ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் இலங்கைக்கு முதல் பதக்கம்

105

துர்க்மெனிஸ்தானின் தலைநகர் அஸ்கபாத் நகரில் இடம்பெற்று வருகின்ற ஐந்தாவது ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழாவில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை வென்றுள்ளது.

போட்டிகளின் 2ஆவது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட அமில ஜயசிறி, பலத்த போட்டிக்கு மத்தியில் 3 மீற்றரினால் தங்கப்பதக்கத்தை இழந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, போட்டியின் முதல் மூன்று முயற்சியிலும் வெற்றிகொண்ட அமில, 7.45 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இப்போட்டியில் அமிலவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த வியட்நாம் வீரர் குயேன் டியேன் ட்ரோங், 7.48 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், 7.44 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த ஹொங்கொங் வீரர் சான் மிங் தாய் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 23 வயதான அமில ஜயசிறி, கடந்த வருடம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படை வீரர்களுக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 8.15 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய தேசிய சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்துனில் மீண்டும் சாதனை

5

ஆண்களுக்கான 800 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் இந்துனில் ஹேரத், போட்டித் தூரத்தை ஒரு நிமிடம் 50.91 செக்கன்களில் நிறைவு செய்து புதிய உள்ளக தேசிய சாதனை படைத்தார்.

முன்னதாக போட்டிகளின் முதல் நாளான நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் ஒரு நிமிடம் 53.79 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இந்துனில் ஹேரத் புதிய இலங்கை உள்ளக மெய்வல்லுனர் சாதனை நிகழ்த்தியிருந்தார்.

அதன்படி, 25 வருடங்களுக்கு முன் அதாவது 1992ஆம் ஆண்டு அமெரிக்காவின் நெவாடா நகரில் நடைபெற்ற உலக உள்ளக மெய்வல்லுனரில் குமார அமரசேகரவினால் நிலைநாட்டப்பட்ட (ஒரு நிமிடம் 57.11 செக்கன்கள்) சாதனையை இந்துனில் ஹேரத் மீண்டும் முறியடித்து நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

அத்துடன் 2 சுற்றுக்களாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளின் நிறைவில் 6 வீரர்கள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளதுடன், மற்றைய வீரர்களைவிட இந்துனில் இப்போட்டியில் சிறந்த காலத்தைப் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முப்பாய்ச்சலில் விதூஷாவுக்கு தோல்வி

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சாதனை படைத்த 20 வயதான விதூஷா லக்‌ஷானி இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியில் 12.51 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்தார்.

ஐந்தாவது உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 21 இலங்கையர்

ஐந்தாவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழா இம்மாதம்…

எனினும், கஸகஸ்தான் வீராங்கனைகளான ரிபகோவா ஒல்கா மற்றும் ஒவ்சினிகோயா மரியா ஆகியோர் முறையே 14.32 மீற்றர், 13.21 மீற்றர் தூரம் பாந்ந்து தங்கம் மற்றம் வெள்ளிப்பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹிமாஷவுக்கு ஏமாற்றம்

தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான், இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 60 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார். இதன்படி அவர் குறித்த போட்டி தூரத்தை 6.89 செக்கன்களில் நிறைவு செய்தார்.

எனினும், இன்று காலை நடைபெற்ற தகுதிகாண் போட்டியிலும் அதே காலத்தைப் பதிவுசெய்த ஹிமாஷ, 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 24 வீரர்கள் பங்குபற்றி அரையிறுதிப் போட்டியில் 13ஆவது இடத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

எனினும் கடந்த வருடம் அமெரிக்காவின் போர்ட்லேன்ட் மாநிலத்தில் நடைபெற்ற 16ஆவது உலக உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஹிமாஷ, ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிகாண் சுற்றில் கலந்துகொண்டு 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான 60 மீற்றர் இறுதிப் போட்டியில் ஈரானைச் சேர்ந்த தப்தியான் ஹசன் தங்கப்பதக்கத்தையும், பிலிப்பைன்ஸின் எரிக் சேவுன் வெள்ளிப்பதக்கத்தையும், ஈரானைச் சேர்ந்த கஷமி ரீசா வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் போட்டிகளின் 2ஆவது நாள் நிறைவில் பதக்கப்பட்டியலில் 41 தங்கப்பதக்கங்களை வென்ற துர்க்மெனிஸ்தான் முதலிடத்தையும், 7 தங்கப்பதக்கங்களை வென்ற ஈரான் 2ஆவது இடத்தையும், 6 தங்கங்களை வென்ற கஸகஸ்தான் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை ஒரேயொரு வெள்ளிப்பதக்கத்தை வென்ற இலங்கை 23ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில், 3 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா 8ஆவது இடத்திலும், ஒரேயொரு தங்கம் வென்ற பாகிஸ்தான் 14ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டிகளின் 3ஆவது நாளான நாளை (20) ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் இந்துனில் ஹேரத் மற்றும் கயந்திகா அபேரத்ன கலந்துகொள்ளவுள்ளதுடன், ஆண்களுக்கான உயரம் பாய்தல் இறுதிப் போட்டியில் மஞ்சுள குமார களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.