ஆசிய கிரிக்கெட் சபையின் வளர்ந்துவரும் அணிகளின் சம்பியனாக முடிசூடிய இலங்கை

1408
Emerging Asia Cup Finals

சிட்டகொங், சஹூர் அகமத் சௌத்ரி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ண சம்பியன்ஷிப் தொடரின், 23 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஷெஹான் ஜயசூரியவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி 26.1 ஓவர்கள் மீதமிருக்க 5 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணியை இலகுவாக வெற்றி கொண்டது.  

அரையிறுதிப் போட்டியில் ஆப்கான் இளையோர் அணியை துவம்சம் செய்து  18.2 ஓவர்கள் மீதமிருக்க 123 ஓட்டங்களால் சாதனை வெற்றியை பதிவு செய்த நிலையில், துடுப்பாட்டத்துக்கு உகந்த சிட்டகொங் மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் இளையோர் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த வகையில் ஓட்டங்களை குவிக்கும் எண்ணத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதலாவது விக்கெட்டினை 12 ஓட்டங்களை பெற்றிருந்த போது அசித்த பெர்னாண்டோவின் பந்து வீச்சில் பறி கொடுத்தது. அதிரடியாக ஓட்டங்களை குவிக்க முயசித்த வேளையில் 2 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 10 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஹுசைன் தலாத் ஆட்டமிழந்தார். அதனையடுத்து களமிறங்கிய ஹரிஸ் சொஹைல் வந்த வேகத்திலேயே 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல பாகிஸ்தான் அணி வெறும் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் முஹம்மத் ரிஸ்வான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை பெற முயன்றார். அதேநேரம் சூழ்நிலையை சரியாக கணிப்பீடு செய்த இலங்கை இளையோர் அணித் தலைவர் அஞ்சேலோ பெரேரா பாகிஸ்தான் அணியின் சூழ்நிலைக்கு தகுந்த களத் தடுப்பை ஒழுங்கு செய்தார். சிறப்பான களத்தடுப்பின் மத்தியில் பாகிஸ்தான் அணி ஓட்டங்களை விரைவாக குவிக்க தடுமாறியது.

முஹம்மத் ரிஸ்வான் ஓட்டங்களை வேகமாக பெற முயசித்த போது வலதுகை ஒப் பிரேக் பந்து வீசும் ஷெஹான் ஜயசூரியவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் 26 ஓட்டங்களுக்கு துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய உஸாம மிர் 26 ஓட்டங்களுக்கு வணிது ஹசரங்கவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்,

சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் இளையோர் அணி 42.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஓட்டங்களை கட்டுப்படுத்திய ஷெஹான் ஜயசூரிய 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

134 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இலங்கை இளையோர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சதீர சமரவிக்ரம மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ முதல் விக்கெட்டுக்காக 23 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில், முதல் விக்கெட்டாக அவிஷ்க பெர்னாண்டோ 17 ஓட்டங்களுக்கு சமீன் குல்லின் பந்து வீச்சில் இம்ரான் பட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதனையடுத்து களமிறங்கிய ஷெஹான் ஜயசூரிய உள்ளிட்ட மூன்று வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க சற்று தடுமாறியது இலங்கை இளையோர் அணி. எனினும், சிறப்பாக துடுப்பாடிய சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களுக்கு ஆட்டமிது சென்றார்.

சற்று நெருக்கடியான சூழ்நிலையில், களமிறங்கிய கித்ருவான் விதனகே மற்றும் வணிது ஹசரங்க ஆகியோர் இணைந்து பிரிக்கப்பாடாத இணைப்பாட்டமாக 36 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதியில் இலங்கை அணி 23.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து குறித்த வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஷெஹான் ஜயசூரியவும் தொடரின் ஆட்ட நாயகனாக சரித் அசலங்கவும் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி – 133 (42.1) – முஹம்மத் ரிஸ்வான் 26, ஹம்மாத் அசாம் 25, உசாமா மிர் 26, குஷ்டில் ஷா 20, பிலால் ஆசிப் 11, ஹசைன் தலாத் 10, ஷெஹான் ஜயசூரிய 22/3, வணிது ஹசரங்க 13/2, சாமிக்க கருணாரத்ன 20/2

இலங்கை அணி – 134/5 (23.5) – சதீர சமரவிக்ரம 45, அவிஷ்க பெர்னாண்டோ 17, வணிது ஹசரங்க 22, கித்ருவான் விதனகே 20, சமீன் குல் 33/2, உசாமா மிர் 20/1