கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீரர் புவிதரன் புதிய சாதனை

455

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்றைய தினம் (24) நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் சாதனைகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்படி இன்றைய தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 23, 20 மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் முறையே 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை அப்பகுதி மாணவர்கள் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆ. புவிதரன், 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

போட்டியின் ஆரம்பத்தில் 4.10, 4.20 மற்றும் 4.30 மீற்றர் உயரங்களை படிப்படியாகத் தாவிய புவிதரன், 4.40 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு மேற்கொண்ட கடைசி முயற்சியில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து 4.50 மீற்றர் உயரத்தை 2ஆவது முயற்சியிலேயே வெற்றிகரமாக தாவிய அவர், 4.62 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியில் வெற்றிகொண்டு 2017இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு விழாவில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சனால் (3.61 மீற்றர்) நிலைநாட்டிய போட்டி சாதனையை முறியடித்தார்.

அனித்தாவின் சாதனையுடன் கனிஷ்ட மெய்வல்லுனரில் 8 போட்டி சாதனைகள் முறியடிப்பு

கடும் வெயிலுக்கு மத்தியில் தனது தன்னம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி முன்னோக்கிச் சென்ற புவிதரன், அடுத்த இலக்காக 4.70 உயரத்தை தெரிவு செய்தார். எனினும், இந்த சுற்றின் முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய புவிதரன், 3ஆவது முயற்சியை வெற்றிகரமாகக் கடந்து தனது சொந்த சாதனையை மறுபடியும் புதுப்பித்தார்.

தொடர்ந்து இதே வெற்றிக் களிப்புடன் அடுத்த இலக்காக 4.75 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த போதிலும் அவரால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனது.

இறுதியில் முதல் தடவையாக 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்குபற்றி 4.70 மீற்றர் உயரத்தைத் தாவிய புவிதரன், போட்டி சாதனையுடன் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

முன்னதாக கடந்த இரு வருடங்களாக அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாக்களில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றியிருந்த புவிதரன் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போட்டியின் பிறகு எமது இணையத்துக்கு கருத்து வெளியிட்ட புவிதரன், ”உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. எனது வெற்றிக்கு உதவி செய்த எனது பயிற்றுவிப்பாளர் கணாதீபன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது பாடசாலைக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து என்று சொல்லலாம். அதுவும் அவரது பயிற்றுவிப்பின் கீழ் சாதனை படைக்க முடிந்தமை புண்ணியம் என கருதுகிறேன். எனது இந்த வெற்றிக்கான அனைத்து கௌரவங்களும் அவரையே சாரும். அதேபோன்று எனது பாடசாலை  விளையாட்டுத்துறை ஆசிரியர் மதனரூபன், பழைய மாணவர் சங்கம், எனது அம்மா மற்றும் உறவினர்களுக்கும், எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி. இப்போட்டித் தொடருக்கு வருவதற்கு முன்பே இதைவிடவும் அதிகமான உயரத்தை தாவ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்தேன். தொடர்ந்து கோலூன்றிப் பாய்தலில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய சாதனையை முறியடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்” எனவும் தெரிவித்தார்.

தனது 11ஆவது வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த புவிதரன், தற்போது கோலூன்றிப் பாய்தலில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக சிறு கைத்தொழிலில் ஈடுபட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியது மாத்திரமல்லாது, ஒவ்வொரு போட்டித் தொடருக்காகவும் புவிதரனை உற்சாகப்படுத்தி வெற்றியுடன் வா மகனே என்று சொல்லும் அளவுக்கு புவிதரனின் தாய் அனைவருக்கும் உதாரணமாக இடம்பிடித்துவிட்டார்.

தரம் 11இல் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளுக்காக காலடி எடுத்து வைத்த புவிதரன், 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வந்துள்ளார். எனினும், ஓட்டப் போட்டியில் எதிர்பார்த்தளவு முன்னேற்றத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. எனவே மைதான நிகழ்ச்சிகளில் மிகவும் ஆபத்தான போட்டியாகக் கருதப்படுகின்ற கோலூன்றிப் பாய்தலை அவர் தெரிவுசெய்து தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்று படிப்படியாக வெற்றிகளையும் பதிவுசெய்து வந்தார்.

புதிய அனுபவத்துடன் சொந்த தேசிய சாதனையை முறியடித்த அனித்தா

உண்மையில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் ஒரு கட்டத்தில் தேசிய சாதனையாக உள்ள 5.00 மீற்றர் உயரத்தையும் புவிதரன் தாவி விடுவார் என அங்கிருந்த போட்டி நடுவர்கள், ஊடகவியலாளர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். எனினும், பாடசாலை வீரரும் குறைவான அனுபவமும் கொண்ட என்னாலும் இதைவிடவும் அதிகமான உயரத்தை தாவ முடியும் என்ற தன்னம்பிக்கையையும், எச்சரிக்கையையும் புவிதரன் உணர்த்திவிட்டு சென்றார் என்றே சொல்லலாம்.

எனவே கோலூன்றிப் பாய்தலில் வருடா வருடம் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா ஜெகதீஸ்வரனைப் போன்று கோலூன்றிப் பாய்தல் ஆண்கள் பிரிவிலும் சாதனை படைக்கின்ற வீரர்கள் வடக்கிலிருந்து இன்னும் இன்னும் உருவாக வேண்டும் எனவும், அதிலும் குறிப்பாக இன்று நடைபெற்ற போட்டியில் போட்டி சாதனையுடன் தேசிய சாதனையை நெருங்கிய யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் ஆ. புவிதரனின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் எனவும் எமது இணையத்தளத்தின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். கபிலன் (4.20 மீற்றர்) இரண்டாவது இடத்தையும் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஜதுஷன் (4.10 மீற்றர்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.