43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாள் மெய்வல்லுனர் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயம் முக்கிய இடத்தை வகித்தது. இதில் வருடத்தின் அதிவேக குறுந்தூர வீரர் யார் என்பது தொடர்பில் பலருக்கும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனாலும் தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான் மற்றும் தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப்பதக்கத்தை வென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் அஷ்ரப்புக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியதுடன், தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்ரப், போட்டி தூரத்தை 10.86 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற 100 மீற்றர் தகுதிகாண் போட்டியில் முதலிடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவான அஷ்ரப் இறுதிப் போட்டியில் 5ஆவது சுவட்டிலும், ஹிமாஷ ஏஷான் 4ஆவது சுவட்டிலும் ஓடியிருந்தனர்.

தேசிய விளையாட்டு விழாவில் 2ஆவது தேசிய சாதனை முறியடிப்பு

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாளான…

போட்டியின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக முதல் 40 மீற்றர் வரை சற்று பின்னிலையில் அஷ்ரப் காணப்பட்டார். இதன்காரணமாக தனது வழமையான வேகத்தை மேற்கொள்ளத் தவறிய அவர், இறுதியில் பலத்த போட்டிக்கு மத்தியில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும் அவருக்கு அடுத்த சுவட்டில் ஓடியிருந்த ஹிமாஷ, போட்டியின் ஆரம்பம் முதல் வழமையான வேகத்தில் ஓடி, ஏனைய வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன்படி அவர் குறித்த தூரத்தை 10.76 செக்கன்களில் நிறைவு செய்து தேசிய விளையாட்டு விழாவில் மற்றுமொரு தங்கப்பதக்கத்தை வென்று இவ்வருடத்தின் அதிவேக வீரராக முடிசூடினார்.

இலங்கையின் முன்னணி பயிற்றுவிப்பாளர்களான சுனில் குணவர்தன மற்றும் பத்ரா குணவர்தனவிடம் தனது பயிற்சிகளைப் பெற்று வருகின்ற அஷ்ரப், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கத்தை வென்றதுடன், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை மயிரிழையில் இழந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இம்மாத முற்பகுதியில் தியகமவில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றரில் கலந்துகொண்ட அவர், போட்டியை 10.71 செக்கன்களில் ஓடி முடித்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கிரிகிஸ்தான் திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றி ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 10.51 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்று இவ்வருடத்துக்கான சிறந்த காலத்தையும் அஷ்ரப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஷ்ரபுக்கு சவாலளிக்கும் வகையில் 3ஆவது சுவட்டில் ஓடியிருந்த தென் மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.எல் விக்ரமசிங்க, போட்டியை 10.85 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப்பதக்கம் வென்று அஷ்ரப்பை விட ஒரு செக்கனில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் பாஸில் உடையாரும் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டதுடன், அவர் போட்டியை 10.94 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தடை தாண்டலில் இல்ஹாமுக்கு தோல்வி

Woshim ilham

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாளான இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டலில் தங்கப்பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.வொஷிம் இல்ஹாம், போட்டியை 14.88 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டல் தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட வொஷிம் இல்ஹாம், போட்டித் தூரத்தை 15.23 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அண்மையில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட அவர், போட்டித் தூரத்தை 14.57 செக்கன்களில் நிறைவு செய்து இவ்வருடத்துக்கான தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவு செய்திருந்தார்.

ஆனால், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தடை தாண்டலில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக கலந்துகொண்ட வொஷிம் இல்ஹாம், போட்டி தூரத்தை 14.90 செக்கன்களில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்று தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், ”போட்டியின் ஆரம்பத்தின் போது ஏற்பட்ட தாமதம் மற்றும் நேற்றைய தகுதிகாண் போட்டியின் போது காலில் ஏற்பட்ட சிறு உபாதை காரணமாகவும் என்னால் இன்றைய இறுதிப் போட்டியில் சிறப்பாக ஓட முடியாமல் போனது. அத்துடன் கடந்த காலங்களில் சுவட்டு மைதானங்களில் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததால் புற்தரை சுவட்டில் ஓடுவதில் சற்று அசௌகரியத்தை உணர்ந்தேன். இதனால் எனது வழமையான ஓட்டத்தை பெற முடியாமல் தோல்வியை சந்தித்தேன்.

எனினும், எனது தனிப்பட்ட காலத்தை மீண்டும் புதுப்பிக்க கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சிடைகிறேன். அத்துடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றி எனது சிறந்த காலத்தைப் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.

25 வயதான வொஷிம் இல்ஹாம், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை மேற்கொண்ட வொஷிம், பாடசாலைக் கல்வியின் பிறகு ஜெயலால் ரத்னசூரியவிடம் பயிற்சிகளைப் பெற்றுவந்து, தற்போது விளையாட்டுத்துறை அதிகாரியும் பயிற்றுவிப்பாளருமான மஞ்சுள ராஜகருணாவிடம் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேல் மாகாணத்தைச் சேர்ந்த பி.எச் விமலசிறி, 14.55 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஆர். டி ரணதுங்க, 14.74 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப்பதக்கத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த எஸ். ரந்திவ, போட்டியை 14.80 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.