கண்ணீருடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வோர்னர்

2265
David Warner
Image Courtesy - AFP

கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால், ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்ட நிலையில், தனது தரப்பிலான தவறுக்காக உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உப தலைவரான டேவிட் வோர்னர், ”இனி ஒருபோதும் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை” என கண்ணீர் மல்க அறிவித்தார்.  

தென்னாபிரிக்காவுக்கு எதிராகக் கேப்டவுனில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர், கெமரூன் பேன்கிராப்ட் தனது காற்சட்டையில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிறப் சொரசொரப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் விஸ்வரூபம் எடுத்தது.

இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஒரு வருடங்கள் போட்டித் தடையும், பேன்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் போட்டித் தடையும் விதித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்ப உத்தரவிட்ட 3 பேரும் விசாரணைகளை அடுத்து கடந்த வியாழக்கிழமை அவுஸ்திரேலியா திரும்பினர்.

கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்

இதனையடுத்து, பந்தை சேதப்படுத்திய குற்றத்திக்காக, கடந்த 29 ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார்.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன், தென்னாபிரிக்காவுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் பிறகு தானும் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கண்ணீருடன் அறிவித்தார்.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முக்கிய காரணகர்த்தாவான டேவிட் வோர்னர் சிட்னியில் இன்று (31) செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னதாகத் தயாரித்து வைத்திருந்த செய்திக் குறிப்பை வோர்னர் வாசித்தார். ”அனைத்து அவுஸ்திரேலிய மக்களுக்கும் கிரிக்கெட் ரசிகராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதை மட்டுமே நான் இலக்காகக் கொண்டிருந்தேன்.

  • Image Courtesy - AFP

உதவி தலைவராக என் கடமையில் இருந்து நான் தவறிவிட்டேன். மன்னிக்க முடியாத குற்றம் இழைத்துவிட்டேன். தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள், அந்நாட்டு மக்களிடமும் உங்கள் மண்ணில் வைத்து இத்தகைய தவறு இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்துக்கு முழுப் பொறுப்பும் நான் தான். என் செயல் என் நாட்டின் செல்வாக்கின் மீது ஏற்படுத்திய தாக்கத்துக்கு நானே பொறுப்பு. கிரிக்கெட் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்க்கவே எண்ணினேன் அதற்காகத்தான் எதையோ செய்யப்போய் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. இதற்காக நான் வாழ்நாள் முழுதும் வருந்துவேன்.

நாங்கள் மிக மோசமான முடிவை எடுத்து நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டோம். இன்று இங்கு உட்கார்ந்து கொண்டு இவ்வாறு பேசுவது வருத்தத்தை அளிக்கிறது, காரணம் அங்கு அவுஸ்திரேலியா 4 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது, அதில் நாங்கள் விளையாடியிருக்க வேண்டும் என்பதை நினைக்கும் போது மனதை காயப்படுத்துகிறது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

ஸ்மித் அழுவதை கண்டு ஆஸி பயிற்றுவிப்பாளர் லீமனும் கண்ணீர் மல்க இராஜினாமா

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக போட்டித் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணித்

இந்த விவகாரத்திலிருந்து விடுபடவும் என்னை மாற்றிக்கொள்ளவும் அனுபவமிக்கவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவேன். தடைக் காலம் முடிந்த பின்னர், அவுஸ்திரேலியாவுக்காக மீண்டும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருந்தாலும் அது கடினம் என்றே கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

நீங்கள் எத்தகைய குற்றம் புரிந்துள்ளீர்கள் என்று உணர்ந்துதான் செய்தீர்களா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்விக்கு வோர்னர் பதிலளிக்கையில், ”விளைவுகளை உணர்ந்தே இருந்தோம், என்னைப் போன்றுதான் ஸ்மித்தும், பேன்கிராப்டும் இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அடுத்த 12 மாதங்கள் எங்களுக்குக் கடினமானதாக இருக்கப்போகிறது. அதிலும் அவுஸ்திரேலிய அணிக்கு மீண்டும் விளையாடுவது மற்றும் ஓய்வு பெறுவது குறித்து குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்க வேண்டியதுள்ளது. அவுஸ்திரேலிய மக்களிடம் மீண்டும் நன்மதிப்பைப் பெற வெகுகாலம் பிடிக்கும்” என்றார்.

இதற்கு முன்னதாகப் பந்தை சேதப்படுத்த முயன்றதாகப் புகார் எழுந்துள்ளதே? என்று கேட்டபோது, ”கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாள் ஆட்டத்தில் நடந்த விடயத்தை மட்டுமே பேச இங்கு வந்துள்ளேன்” என டேவிட் வோர்னர் பதில் அளித்தார்.

இறுதியாக, அவுஸ்திரேலிய மக்கள், சக வீரர்கள், கிரிக்கெட் தென்னாபிரிக்கா, மனைவி மற்றும் தன் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், ரசிகர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதேநேரம், பல கேள்விகளுக்கு வோர்னர் பதிலளிக்கவில்லை, ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்தவுடன் தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில், ”விடையளிக்காத கேள்விகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். நான் முழுதும் புரிந்து கொள்கிறேன். காலத்தில் நான் அனைத்தையும் விளக்குகிறேன். இப்போதைக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் முன் தீர்மானிக்கப்பட்ட நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது.

ஸ்மித், வோர்னர் மீதான தடை அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் – சங்கக்கார

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த 3ஆவது டெஸ்ட்

முறையான இடத்தில் தகுந்த நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பேன். நான் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதனைத் தெளிவுபடுத்தாமைக்கு மன்னிக்கவும். என் கிரிக்கெட்டுக்கும், குடும்பத்துக்குமான விஷயங்கள் பல இதில் அடங்கியிருப்பதால் நான் நடைமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது 31 வயதான டேவிட் வோர்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக போட்டித் தடைக்குள்ளாகியுள்ளமையால், பல கோடி ரூபாக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தனது அனுசரணையாளர்களை இழந்துள்ள அதேநேரம், ஐ.பி.எல் தொடரிலும் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.