அசேல குணரத்னவின் அதிரடி துடுப்பாட்டம் நம்ப முடியாத அசாத்திய துடுப்பாட்டம் என ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி குறித்த 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ஓட்டங்களை குவித்திருந்தது. எனினும், அந்தப் போட்டியில் ஆரோன் பின்ச் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியிருந்தது.

அதேநேரம் குறித்த போட்டியில் இலங்கை அணியும் துடுப்பாட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தியிருந்த போதிலும், களத்தடுப்பின் போது விட்ட சில தவறுகளால் போட்டி கை நழுவிச்சென்றது.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அஞ்சலோ மெதிவ்ஸ், ”துடுப்பாட்டத்திற்கு கடினமான அந்த களத்தில் எமது துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பாடியிருந்தார்கள். அத்துடன் சாமர கபுகெதர மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் என்னுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். அந்த வகையில், நாம் ஒரு அணியாக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தோம், பந்து வீச்சு எங்களுக்கு சற்று சவாலாக இருந்தது. எனினும் எங்களுடைய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றே நினைகின்றேன்” என்று கூறினார்.  

31 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரரான அசேல குணரத்ன, குறித்த போட்டியில் அஞ்சலோ மெதிவ்சுடன் இணைந்து 56 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசியிருந்தார். அத்துடன் கடந்த அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மொத்தமாக 140 ஓட்டங்களை பதிவு செய்திருந்த அதேவேளை இலக்கை எண்ணியும் பார்க்க முடியாத ஒரு இக்கட்டான ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை அதிரடியாக விளாசி குறித்த தொடரை கைப்பற்றுவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தார்.

அவர் ஒரு வியக்கத்தக்க வீரர். அதிகளவிலான சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றவில்லையெனினும் துடுப்பாட்டத்தின் போது சிறந்த நுணுக்கங்களை கையாள்கின்றார். நிறைய உள்ளூர் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். எதிர்வரும் போட்டிகளில் அவரை தொடர்ந்து எமது அணி சார்பாக களமிறக்கி அவருடைய பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

இனிவரும் போட்டிகளில் மேலும் சிறப்பாக செயற்பட எதிர்பார்த்துள்ளோம். போட்டியின் போது தவறுகளை குறைந்த மட்டத்தில் வைத்திருக்கும் அணிக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், தவறுகளைக் குறைத்து சாதகமான பெறுபேறுகளை எதிர்பார்க்கின்றோம் என்று மேலும் அஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.

இலங்கை அணி பங்குபெறும் சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதலாவது போட்டி தென்னாபிரிக்க அணியுடன் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி ஓவல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள அதேநேரம் அவுஸ்திரேலிய அணி, பர்மிங்ஹமில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.