தொடருடன் ஆரம்பிக்கின்றது. அந்தவகையில், பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வியாழக்கிழமை (21) கேப்பா நகரில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய தலைவரான அஷார் அலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்திருந்தார். 

இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 86.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது முதல் இன்னிங்ஸிற்காக 240 ஓட்டங்களைப் பெற்றது. 

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் டெஸ்ட் போட்டிகளில் 24ஆவது தடவையாக அரைச்சதம் பெற்ற அசாத் சபீக் 76 ஓட்டங்கள் குவிக்க, அணித்தலைவர் அஷார் அலி 39 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

அதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும் ஜோஸ் ஹேசல்வூட் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு டேவிட் வோர்னர் மற்றும் ஜோ பேர்ன் ஜோடி மிகவும் உறுதியான ஆரம்பத்தை வழங்கியது. இரண்டு வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக 222 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் முதல் விக்கெட்டாக ஜோ பேர்ன்ஸ் 97 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

எனினும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு டேவிட் வோர்னர், புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த மார்னஸ் லபசக்னே ஆகியோர் அபாரமான முறையில் சதம் விளாசினர். இவர்களின் சத உதவிகளோடு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸில் 157.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 580 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் மார்னஸ் லபசக்னே அவரின் கன்னி டெஸ்ட் சதத்தோடு 20 பௌண்டரிகள் அடங்கலாக 185 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், டேவிட் வோர்னர் அவரின் 22ஆவது சதத்துடன் 154 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு மெதிவ் வேடும் 60 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பை வழங்கினார். 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான யாசிர் சாஹ் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் சொஹைல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

இதன் பின்னர் 340 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 84.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 335 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன் இன்னிங்ஸ் தோல்வியினையும் சந்தித்தது.

பாகிஸ்தான் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் சதம் கடந்து 104 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, மொஹமட் ரிஸ்வான் 95 ஓட்டங்கள் பெற்று தனது திறமையினை வெளிக்காட்டியிருந்தார். எனினும், இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்டம் வீணானது. 

அணித்தலைவராக பொண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான வரலாற்று…..

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக வேகப் பந்துவீச்சாளர்களான ஜோஸ் ஹேசல்வூட் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் மிச்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக மார்னஸ் லபசக்னே தெரிவாகியிருந்தார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெறுவதோடு, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக 60 புள்ளிகளையும் எடுத்துக் கொள்கின்றது. 

அவுஸ்திரேலிய – பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி அடுத்த வெள்ளிக்கிழமை (29) பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கின்றது. 

போட்டியின் சுருக்கம் 

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 240 (86.2) அசாத் சபீக் 76, அஷார் அலி 39, மிச்செல் ஸ்டார்க் 52/4, பேட் கம்மின்ஸ் 60/3, ஜோஸ் ஹேசல்வூட் 46/2

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 580 (157.4) மார்னஸ் லபசக்னே 185, டேவிட் வோர்னர் 154, மெத்திவ் வேட் 60, யாசிர் சாஹ் 205/4, ஹாரிஸ் சொஹைல் 75/2, சஹீன் அப்ரிடி 96/2

பாகிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 335 (84.2) பாபர் அசாம் 104, மொஹமட் ரிஸ்வான் 95, சான் மஷூத் 42, யாசிர் சாஹ் 42, ஜோஸ் ஹேசல்வூட் 63/4, மிச்செல் ஸ்டார்க் 73/3, பேட் கம்மின்ஸ் 69/2

முடிவு – அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<