ஸ்மித், வோனருக்கு அவுஸ்திரேலிய அணியில் இடமில்லை

85
Photo - Getty Images

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) பாகிஸ்தான் அணியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த மாத இறுதியில் இடம்பெறவிருக்கும் ஒருநாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய தம்முடைய வீரர்கள் குழாத்தினை இன்று (8) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்தும் பந்துவீச்சில் அசத்தும் மொஹமட் சிராஸ்

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கையின் உள்ளூர் முதல்தரக்………..

ஐந்து போட்டிகள் கொண்டதாக அமைந்திருக்கும் இந்த ஒருநாள் தொடரிற்கான அவுஸ்திரேலிய அணியில், உபாதை ஒன்றின் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் விலகியிருக்கின்றார்.

பாகிஸ்தான் அணியுடனான இந்த ஒருநாள் தொடர் மூலம், பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி ஒரு வருட போட்டித்தடையினை பெற்றுக்கொண்ட நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோனர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அவர்களது போட்டித்தடைக் காலம் நிறைவுக்கு வருவதனால் அவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெறுவார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரில் டேவிட் வோனர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இவை தவிர தற்போது இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் ஆடும் அதே அவுஸ்திரேலிய அணியே பாகிஸ்தான் அணியினையும் மாற்றங்கள் ஏதுமின்றி எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

“ அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வு உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோனர் ஆகியோரினை வீரர்கள் தேர்வில் எடுக்கப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டது. “ என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வுக்குழுத் தலைவர் ட்ரேவர் ஹோன்ஸ் குறிப்பிட்டார்.

“ இருவரினதும் போட்டித் தடைகள் மார்ச் மாதம் 28ஆம் திகதி நிறைவுக்கு வருகின்ற போதும்,  ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோனர் ஆகியோர் முழங்கை உபாதை சத்திர சிகிச்சைகளை எதிர்கொண்டு அதிலிருந்து தேறிவருவதால் தேர்விற்காக கருத்திற்கொள்ளவில்லை. அவர்கள் தேறிய பின்னர், உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறுகின்ற இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் மூலம் தங்களது திறமையினை நிரூபிக்க எதிர்பார்க்கின்றோம். ஐ.பி.எல். தொடரில் டேவிட் வோனர் சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணிக்காகவும், ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காகவும் பங்கேற்கின்றனர். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஸ்டீவ் ஸ்மித்துடனும், டேவிட் வோனருடனும் அவர்கள் பங்குபெறும் ஐ.பி.எல். அணிகளுடனும் தொடர்ந்து இணைந்து செயற்படுவதன் மூலம் அவர்களை உலகக் கிண்ணத்திலும், அதனை அடுத்து இடம்பெறவுள்ள ஆஷஸ் போட்டிகளுக்காகவும் தயார்படுத்த எதிர்பார்த்துள்ளது. “ என ஹோன்ஸ் மேலும் பேசியிருந்தார்.

காயத்திற்கு உள்ளாகிய மிச்செல் ஸ்டார்க் பற்றியும் பேசிய ஹோன்ஸ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ மிச்செல் ஸ்டார்க் உபாதையில் இருந்து குணமாகிய பின்னரும் துரதிஷ்டவசமாக அவரினால் பந்து வீசுவதற்கு சற்று கடினமாக இருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே அவர் பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரிலிருந்து விலகியிருக்கின்றார். இது எல்லாருக்கும் ஏமாற்றம் தரும் விடயமாக இருக்கின்ற போதிலும், எங்களது முக்கிய இலக்கு ஸ்டார்க்கினை உலகக் கிண்ணத்திற்கு தயாராக்குவதாகும். “

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், இம்மாதம் 22ஆம் திகதி சர்ஜாவில் இடம்பெறும் போட்டியுடன் ஆரம்பமாகின்றது. அதனை அடுத்து, தொடரின் இரண்டாவதும் ஒரு நாள் போட்டியும் இம்மாதம் 24ஆம் திகதி சர்ஜாவிலேயே நடைபெறுகின்றது.

அதனை அடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக இரண்டு அணிகளும் அபுதாபி பயணமாகின்றன. அபுதாபி போட்டி இம் மாதம் 27ஆம் இடம்பெற, தொடரின் நான்காவதும் மற்றும் ஐந்தாவது போட்டிகள் மார்ச் மாதம் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் துபாய் நகரில் இடம்பெறுகின்றது.

அவுஸ்திரேலிய ஒரு நாள் குழாம்

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), உஸ்மான் கவாஜா, சோன் மார்ஷ், பீட்டர் ஹேன்ஸ்ஹொம்ப், கிளேன் மெக்ஸ்வெல், அஸ்டன் டேனர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், நேதன் கோல்டர்-நைல், ஜை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரன்ட்ரொப், நதன் லயன், அடம் ஷம்பா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<