இராணுவ மெய்வல்லுனரில் பிரகாசித்த மலையக மற்றும் கிழக்கு வீரர்கள்

420

55ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ப் தொடர் அண்மையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

வருடத்தின் இறுதி மெய்வல்லுனர் போட்டித் தொடராகவும், இலங்கை இராணுவத்தில் உள்ள படைப்பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற ஒரே தொடராகவும் இடம்பெறும் இம்முறை போட்டிகள் கடந்த 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 2 இலங்கை சாதனைகளுடன், 4 இராணுவ சாதனைகளும், 12 போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

அத்துடன், இம்முறை வருடத்தின் அதி சிறந்த இராணுவ மெய்வல்லுனர் வீரருக்கான விருதை நீளம் பாய்தல் வீரர் ஜானக பிரசாத் விமலசிறி தட்டிச் சென்றார்.

முப்பாய்ச்சல் நடப்புச் சம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார் சப்ரின்

44 ஆவது தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவையில்..

இதேநேரம், வருடத்தின் அதி சிறந்த ஆண் மெய்வல்லுனராக மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் ஆசிய மற்றும் தெற்காசிய சம்பியனான இராணுவ பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த அருண தர்ஷனவும், பெண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனராக இராணுவ மகளிர் படைப் பிரிவைச் சேர்ந்த முப்பாய்ச்சல் வீராங்கனையான விதூஷா லக்ஷானியும் தெரிவாகினர்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீரர்கள் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், கிழக்கு மாகாண வீரர்களான மொஹமட் அசாம் ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூதூரைச் சேர்ந்த மொஹமட் நிப்ராஸ் வெள்ளிப் பதக்கத்தையும் முதற்தடவையாக வென்று அசத்தியிருந்தனர்.

அத்துடன், ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் இஸட்.ரி.எம் ஆஷிக், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சப்ரின் அஹமட் மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றரில் மொஹமட் அஷ்ரப் ஆகியோர் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

சண்முகேஸ்வரணுக்கு முதல் பதக்கம்

இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரின் மூன்றாவது நாள் காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 35.55 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இவ்வருடத்துக்கான தனது சிறந்த நேரத்தையும் பதிவு செய்தார்.

இதேநேரம், ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த அவர், 14 நிமிடங்கள் 27.05 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றெடுத்தார்.

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த சண்முகேஸ்வரன், இவ்வருடம் நடைபெற்ற 7 முக்கிய போட்டித் தொடர்களில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

அத்துடன், கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தி பங்குகொண்ட அவர், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

ஆஷிக்கிற்கு ஹெட்ரிக் தங்கம்

இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூரைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான இஸட்.ரி.எம் ஆஷிக் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 45.21 மீற்றர் தூரம் எறிந்து இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக 3ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்.

எனினும், கடந்த 2 வாரங்களுக்கு முன் பொலன்னறுவையில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் இதே போட்டியில் கலந்துகொண்ட ஆஷிக், 44.66 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

முன்னதாக, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டிகளிலும் பங்குபற்றிய அவர், தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அசாம் அபாரம்

இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் (டெகல்தன்) பங்குகொண்ட நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அசாம், முதற்தடவையாக இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவ்வருடம் முதல் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அசாம், ஆண்களுக்கான 10 அம்ச போட்டிகளில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் வெள்ளிப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இம்முறை இராணுவ மெய்வல்லுனரில் இரண்டு தினங்களாக நடைபெற்ற குறித்த போட்டியில் 100 மீற்றர் (3ஆவது இடம்), நீளம் பாய்தல் (2ஆவது இடம்), குண்டு போடுதல் (2ஆவது இடம்), ஈட்டி எறிதல் (3ஆவது இடம்), 1500 மீற்றர்(3ஆவது இடம்), பரிதி வட்டம் (2ஆவது இடம்), கோலூன்றிப் பாய்தல் (2ஆவது இடம்), 400 மீற்றர் (2ஆவது இடம்), 110 மீற்றர் சட்டவேலி ஓட்டம் (2ஆவது இடம்), உயரம் பாய்தல் (2ஆவது இடம்) ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய அவர் 6706 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

தேசிய இளைஞர் மெய்வல்லுனர் இரண்டாம் நாள் முடிவுகள்

30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின்..

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த அஜித் கருணாதிலக்க (6810 புள்ளிகள்) தங்கப் பதக்கத்தையும், இராணுவ பொதுச் சேவை படைப் பிரிவைச் சேர்ந்த எச். சதுரங்க (6261 புள்ளிகள்) வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு இரண்டாமிடம்

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட், 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். காலில் ஏற்பட்ட உபாதைக்கு மத்தியில் குறித்த போட்டியில் கலந்துகொண்ட அவர், 15.44 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த 2 வாரங்களுக்கு முன் பொலன்னறுவையில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் இதே போட்டியில் பங்குகொண்ட சப்ரின் அஹமட், 15.80 மீற்றர் தூரம் பாய்ந்து முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அத்துடன், கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனரில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட அவர், 16.22 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று தனது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஷ்ரப்புக்கு மூன்றாமிடம்

இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இவ்வருடத்தின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் 100 மீற்றர் இறுதிப் போட்டி தொடரின் இறுதி நாள் மாலை நடைபெற்றது. இதில் இராணுவ பீரங்கி படைப்பிரிவைச் சேர்ந்த ஹிமாஷ ஏஷான் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 10.4 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இதேநேரேம், பொத்துவிலைச் சேர்ந்த மொஹமட் அஷ்ரப், 10.5 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அஷ்ரப், கடந்த ஜீலை மாதம் டைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 5ஆவது இடத்தையும், இறுதியாக நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடரில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிப்ராஸுக்கு முதல் பதக்கம்

இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் பேட்டியில் முதற்தடவையாக பங்குகொண்ட திருகோணமலை மாவட்டம், மூதூரைச் சேர்ந்த ஆர்.எம் நிப்ராஸ், வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 3 நிமிடங்கள் 56.38 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

மூதூர் அல்ஹிலால் மற்றும் அல்மினா பாடசாலைகளில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்ட நிப்ராஸ், தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்று வருகின்றார்.

கல்வியைப் போல மெய்வல்லுனர் விளையாட்டிலும் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்த நிப்ராஸ், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் 3ஆவது இடத்தையும், 2017இல் நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 1500 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் வென்று தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பதிவுசெய்தார்.

இதனையடுத்து இவ்வருடம் முதல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட அவர், கடந்த வாரம் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 1500 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

தேசிய விளையாட்டு விழா இரண்டாம் நாளில் புவிதரனுக்கு வெள்ளிப் பதக்கம்

பொலன்னறுவை தேசிய விளையாட்டரங்கில்..

சந்திரதாசனுக்கு வெண்கலப் பதக்கம்

ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட செல்வரத்னம் சந்திரதாசன் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 9 நிமிடங்கள் 09.37 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

அரைமரதன், நகர்வல ஓட்டப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் முன்னிலை வகிக்கின்ற வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரதாசன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகளில் 4ஆவது இடத்தையும், குழுநிலைப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிப்ரானுக்கு ஏமாற்றம்

ஆண்களுக்கான நீளம் பாய்தலில் இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட எம்..எம் மிப்ரான், 7.39 மீற்றர் தூரம் பாய்ந்து 8ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். இதன்படி, இராணுவ மெய்வல்லுனரில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் தோல்வியைத் தழுவினார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 7.75 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனையை நிகழ்த்திய மிப்ரான், கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதுஇவ்வாறிருக்க, அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பின்னடைவை சந்தித்து வந்த மிப்ரான், இறுதியாக நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட அவர், 7.34 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<