இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் அனித்தா

992
Anitha-Jegatheeswaran

இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் சாதனை நாயகியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் முதல் முறையாக சர்வதேச மட்டப் போட்டி நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.  

கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்வில் இலங்கையின் தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான அனித்தா, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் தகதி முதல் 15ஆம் திகதி வரை தாய்லாந்தில் இடம்பெறும் “தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்” போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலமே தனது முதல் சர்வதேச போட்டியில் களம் காணவுள்ளார்.

சர்வதேச சாதனை கனவுகளுடன் காத்திருக்கும் சாதனை நாயகி அனித்தா

இறுதியாக இடம்பெற்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதலாவது தகுதிகான் சுற்றுப் போட்டியில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் கலந்துகொண்ட அனித்தா, 3.45 உயரம் பாய்ந்து முதல் இடத்தைப் பெற்று, தனது தேசிய சாதனையை மீண்டும் புதுப்பித்தார். இதன் மூலமே அவர் குறித்த போட்டி நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் பழையை மாணவியாகிய இவர், அண்மைய வருடங்களில் இடம்பெற்ற பல தேசிய மட்ட நிகழ்வுகளில் போட்டிச் சாதனைகள் மற்றும் தேசிய சாதனைகள் என்பவற்றை நிகழ்த்தி தனது நாமத்தை பல ஊடகங்களிலும் வெளியிடச் செய்து, வடக்கிற்கு பெருமை தேடிக் கொடுத்தார்.

அயேஷா மதுவன்தி
அயேஷா மதுவன்தி

கடந்த வருடம் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் 3.41 மீட்டர் உயரம் பாய்ந்த அனித்தா, முதல் முறையாக தேசிய சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

அனித்தாவின் பயிற்றுவிப்பாளரான சின்னையா சுபாஸ்கரனும் தாய்லாந்து சுற்றுப்பயணத்திற்கான அனித்தாவின் பயிற்றுவிப்பாளராக தெரிவாகியுள்ளார். இதன்மூலம் இலங்கைக் குழு சார்பாக தனது முதல் சர்வதேச பயணத்தை அவரும் மேற்கொள்ளவுள்ளார்.

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான சுபாஸ்கரன், அனித்தாவின் தேசிய சாதனைகளுக்கு பக்க பலமாய் இருந்த ஒருவர். அனித்தா மாத்திரமன்றி, யாழ்ப்பாணத்தில் பல சிறந்த கோலூன்றிப் பாய்தல் வீர, வீராங்கனைகளையும் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அனித்தா தவிர்ந்த, தேசிய சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய மேலும் இருவரான அயேஷா மதுவன்தி சம்மட்டி எறிதல் போட்டி நிகழ்விலும், இராணுவப்படை வீரர் அஜித் கருணாதிலக 10 போட்டி நிகழ்வுகளைக் கொண்ட டெகத்லன் போட்டியிலும் இலங்கை சார்பாக தமது முதல் சர்வதேச போட்டியில் கலந்துகொள்கின்றனர்.  அயோஷா மதுவன்தி ஏற்கனவே நான்கு முறை தேசிய சாதனையை முறியடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் கருணாதிலக
அஜித் கருணாதிலக

இவர்கள் மூவருடன் மேலும் 5 பேர் உள்ளடங்களாக மொத்தம் 8 வீர வீராங்கனைகள் இலங்கை குழுவைப் பிரிதிநிதித்துவப்படுத்தி, தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை வீர வீராங்கனைகள்

ஆண்கள்

  • அஜித் கருனாதிலக – டெகத்லன்
  • சம்பத் ரணசிங்க – ஈட்டி எறிதல்
  • தனுக்க லியனபத்திரண – நீளம் பாய்தல்
  • கலிங்க குமாரகே – 400 மீட்டர்

பெண்கள்

  • அனித்தா ஜகதீஸ்வரன் – கோலூன்றிப் பாய்தல்
  • அயேஷா மதுவன்தி – சம்மட்டி எறிதல்
  • விதுஷா லக்ஷானி – முப்பாய்ச்சல்
  • நிலனி ரத்னாயக்க – 3000 மீட்டர்