ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வரலாறு படைத்த இலங்கை நட்சத்திரங்கள் கௌரவிப்பு

99

ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்ற 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணி 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக ஒன்பது பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் வரலாற்றில் இலங்கை வென்றெடுத்த அதிகூடிய பதக்கங்களாகவும் இது பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்த இலங்கை

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி…

இந்நிலையில், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பங்கேற்றிருந்த இலங்கை கனிஷ்ட வீரர்கள் உள்ளிட்ட குழாம் நேற்று (12) இரவு நாட்டை வந்தடைந்தனர்.

இதன்போது பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமையைத் தேடிக்கொடுத்த வீரர்களுக்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சினால் மகத்தான வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர்களுக்கான மண்டபத்தில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகாண்டு வீரர்களை பாராட்டி கௌரவித்தனர்.

இந்த நிலையில் குறித்த போட்டித் தொடர் குறித்து இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன கருத்து வெளியிடுகையில்,

”நான் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 4 x 400 மீற்றரில் தங்கப் பதக்கத்தையும் வென்றேன். உண்மையில் எனது அணியின் திறமை தொடர்பில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் குறிப்பாக அணியின் தலைவராக எனக்கு மிகப் பெரிய பொறுப்பு இருந்தது. எனவே இந்த இலக்கை நானும், அணியில் உள்ள சக வீரர்களும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தோம். எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற போட்டித் தொடர்களில் பங்குபற்றி நாட்டுக்கு பெருமையைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன். அதேபோன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதே எனது இலட்சியமாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இங்கு கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் எமது வீரர்கள் 35 நாடுகளுடன் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டனர். அதிலும் குறிப்பாக 13 வீரர்களில் 9 பேர் பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பது மிகப் பெரிய வெற்றியாகும்.

15 வருட இலங்கை சாதனையை முறியடித்த ஹிருனி

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேயரத்ன அமெரிக்காவின்…

எனவே, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன். அதுமாத்திரமின்றி நாட்டில் உள்ள திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களுக்காக நீண்டகால வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளேன்.

அத்துடன், அவர்களை ஒலிம்பிக் வரை கொண்டு செல்வதற்கான திறமையான பயிற்றுவிப்பாளர்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்” என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜயவிக்ரம, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவின் ஆலோசகரான சுனில் ஜயவீர உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகளும், வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டு வரவேற்று கௌரவித்தனர்.

35 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 437 வீர, வீராங்கனைகள் பங்குபற்றிய இம்முறை போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி 5 வீரர்களும், 7 வீராங்கனைகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியிலும், புதிய ஆசிய மற்றும் இலங்கை சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

அதுமாத்திரமின்றி, இலங்கை அணியின் மத்திய தூர ஓட்ட வீராங்கனையான டில்ஷி ஷிpயாமலி குமாரசிங்க, பெண்களுக்கான 400 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும், தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று கொடுத்தனர்.

அத்துடன், இவ்விரண்டு வீராங்கனைகளும் பெண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்திலும் இலங்கை அணிக்காக வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் மெதிவ்ஸ், லஹிரு கமகே

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம்…

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பசிந்து கொடிக்கார வெள்ளிப் பதக்க்கத்தையும் வென்று கொடுத்தார்.

இந்நிலையில், போட்டிகளின் இறுதி நாளில் நடைபெற்ற ஆண்களுக்கான 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப்பதக்கத்தையும், பெண்களுக்கான 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில்  வெண்கலப் பதக்கத்தையும் இலங்கை அணி சுவீகரித்தது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க