ஆசிய மெய்வல்லுனரில் இலங்கை வீரர்களுக்கு பின்னடைவு

2

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது நாளான நேற்று (22) இரவு நடைபெற்ற, இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் தலைவி நிமாலி லியனாராச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகியோர் பதக்க வாய்ப்பை தவறவிட்டனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 100 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஷான், ஐந்தாவது இடத்தையும், ஆண்களுக்கான 800 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட ருசிறு சத்துரங்க நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.  

இதேநேரம், மைதான நிகழ்ச்சிகளான ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட கிரேஷன் தனன்ஞய 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொள்ள, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட சுமேத ரணசிங்க, 8ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர்.  

ஆசிய மெய்வல்லுனர் முதல் நாளில் இலங்கை வீரர்கள் அபாரம்

கட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச ….

எனவே, இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக பதக்கங்களை வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெரும்பாலான வீரர்கள் தமது தனிப்பட்ட அடைவுமட்டத்தினைக் கூட எட்ட முடியாமல் தோல்விகளை சந்தித்து இருந்தனர்.

நிமாலி, கயன்திகாவுக்கு ஏமாற்றம்

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீராங்கனைகளான நிமாலி லியனாரச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.

ஆசியாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்குபற்றியிருந்த இப்போட்டியின் 3ஆவது சுவட்டில் நிமாலியும், 4ஆவது சுவட்டில் கயன்திகாவும் போட்டியிட்டனர்.

மிகவும் விறுவிறுப்புக்கு மத்தியில் ஆரம்பமாகிய இப்போட்டியில் சீனா, கஸகஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் முதல் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முன்னிலை பெற்றிருந்தனர்.

எனினும், அவர்களை முந்துவதற்கு கயன்திகா மற்றும் நிமாலி ஆகிய இருவரும் கடும் முயற்சியை மேற்கொண்டிருந்தாலும், அவர்களது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.இதனையடுத்து, இறுதி 600 மீற்றர் ஓட்டத்தில் தமது வேகமான ஓட்டத்தை முன்னெடுக்க இலங்கை வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போக, போட்டியில் பின்னடைவை சந்தித்து தோல்வியைத் தழுவினர்.

இதன்படி, போட்டியை 2 நிமிடங்கள் 05.74 செக்கன்களில் நிறைவு செய்த கயன்திகா அபேரத்ன நான்காவது இடத்தையும், 2 நிமிடங்கள் 08.69 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த நிமாலி லியனாராச்சி ஏழாவது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியாக 2017ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற நிமாலி மற்றும் கயன்திகாவுக்கு இம்முறை போட்டிகளில் பெருத்த ஏமாற்றத்தை சந்திக்க நேரிட்டது.

குறித்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 02.70 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார். இது அவரது அதிசிறந்த ஓட்டப் பெறுமதியாகும். தங்கப் பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

இதேநேரம், சீனாவின் வேங் சுன்யூ (2 நிமி. 02.96 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், கஸகஸ்தானின் முகசேவா மர்கரிட்டா (2 நிமி. 03.83 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இதில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற சீனா, கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய மெய்வல்லுனர் தொடரில் ஹிமாஷ மற்றும் கயந்திகாவுக்கு 2 போட்டிகள்

கட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச …..

ஹிமாஷவுக்கு 5ஆவது இடம்இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான ஹிமாஷ ஷான், நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கினார்.

இதன்படி, முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றிய ஹிமாஷ, ஐந்தாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார். குறித்த போட்டியை நிறைவு செய்ய 10.51 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட ஹிமாஷ, போட்டியை 10.42 செக்கன்களில் நிறைவு செய்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரினை இலக்காகக் கொண்டு கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் 10.22 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய இலங்கை சாதனை படைத்த ஹிமாஷவுக்கு இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் எதிர்பார்த்தளவு திறமையினை வெளிப்படுத்த முடியாமல் போனது.

ஆசிய கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

தாய்லாந்தின் சமிலா கடற்கரையில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 20 ஆவது ஆசிய கடற்கரை …..

கிரேஷனுக்கு ஆறாவது இடம்

12 வீரர்கள் பங்குபற்றிய ஆண்களுக்கான முப்பாய்ச்சல் இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கிய கிரேஷன் தனன்ஞய, 16.16 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கையில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 16.79 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தேசிய சாதனை படைத்த கிரேஷனால், நேற்றுமுன்தினம் நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 15.87 மீற்றர் தூரத்தை மாத்திரமே பாயக்கூடியதாக இருந்தது.

இப்போட்டியில் கஸகஸ்தானின் குல்பானோ ருல்சான், 16.93 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், சீனாவின் சூ யாமிங் (16.87 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு சீன நாட்டு வீரரான சூ ஸியலொங் (16.81 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

சுமேத ரணசிங்கவுக்கு தோல்வி

INSERT IMAGE – sumedha-2

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான சுமேத ரணசிங்க, 73.50 மீற்றர் தூரத்தை எறிந்து எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியில், முறையே 72.29, 72.48, 71.83, 71.68, 73.02 மற்றும் 73.50 மீற்றர் தூரங்களைப் பதிவு செய்த சுமேத ரணசிங்கவுக்கு எதிர்பார்த்தளவு திறமையினை வெளிப்படுத்த முடியாமல் போனது.

எனினும், ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு கொழும்பில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 79.65 மீற்றர் தூரம் எறிந்து ஆசிய மெய்வல்லுனர் தொடருக்கான அடைவுமட்டத்தினைப் அவர் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த போட்டியில் சீனா தாய்ப்பே வீரரான சென்ங் சோ, 86.72 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள, இந்தியாவின் சிவ்பால் சிங் (86.23 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பானின் அரைய் ரியோஹல் (81.93 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

ஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க

சீனாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய பளுதூக்கல் ……

400 மீற்றரில் நதீஷா, அஜித்துக்கு பின்னடைவு

போட்டியின் முதல்நாளான நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நதீஷா ராமநாயக்க, 6ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். போட்டியை நிறைவு செய்ய 53.98 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இதேநேரம், அன்றைய தினம் இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றிய அஜித் பிரேமகுமார, போட்டியை 47.07 செக்கன்களில் நிறைவு செய்து நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இதனால் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட அஜித் பிரேமகுமார, போட்டியை 47.31 செக்கன்களில் நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டிகள்

போட்டித் தொடரின் மூன்றாவது நாளான இன்றைய தினம் (23) ஹிமாஷ ஷான் (200 மீற்றர் முதல் சுற்று), பிரசாத் விமலசிறி மற்றும் தனுஷ் பிரியரத்ன (நீளம் பாய்தல் தகுதிச் சுற்று), ஹேமன்த குமார (1500 மீற்றர் முதல் சுற்று), நிலானி ரத்னாயக்க (3000 மீற்றர் தடை தாண்டல்), விதூஷா லக்ஷானி (முப்பாய்ச்சல் இறுதிப் போட்டி) ஆகியோர் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<