ஆசிய கிண்ணத்தில் அரையிறுதிக்கு தெரிவான இலங்கை கனிஷ்ட ரக்பி அணி

114

சீனா மற்றும் சைனீஸ் தாய்பே அணிகளை வென்றதன் மூலம் இலங்கை 20 வயதிற்கு உட்பட்ட ரக்பி அணி, 20 வயதிற்கு உட்பட்ட ஆசிய கிண்ண ரக்பி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது.

நவீன் ஹெனகன்கனமகேவின் தலைமையில் ஹொங்கொங் நோக்கி புறப்பட்ட இளம் இலங்கை ரக்பி அணியானது இன்று இரண்டு போட்டிகளில் விளையாடியது. சென்ற முறை நடைபெற்ற போட்டிகளில் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்ததன் மூலம், இம்முறையும் இந்த இளம் அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த நம்பிக்கையை பொய்யாக்காதவாறு இலங்கை அணியும் சிறப்பாக விளையாடி வெற்றியை தமதாக்கிக்கொண்டது.

இலங்கை எதிர் சீனா

இன்று வெள்ளிக்கிழமை (10) இலங்கை இளையோர் அணியானது தனது முதலாவது  போட்டியில் சீன அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான போட்டியின் பின்னர், இரண்டாம் பாதியில் காட்டிய திறமையின் மூலம் இலங்கை இளையோர் அணி போட்டியை 26-14 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

உலகக் கிண்ணத்துக்கு கனவு காணும் இலங்கை அணியின் இன்றைய நிலை

போட்டியில் மழையின் குறுக்கீடு காணப்பட்டதன் மூலம், இரண்டு அணிகளுக்கும் பந்தை கையாளுவதில் கடினம் காணப்பட்டது. எனினும் நிலையை சுதாகரித்துக்கொண்ட இலங்கை அணியானது, தனது முதலாவது ட்ரையை தலைவர் நவீன் மூலமாக வைத்தது. பெனால்டி ஒன்றை துரிதமாக செயற்படுத்திய நவீன் ட்ரை வைத்து அசத்தினார். எனினும் சதுர செனவிரத்ன கொன்வெர்சனை தவறவிட்டார். (இலங்கை 05 – 00 சீனா)

தொடர்ந்து சீன அணி அபாரமாக விளையாடி, அடுத்தடுத்து இரண்டு ட்ரை வைத்து அசத்தியது. 8ஆம் இலக்க வீரரான யென் லு இரண்டு ட்ரையையும் வைத்து அசத்தினார். இலங்கை அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளிய சீன அணியானது, 9 புள்ளிகள் முன்னிலையுடன் இரண்டாம் பாதிக்கு நகர்ந்தது.

முதல் பாதி: இலங்கை 05 – 14 சீனா

இரண்டாம் பாதியின் முதல் நிமிடத்திலேயே இலங்கை இளையோர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கையின் பலம் மிக்க வீரரான தினுக் அமரசிங்க, சீன வீரர்களை தகர்த்து ட்ரை கோட்டை அடைந்தார். ஹரித் பண்டார கொன்வெர்சனை சிறப்பாக பூர்த்தி செய்தார். (இலங்கை 12 – 14 சீனா)

தனது பலத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்த தினுக், பெனால்டியை துரிதமாக பெற்றுக்கொண்டு இலகுவாக இரண்டாவது முறையும் ட்ரை கோட்டை கடந்தார். ஹரித் பண்டார இம்முறையும் கொன்வெர்சனில் எந்த தவறையும் மேற்கொள்ளவில்லை. (இலங்கை 19 – 14 சீனா)

இலங்கை இளையோர் அணி சார்பாக இறுதியாக ரோயல் கல்லூரியின் நட்சத்திர வீரர் துளைப் ஹசன் ட்ரை வைத்தார். பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் காட்டிய அதே வேகத்தை உபயோகித்து சீன வீரர்களை ஹசன் இலகுவாக கடந்தார். ஹரித் பண்டார கொன்வெர்சனை 3ஆவது முறையாகவும் சிறப்பாக பூர்த்தி செய்தார். (இலங்கை 26 – 14 சீனா)

முதலாம் பாதியில் 9 புள்ளிகளால் பின்தள்ளி காணப்பட்டாலும், இரண்டாம் பாதியில் காட்டிய அதீத திறமையின் மூலம் இலங்கை அணி 14 நிமிடங்கள் முடிவில் வெற்றியை சுவீகரித்தது .

முழு நேரம்: இலங்கை 26 (4T 3C ) – 14 (2T 2C ) சீனா

புள்ளிகள் பெற்றோர்

இலங்கை – தினுக் அமரசிங்க 2T, நவீன் 1T, துளைப் ஹசன் – 1T, ஹரித் பண்டார 3C

சீனா – யென் லு 2T 2C


இலங்கை எதிர் சைனீஸ் தாய்பே

சீன அணியுடனான கடுமையான போட்டியின் பின்னர், இலங்கை அணி தனது 2ஆவது போட்டியில்  சைனீஸ் தாய்பே அணியை இலகுவாக வெற்றிகொண்டது. மொத்தமாக 6 ட்ரைகளை வைத்த இலங்கை இளையோர் அணியானது 38-15 என்ற புள்ளிகள் அடிப்படையில் சைனீஸ் தாய்பே அணியை தோற்கடித்தது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணியானது தொடர்ந்து 19 புள்ளிகளை பெற்று, ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது. தினுக் அமரசிங்க ஊடாக பந்தை பெற்றுக்கொண்ட கெமுனு சேதிய இலங்கை அணிக்கு முதலாவது ட்ரை வைத்ததோடு, ஆசிய போட்டிகளில் தனது முதலாவது ட்ரையையும் வைத்தார். (இலங்கை 07- 00 சைனீஸ் தாய்பே)

கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத்

தொடர்ந்து சீன அணியுடனான போட்டியின் நாயகன் தினுக் அமரசிங்க, ட்ரை கோட்டை கடந்து இலங்கை அணிக்கு 2ஆவது ட்ரையை பெற்றுக்கொடுத்தார். ஜனிது டில்ஷான் சைனீஸ் தாய்பே வீரர்களை கடந்து இலங்கை அணிக்கு 3ஆவது ட்ரையை பெற்றுக்கொடுத்தார். ஹரித் பண்டார 2 கொன்வெர்சனை மாத்திரம் சிறப்பாகப் பூர்த்திசெய்தார் (இலங்கை 19 – 00 சைனீஸ் தாய்பே)

சைனீஸ் தாய்பே அணியின் சென் வூ தனிமையாக தனது திறமையை வெளிக்காட்டி தனது அணிக்கு முதலாவது புள்ளியை பெற்றுக்கொடுத்தார். எனினும் அடுத்த நிமிடமே பல சைனீஸ் தாய்பே வீரர்களை கடந்து சென்ற ஜனிது டில்ஷான் மற்றுமொரு ட்ரை வைத்தார். (இலங்கை 26 – 05 சைனீஸ் தாய்பே)

முதல் பாதி: இலங்கை 26 – 05 சைனீஸ் தாய்பே

இரண்டாம் பாதி ஆரம்பத்தில் சைனீஸ் தாய்பே அணி அபாரமாக விளையாடி இலங்கை அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளியது. தொடர்ந்து இரண்டு ட்ரைகளை வைத்த சைனீஸ் தாய்பே அணியானது, இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசத்தை 11 ஆக குறைத்தது. (இலங்கை 26 – 15 சைனீஸ் தாய்பே)

எனினும் போட்டி முடிவடைய முன்னர் துளைப் ஹசன் மற்றும் ரெண்டி சில்வா மூலமாக மேலும் இரண்டு ட்ரைகளை வைத்த இலங்கை இளையோர் அணியானது போட்டியை இலகுவாக வென்றது. இதன் மூலம் இலங்கை இளையோர் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எனினும் நாளை (11) சிங்கப்பூர் அணியுடனான போட்டியின் பின்னரே, அரையிறுதியில் எந்த அணியை எதிர்கொள்ளும் என தீர்மானிக்கப்படும். இலங்கை இளையோர் அணி ஹொங்கொங் அல்லது தென் கொரிய அணியுடனே அரையிறுதியில் மோதவுள்ளது.

முழு நேரம்: இலங்கை 38 (6T ,4C ) – 15 (3T ) சைனீஸ் தாய்பே

புள்ளிகள் பெற்றோர்

இலங்கை – ஜனிது டில்ஷான் 2T, கெமுனு சேதிய 1T, தினுக் அமரசிங்க 1T, துளைப் ஹசன் 1T, ரெண்டி சில்வா 1T, ஹரித் பண்டார 3C, சதுர செனவிரத்ன 1C

சைனீஸ் தாய்பே – லென் வென் யூ 1T, சின் லியு 2T

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<