இம்முறை ஆஷஸ் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா

228
smith-marsh

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2017/2018 பருவகாலத்திற்கான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ச்சியாக முதல் 3 போட்டிகளையும் கைப்பற்றி ஆஷஸ் கிண்ணத்தினை தன்வசப்படுத்தியது அவுஸ்திரேலிய அணி.

இரண்டாவது போட்டியின் விபரம்

ஏற்கனவே இரு போட்டிகளிலும் ஆஸி அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் பேர்த்தில் நடைபெற்ற 3ஆவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 403 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து சார்பாக டேவிட் மாலன் 140 ஓட்டங்களையும், ஜோன்னி பர்ட்சோ 119 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் இறுதி 4 விக்கெட்டுக்களும் வெறும் 34 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தமையினால் அவ்வணியினால் எதிர்பார்த்த இலக்கினை அடைய முடியவில்லை.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக களம் புகுந்த அவுஸ்திரேலிய அணி மிக வலுவான ஒரு ஓட்ட எண்ணிக்கையினை பெற்றது. ஆஸி வீரர்கள் 9 விக்கெட்டுக்களை இழந்து 662 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டனர்.

ஆரம்ப விக்கெட்டுக்கள் தொடர்ச்சியான இடைவெளிகளில் வீழ்ந்த போதிலும் அணித் தலைவர் ஸ்மித் பெற்ற அபாரமான இரட்டைச் சதம் மற்றும் மிச்சல் மார்ஷ் பெற்ற சதத்தின் உதவியினால் அவுஸ்திரேலிய அணி இமாலய ஓட்ட எண்ணிக்கையினைப் பெற்றது. இதன்போது ஸ்மித் 239 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் மிச்சல் மார்ஷ் 181 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இது தவிர அவ்வணி சார்பாக உஸ்மான் கவாஜா 50 ஓட்டங்களையும், டிம் பெய்ன் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் 5ஆம் நாள் தமது 2ஆவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாது தடுமாறியது. ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழக்க ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் டேவிட் மாலன் அரைச் சதங்களைக் கடந்த போதும் அவர்களால் களத்தில் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை.

டேவிட் மாலன் 54 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். இறுதியாக க்றிஸ் வோக்ஸ் மிச்சல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெறும் 218 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இதனால் இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் தொடரின் 3ஆவது போட்டியையும் வென்று இம்முறை ஆஷஸ் தொடரினையும் கைப்பற்றியது அவுஸ்திரேலியா. போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் தெரிவானார்.

இரு அணிகளுக்குமிடையிலான 4ஆவது போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி மெல்பர்னில் நடைபெறும்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 403/10 (115.1) ஜோன்னி பர்ட்சோ 119, டேவிட் மாலன் 140, மார்க் ஸ்டோன்மன் 56, மிச்சல் ஸ்டார்க் 4/91, ஜோஸ் ஹசல்வுட் 3/92, பெட் கம்மின்ஸ் 2/84, நதன் லியோன் 1/73

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 662/9d ஸ்டீவன் ஸ்மித் 239, மிச்சல் மார்ஷ் 181, உஸ்மான் கவாஜா 50, டிம் பெய்ன் 49*. ஜேம்ஸ் அண்டர்சன் 4/116, கிரெய்க் ஓவர்டன் 2/110.

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 218/10 (72.5) ஜேம்ஸ் வின்ஸ் 55, டேவிட் மாலன் 54, ஜோஸ் ஹஸல்வுட் 5/48, பெட் கம்மின்ஸ் 2/53, நதன் லியோன் 2/42, மிச்சல் ஸ்டார்க் 1/44.