ஆசிய கரப்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடர் செப்டம்பர் 15 முதல் இலங்கையில்

18

ஆசிய கரப்பந்தாட்ட தரப்படுத்தலில் பின்தங்கியிருக்கும் இறுதி 8 அணிகளுக்கான ஆசிய கரப்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடர் (Asian Men’s Volleyball Challenge Cup 2018) முதல் முறையாக இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது.

ஆசியாவின் தரப்படுத்தலில் பின்தங்கியிருக்கும் 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டித் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

முதல் முறைாக நடத்தப்படவுள்ள இந்த போட்டித் தொடருக்கான பிரதான அனுசரணையாளராக டயலொக் Ultra High Speed, Dialog 4G Home Broadband செயற்படவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கையிலிருந்து 12 மெய்வல்லுனர்கள் பங்கேற்பு

ஆசிய கரப்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடரை, ஆசிய கரப்பந்தாட்ட கூட்டமைப்பு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆசிய கரப்பந்தாட்ட தரப்படுத்தலில் 9 தொடக்கம் 16 ஆம் இடங்களை பிடித்துள்ள அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி மற்றும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கரப்பந்தாட்ட தொடரில் பங்குற்கும். இதேவேளை இந்த போட்டியில் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தமுறை நடைபெறும் சவால் கிண்ண வாய்ப்பை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சவால் கிண்ணத்தில் பங்கேற்கும் 8 அணிகளும் A மற்றும் B என இரண்டு குழுக்களாக பிரிந்து மோதவுள்ளன. A குழுவில் இலங்கை, மலேசியா, ஹொங்கொங் மற்றும் சவூதி அரேபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளதுடன், B குழுவில் ஐக்கிய அரபு இராச்சியம், மொங்கோலியா, ஈராக் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டித் தொடர் குறித்து கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா,

“இலங்கை அணிக்கு இந்த போட்டித் தொடர் சாதகத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என நினைக்கிறேன். எமது அணி தரப்படுத்தலில் 14 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் முன்னேறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் விளையாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்வதற்கு தனியார் துறையின் உதவிகள் அவசியம். எதிர்காலங்களில் தனியார் துறையிலிருந்து மேலும் உதவிகள் கிடைக்கும் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.

இதேவேளை மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் மற்றும் கரப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவிக்கையில்,

”கரப்பந்தாட்டம் நாட்டில் அதிகம் விரும்பக்கூடிய விளையாட்டு. கரப்பந்தாட்ட வீரர்கள் பெருமைக்குறியவர்கள். எமது நாட்டின் பெருமையை இந்த தொடரிலும், எதிர்காலத்திலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க