வரலாற்று சாதனையுடன் ஆஸி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

222
Image Courtesy - AFP

அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கடந்த 3ஆம் திகதி சிட்னி மைதானத்தில் ஆரம்பமான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.    

ஏற்கனவே நிறைவடைந்த முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த  நிலையில் நான்காவது போட்டி சமநிலையில் முடிவடைய தொடரை 2-1 என இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது.  

அபார வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான …

இது இந்திய அணி 72 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் சந்தர்ப்பம். அத்துடன் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்ற முதலாவது ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி செடஸ்வர் புஜாரா மற்றும் ரிஷாஃப் பண்ட் ஆகியோரின் சதங்களுடன் 622 ஓட்டங்கள் என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை தமது முதலாவது இன்னிங்ஸிற்காக பெற்றுக் கொண்டது.

இந்திய அணி வெறும் 10 ஓட்டங்கள் பெற்றிருந்த போது முதலாவது விக்கெட்டுக்காக லோகேஷ் ராஹுல் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த மயன்க் அகர்வால் மற்றும் செடஸ்வர் புஜாரா ஜோடி 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது அகர்வால் 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து  களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோர் முறையே 23, 18 ஓட்டங்கள் என குறைந்த ஓட்டங்களை பெற்று வெளியேறினர். எனினும், சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புஜாரா வெறும் 7 ஓட்டங்களால் இரட்டை சதத்தை தவற விட்டு 193 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரவீந்தர ஜடேஜா, ரிஷாஃப் பண்டடுன் இணைந்து 7 ஆவது விக்கெட்டுக்காக 204 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர். மொத்தமாக 622 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஜடேஜா 81 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய அணி தமது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.

அவுஸ்திரேலிய மண்ணில் சதம் குவித்த முதல் இந்திய விக்கெட் காப்பாளராக ரிஷாப் பண்ட்

இந்திய அணியின் விக்கெட் காப்பாளரான ரிஷாப் பண்ட் இங்கிலாந்து …

மறுமுனையில் ரிஷாஃப் பண்ட் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் குவித்த முதலாவது இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையுடன் டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த ஓட்ட பிரதியாக 159 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நதன் லியொன் 4 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹேசல்வூட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.  

தமது முதலாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி இரண்டாவது நாள் ஆட்ட நிறைவில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்கள் பெற்றிருந்தது. தொடர்ந்து மூன்றாம் நாளில் தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  மார்கஸ் ஹரிஸ் பெற்றுக்கொண்ட 79 ஓட்டங்களை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களையே பெற்றிருந்தனர். அவ்வணி மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இந்திய அணியை விட 386 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தனர்.  

நேற்றைய (6) நான்காம் நாளின்  முதலாவது பகுதி (1st Session) ஆட்டம் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. எனினும் மதிய போஷண இடைவேளையின் பின்னர் நான்காம் நாளின் இரண்டாவது பகுதி (2nd Session) போட்டி ஆரம்பிக்கப்பட்ட போது அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் அவர்களது சகல விக்கெட்டுகளையும் இந்திய பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் மொஹமட் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோரும் 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.  

திசரவின் போராட்டத்திற்கு பின் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா?

திசர பெரேராவின் அதிரடி சதம் வீணாக, நியூசிலாந்து அணியுடனான….

பின்னர் 322 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்த அவுஸ்திரேலிய அணி மீண்டும் ஃபலோ ஓன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது. இது அவுஸ்திரேலிய அணிக்கு ஒரு மோசமான வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில், 1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் முதல் முறையாக ஃபலோ ஓன் மூலம் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஃபலோ ஓன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நான்காம் நாளின் தேநீர் இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்படும் போது விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்கள் பெற்றிருந்தது. பின்னர் போதிய வெளிச்சம் இன்றிய காரணத்தால் நான்காவது நாளின் மூன்றாவது பகுதி (3rd Session) ஆட்டமும் முழுமையாக கைவிடப்பட்டு நான்காம் நாள் ஆட்டம் மொத்தமாக 25.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் ஐந்தாவது நாளான இன்றும் (7) மழை குறுக்கிட்டதால் மதிய போஷண இடைவேளையின் பின்னர் இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

சிடில், கவாஜாவின் வருகையுடன் புதிய ஆஸி. ஒருநாள் குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய…

எனவே, முன்னைய 3 போட்டிகளினதும் முடிவுகளின்படி, இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளிலும் மூன்று சதங்கள் உட்பட மொத்தமாக 521 ஓட்டங்களை குவித்த செடஸ்வர் புஜாரா தொடர் நாயகன் விருதை பெற்றுக் கொண்டதுடன் இப்போட்டியில் 193 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா அணி (முதல் இன்னிங்ஸ்) 622/7d –  புஜாரா 193, ரிஷாஃப் பண்ட் 159*, லியொன் 178/4, ஹேசல்வூட் 105/2

அவுஸ்திரேலியா அணி (முதல் இன்னிங்ஸ்) 300 – மார்கஸ் ஹரிஸ் 79, லபுஸ்சான்ங் 38, குல்தீப் யாதவ் 99/5, மொஹமட் ஷமி 58/2, ஜடேஜா 73/2

அவுஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்) 6/0 (f/o)

முடிவு : ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது  

 >>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<