சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற FA கிண்ணத்தின் முதலாவது காலிறுதிப் போட்டியில் சுப்பர் சன் அணியை 12-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் ராணுவப்படை அணி அடுத்த சுற்றான அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.

பலம் பொருந்திய ராணுவப்படை அணி இறுதி 64 அணிகளைக் கொண்ட சுற்றில் மாயா விளையாட்டுக் கழக அணியை வோக் ஓவர் முறை மூலம் வெற்றி கொண்டது. அதன் பின்னர் ஈஸ்வரன் விளையாட்டுக் கழக அணியை 20-0 எனவும், காலிறுதிக்கு முன்னைய சுற்றில் கடற்படை அணியை 4-1 எனவும் வெற்றியீட்டியது.

மறுபக்கம் சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் தனது முதல் போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினை 3-0 என்று வீழ்த்தி, பின்னர் செரண்டிப் அணியை 2-0 என வெற்றி கொண்டது. இறுதியாக யாழ்ப்பாணத்தின் பலம் பொருந்திய அணியான சென் மேரிஸ் அணியை 1-0 என வெற்றி கொண்டு காலிறுதிக்குள் நுழைந்தது.

காலிறுதிக்கு தெரிவாகிய அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?

எனினும், தீர்மானம் மிக்க இந்தப் போட்டியில் சுப்பர் சன் அணி திறமை மிக்க ராணுவப்படை அணியிடம் கடும் சவாலை சந்தித்தது. போட்டியின் ஆரம்பத்திலிருந்து தமது ஆதிக்கத்தினை ராணுவப்படை வெளிக்காட்டியது. சுப்பர் சன் அணி களத்தடுப்பினை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது.

ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புக்களை தடுக்க முனைந்தால் தேவையற்ற சவால்களுக்கு தம்னை ஈடுபடுத்திய சில்மி ஹசன் மற்றும் மொஹமட் ரிப்கான் ஆகியோர் மஞ்சள் அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் போட்டியின் முதலாவது கோலினை ராணுவப்படை பெற்றது. கோல் காப்பாளரின் தவறினை பயன்படுத்திய மொஹமட் இஸ்ஸடீன் தனது அணியை முன்னிலைப் படுத்தினார்.

தொடர்ந்து போட்டியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ராணுவப்படைக்கு இரண்டாவது கோலினை சஜித் குமார 29ஆவது நிமிடத்தில் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 31ஆவது நிமிடத்தில் மொஹமட் ரிம்ஸான் சுப்பர் சன் கோல் காப்பாளர் விட்ட தவறினை கோலாக மாற்றினார். 3 கோல்களுடன் நின்றுவிடாது மேலும் கோல் அடிக்க முயற்சித்தனர் ராணுவப்படை அணியினர்.

அதற்கு சிறந்த பயனாக, சஜித் குமார உள்ளனுப்பிய அழகான பந்தினை லாவகமாக கோலாக்கினார் மொஹமட் இஸ்ஸடீன்.

முதல் பாதி முடிவடையும் நேரத்தில் சஜித் குமாரவிற்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

முதல் பாதி: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 4 – 0 சுப்பர் சன் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பமாகி முதலாவது நிமிடம் முடியும் முன்பே ராணுவப்படை அணி ஐந்தாவது கோலினை பெற்றது. மொஹமட் இஸ்ஸடீன் அவருக்கு வழங்கப்பட்ட பந்தினை லாவகமாக தடுக்க வந்த கோல் காப்பாளருக்கு மேலாக உயர்த்தி, இந்த தொடரின் தனது மற்றொரு ஹட்ரிக்கை பூர்த்தி செய்தார்.

காலிறுதி மோதலுக்குள் நுழைந்த ராணுவப்படை மற்றும் ரினௌன் அணிகள்

தொடர்ந்து மொஹமட் ரிம்ஸான் தனது இரண்டாவது கோலினை பூர்த்தி செய்தார். அவர் அடித்த வலுவான பந்து கோலாக மாறியது.

தொடர்ந்தும், சந்திரசேகர ராணுவப்படை அணியின் ஏழாவது கோலினை 56ஆவது நிமிடத்தில் பெற்றுக் கொடுத்தார். அவர் இஸ்ஸடீன் வழங்கிய பந்தை இலகுவாக தட்டி பந்தை கோலாக மாற்றினார்.

போட்டியில் சுப்பர் சன் அணிக்கு கிடைக்கப்பெற்ற சொற்ப வாய்ப்புக்களையும் ராணுவப்படை களத்தடுப்பாளர்கள் சமாளித்து, எதிரணியினர் கோலடிக்க விடாது தடுத்தனர்.

அதன் பின்னரும், அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய சந்திரசேகர 3 கோள்களை சாரமாரியாக தொடர்ந்து அடிக்க, ராணுவப்படை அணி 10 கோல்களை எட்டியது. சந்திரசேகர முறையே 73, 76, மற்றும் 78ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றார்.

போட்டியின் இறுதி நிமிடங்கள் அண்மித்துக்கொண்டிருக்கையில், 84ஆவது நிமிடத்தில் சந்திரசேகர அனுப்பிய பந்தினை மதுஷான் டி சில்வா கோலாக மாற்றினார்.

இறுதி நொடி வரையிலான போராட்டத்தில் யாழ் சென் மேரிசை வீழ்த்தியது சுபர் சன்

மீண்டும் 89ஆவது நிமிடத்தில் சந்திரசேகர தனது 5ஆவது கோளினை நிறைவுசெய்ய, ராணுவத் தரப்பு 12 கோல்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் இறுதி மணித்துளிகளில் சப்ராஸ் கயிஸ் சுப்பர் சன் அணிக்காக ஒரு கோளினைப் பெற்று ஆறுதல் கொடுத்தார்.

முழு நேரம்: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 12 – 1 சுப்பர் சன் விளையாட்டுக் கழகம்  

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – திவன்க சந்திரசேகர (ராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

போட்டி முடிவடைந்த பின்பு பயிற்றுவிப்பாளர்களை சந்தித்த போது, ராணுவப்படை அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் பௌமி, “போட்டி மிகவும் திருப்தியாக அமைந்தது. வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக ஆரம்பத்திலேயே கோல்கள் அடித்ததால் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிந்தது. எங்களுக்கு இந்த மைதானம் போன்ற தரமான மைதானங்கள் மிகவும் அவசியமாகும்.” என்றார்.

சுப்பர் சன் அணியின் பயிற்றுவிப்பாளர் நூர்தீன், “இப்போட்டி மிகவும் துரதிஷ்டவசமானது. இதற்கான பொறுப்பினை வீரர்களே ஏற்க வேண்டும். போதிய அளவில் பயிற்சிகள் நடைபெறவில்லை. இப்போட்டியிலிருந்து கற்றுக்கொண்டு, எதிர்வரும் போட்டிகளில் அவற்றை திருத்த வேண்டும்.” என்றார்.

கோல் பெற்றவர்கள்

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மொஹமட் இஸ்ஸடீன் 18’, 37’ & 46’, சஜித் குமார 29’, மொஹமட் ரிம்ஸான் 30’ & 57’, திவன்க சந்திரசேகர 60’, 73’, 76’, 78’ & 89, மதுஷான் டி சில்வா 87’

சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் – சப்ராஸ் காயிஸ் 90’

மஞ்சள் அட்டைகள்

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சஜித் குமாரா 42’,

சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் – சில்மி ஹசன் 10’, மொஹமட் ரிப்கான் 12’, சப்ராஸ் காயிஸ்69’, மொஹமட் பயாசில் 72“

Highlights - Army SC v Super Sun SC