இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிக்கொள்ளும் T-20 கிரிக்கெட் தொடர் பெப்ரவரி மாத நடுப் பகுதியில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி சார்பாக விளையாடும்  13 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) இன்று வெளியிட்டுள்ளது.

இத்தொடரில் துடுப்பாட்ட வீரரான மைக்கல் கிளிங்கரிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமையினால், அவர் தனது 36ஆவது வயதில் சர்வதேச போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகவுள்ளார்.

இவருடன் சேர்த்து ஜை றிச்சட்சன், பில்லி ஸ்டன்லேக் மற்றும் அஸ்டோன் டர்னர் ஆகியோரும் இத்தொடர் மூலம் சர்வதேச போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்காக முதன் முறையாக விளையாட உள்ளனர்.

Michael Klinger
மைக்கல் கிளிங்கர்

கடந்த வாரம் நடைபெற்று முடிந்திருக்கும் அவுஸ்திரேலியாவின் முக்கிய தொடரான பிக் பாஷ் T-20 தொடரில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட பெர்த் ஸ்கோச்சர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு, அவ்வணியினை வெற்றிப் பாதையில் வழி நடாத்தியதன் காரணமாகவே இலங்கையுடனான தொடரில் விளையாடும் வாய்ப்பை மைக்கல் கிளிங்கர் பெற்றுள்ளார்.

இந்த T-20 தொடர் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிற்கு முன்னர் குறுகிய இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டதற்காக ஆஸியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், ஜனவரி ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையை விமர்சித்திருந்தார்.

இதனால் குறித்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக முண்ணனி வீரர்களான டேவிட் வோர்னர், மிச்சேல் ஸ்டார்க் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு இலங்கை அணியுடனான T-20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், இத்தொடரில் அவுஸ்திரேலிய அணியை அரோன் பின்ச் தலைமை தாங்குகிறார். அவுஸ்திரேலிய T-20 அணியின் நிரந்தர தலைவர் பதவியை கடந்த T-20 உலக கிண்ணத்தின்போது இழந்த அரோன் பின்ச், இத்தொடர் மூலம் மீண்டும் அந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொள்கின்றார்.

அத்துடன், சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணியினை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த விக்கெட் காப்பாளர் டிம் பெய்னிற்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஷ் T-20 தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடியிருந்த பெய்ன், மொத்தமாக 227 ஓட்டங்களைக் குவித்தமையே அவர் தேசிய அணியில் உள்வாங்கப்பட்டமைக்கு காரணமாகும்.

இத்தொடரில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்துவதற்காக  மொசேஸ் ஹென்ரிக்குயிஸ், ஜேம்ஸ் பால்க்னர், அன்ட்ரேவ் டை ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

பந்து வீச்சினை வலுப்படுத்த அடம் ஸம்பா, பெட் கம்மின்ஸ் ஆகியோருடன் சேர்த்து புதிதாக அறிமுகமாகும் ஜை றிச்சட்சன், அஸ்டன் டர்னர் மற்றும் பில்லி ஸ்டேன்லக் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வீரர்கள் மூவரும் பிக் பாஷ் T-20 தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளரான டிரவர் ஹொன்ஸ் இக்குழாம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலிய அணி தற்போது T-20 தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கின்றது. அத்துடன் எங்களது முண்ணனி துடுப்பாட்ட வீரர்களும் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிற்காக தயாராகிக்கொண்டுள்ளனர். இதனால், இளம் வீரர்களில் சிறப்பான ஆட்டத்தினை காண்பிக்கும்

Getty Images
Getty Images

வீரர்களையும் அனுபவம் உள்ள வீரர்களையும் இணைத்ததாக இக்குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீரர்களின் முயற்சியினால், அவுஸ்திரேலிய அணியின் ஆட்டம் மேம்படுவதனையும், தரவரிசையில் முன்னேற்றம் ஏற்படுவதனையும் எதிர்பார்த்துள்ளோம்என்று கூறினார்.

 

இறுதியாக இலங்கை அணியுடன் T-20 தொடர் ஒன்றினை கடந்த ஒகஸ்ட் மாதத்தில் விளையாடியிருந்த அவுஸ்திரேலிய அணி அதனை 2-0 எனக் கைப்பற்றியிருந்தது. அத்தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த கிலென் மெக்ஸ்வெல் இந்த T-20 குழாத்தில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய  T-20 குழாம்

அரோன் பின்ச்(தலைவர்), மைக்கல் கிளிங்கர், ட்ராவிஸ் ஹெட், கிரிஸ் லின், மொய்சேஸ் ஹென்ரிக்குய்ஸ், அஸ்டோன் டர்னர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பால்க்னர், பெட் கம்மின்ஸ், அடம் ஷம்பா, அன்ட்ரேவ் டை, ஜை றிச்சட்சன், பில்லி ஸ்டன்லேக்

T-20 போட்டி அட்டவணை

முதல் போட்டிபெப்ரவரி 17 ஆம் திகதிமெல்பர்ன்

இரண்டாவது போட்டிபெப்ரவரி 19 ஆம் திகதிவிக்டோரியா

மூன்றாவது போட்டிபெப்ரவரி 22 ஆம் திகதிஅடிலைட்