ரஹ்மானின் இரண்டு கோல்களால் இராணுவப்படைக்கு மற்றொரு வெற்றி

346

டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் மற்றொரு போட்டியில் தமது அணியின் பின்கள வீர் அசிகுர் ரஹ்மான் பெற்ற இரண்டு கோல்களின் உதவியுடன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழக அணி மொறகஸ்முல்ல விளையாட்டுக் கழக அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

பெத்தகான கால்பந்து பயிற்சி நிலைய செயற்கைப் புற்தரை மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டம் ஆரம்பமாகி 3ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ஹெடர் மூலம் கோலுக்குள் அனுப்பிய அசிகுர் ரஹ்மான் இராணுவப்படை அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.  

பின்னர் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் மொறகஸ்முல்ல யுனைடட் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை சாமர குனசேகர பெற்றார். அவர் எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் செலுத்திய பந்தை பெற வந்த வீரரை அசிகுர் ரஹ்மான் முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக மொறகஸ்முல்ல அணியினருக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டியைப் பெற்ற இளம் வீரர் டிலான் மதுசங்க பந்தை கோலுக்குள் செலுத்தி ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.

எனினும் மேலும் இரண்டு நிமிடங்கள் கடந்து இராணுவத் தரப்பினரால் எதிரணியின் கோல் எல்லைக்குள் உயர்த்தி செலுத்தப்பட்ட பந்தை மொறகஸ்முல்ல வீரர் சமன்த கையால் தட்டினார். இதனால் இராணுவத் தரப்பினருக்கு கிடைத்த பெனால்டியை பிரபல வீரர் மொஹமட் இஸ்ஸடீன் கோலாக்கினார்.

அதன் பின்னரும் இராணுவப்படை வீரர்களுக்கு கிடைத்த பல வாய்ப்புக்கள் கோலுக்கு அண்மையில் வரை கொண்டுவரப்பட்டும், இறுதியில் சிறந்த நிறைவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

28ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் மிக வேகமாக செயற்பட்ட மொறகஸ்முல்ல வீரர்கள், பந்துப் பரிமாற்றங்கள் பலவற்றின் இறுதியில் தமக்கான இரண்டாவது கோலைப் பெற்றனர். எனினும், குறித்த கோல் ஓப் சைட் என நடுவரால் தெரிவிக்கப்பட்டமையினால் அவர்களுக்கான வாய்ப்பு வீணானது.

சில நிமிடங்களின் பின்னர் இராணுவப்படை அணியினருக்கு எதிர் தரப்பின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் இருந்து ப்ரீ கிக் வாய்பொன்று கிடைத்தது. அதனை அசிகுர் ரஹ்மான் பெற்று உதைய, பந்து முன்னால் இருந்த தடுப்பு வீரரின் உடலில் பட்டு திசை மாறியது.

மீண்டும் எதிரணியின் பெனால்டி எல்லையில் வைத்து அவர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போதும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

முதல் பாதி: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 2 – 1 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்  

இரண்டாவது பாதி ஆரம்பமாகியவுடனேயே மொறகஸ்முல்ல வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை சாமர குனசேகர பெற்றார். எனினும் அவர் உதைந்த பந்து கம்பங்களை விட உயர்ந்து சென்றது.

சில நிமிடங்களில் அணியின் சக வீரரிடம் இருந்து பெற்ற பந்தை மொஹமட் இஸ்ஸடீன் தொடர்ந்து பல தடவைகள் கோலுக்காக முயற்சி மேற்கொண்ட போதும், அவை அனைத்தும் சிறந்த பலனைக் கொடுக்கவில்லை.

மீண்டும் அவ்வணியின் முன்கள வீரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் இஸ்ஸடீனிடம் வந்த பந்தை அவர் கோலுக்குள் அடிக்கும்பொழுது பந்தை மொறகஸ்முல்ல கோல் காப்பாளர் பன்டார கொடகுபுர வெளியே தட்டி விட்டார்.

இராணுவப்படை அணிக்கு எதிரணியின் மத்திய களத்தில் கிடைத்த ப்ரீ கிக்கை அசிகுர் ரஹ்மான் பெற்று உதைய, தன்னிடம் வந்த பந்தை மொறகஸ்முல்ல கோல் காப்பாளர் பன்டார வெளியே தட்டிவிட்டார்.

மீண்டும் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை இராணுவப்படை வீரர் சஜித் குமார கோலுக்குள் உதைந்தார். எனினும் பந்து கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

அதற்கு இரண்டு நிமிடங்களின் பின்னர் மத்திய களத்தில் இருந்து வந்த பந்தைப் பெற்ற டிலான் மதுசங்க, இராணுவத்தின் பின்கள வீரர்கள் பலரைத் தாண்டி பந்தை எடுத்து வந்து தனது சகோதரர் ரொஷான் பியவன்சவிடம் வழங்கினார். எனினும் அவர் பந்தை இராணுவப்படை அணியின் கோல் காப்பாளர் மொஹமட் லுத்பியின் கைகளுக்கே அடித்தார்.

சில நிமிடங்களில் எதிரணியின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் மைதானத்தில் இடதுபுறத்தில் வைத்து மொறகஸ்முல்ல அணிக்கு கிடைத்த ப்ரீ பிக்கை பெற்ற டிலான், கோலை இலக்கு வைத்து உதைந்த பந்து மேல் கம்பத்திதல் பட்டு வெளியேறியது.

ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் இராவப்படை அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கைப் பெற்ற அசிகுர் ரஹ்மான், மிக நீண்ட தூரத்தில் இருந்து பந்தை நேராக கோலுக்குள் உதைந்தார். இதன்போது கோல் காப்பாளரால் தடுக்கப்பட வேண்டிய பந்துக்கான எந்த முயற்சியும் பன்டார மூலம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, படைத் தரப்பினர் தமக்கான மூன்றாவது கோலையும் பதிவு செய்தனர்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் இரு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், மேலதிக இரண்டு கோல்களைினால் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 3 – 1 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்  

கோல் பெற்றவர்கள்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – அசிகுர் ரஹ்மான் 03’ & 83’, மொஹமட் இஸ்ஸடீன் 13’

மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் – டிலான் மதுசங்க 11’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சஜித் குமார 68’

மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் – S.சமன்த 73’, அகில சுரேஷ் 89’