ஆஷஸ் தொடரை முழுமையாக வென்ற அவுஸ்திரேலியா

207
Ashes fifth test report Australia vs England

2017/2018 பருவகாலத்திற்கான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி தொடரை 4-0 எனும் கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இத்தொடரின் முதல் 3 போட்டிகளையும் தொடராக அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிய போதிலும் 4ஆவது போட்டியினை சமநிலையில் முடித்துக் கொண்ட இங்கிலாந்து அணி வைட்வொஷ்ஷிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டது.    

அலஸ்டையர் குக் இரட்டைச் சதம்; போட்டி சமநிலையில் முடிவு

2017/2018 பருவ காலத்திற்கான ஆஷஸ் தொடரின் 4 ஆவது..

இந்நிலையில் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி கடந்த 4ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. அதன் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஜோ ரூட் 83, டேவிட் மாலன் 62,  அலஸ்டைர் குக் மற்றும் மேசன் கிரேன் ஆகியோர் தலா 39 என ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும், மிச்சல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹஸல்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், நதன் லியோன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 649 ஓட்டங்களைப் பெற்ற வேளை ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக உஸ்மான் கவாஜா (171), ஷோன் மார்ஷ் (156), மிச்சல் மார்ஷ் (101) ஆகியோர் சதம் கடந்தனர்.

பந்து வீச்சில் மொயின் அலி 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டுவர்ட் ப்ரோட், டோம் குர்ரான் மற்றும் மேசன் கிரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.  

பின்னர் 303 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இன்னிங்ஸினை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து அணிக்கு அணித் தலைவர் ஜோ ரூட் சற்று நிதானமாக ஆடிய போதும் காயம் காரணமாக அவர் ஓய்வறை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதன்போது ஜோ ரூட் 58 ஓட்டங்களையும் ஜோன்னி பேர்ட்சோ 38 ஓட்டங்களையும் அதிகபட்சமகப் பெற்றனர். இங்கிலாந்து அணியின் ஏனைய வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில் அவ்வணி 5ஆவது நாளின் பகல் போசன இடைவேளியின் பின் 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

அணியைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்ற ஹத்துருசிங்க

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே..

இதன்படி இம்முறை ஆஷஸ் தொடர் 4-0 எனும் கணக்கில் அவுஸ்திரேலிய அணி வசமானது. பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும், நதன் லியோன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.  

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பெட் கம்மின்ஸ் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் சிறப்பாட்டக்காரராக ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 346/10 (112.3) ஜோ ரூட் 83, அலச்டைர் குக் 39, டோம் குர்ரான் 39, ஸ்டுவர்ட் பரோட் 31, மொயின் அலி 30, பெட் கம்மின்ஸ் 4/80, ஜோஸ் ஹசல்வுட் 2/65, மிச்சல் ஸ்டார்க் 2/80, நதன் லியோன் 1/33

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 649/7d (193) உஸ்மான் கவாஜா 171, சொன் மார்ஷ் 156, மிச்சல் மார்ஷ் 101, ஸ்டீவ் ஸ்மித் 83, டேவிட் வோர்னர் 56, மொய்ன் அலி 2/170, ஜேம்ஸ் ஆண்டர்சன் 1/56, ஸ்டுவர்ட் பரோட் 1/121, டோம் குர்ரான் 1/82, மேசன் கிறேன் 1/193

இங்கிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 180/10 (88.1) ஜோ ரூட் 58, ஜோன்னி பேர்ட்சோ 38, பெட் கம்மின்ஸ் 4/39, நதன் லியோன் 3/54, மிச்சல் ஸ்டார்க் 1/38, ஜோஸ் ஹசல்வுட் 1/36.

போட்டி முடிவு – அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி