இரண்டு இன்னிங்சுகளிலும் இரட்டைச் சதமடித்த அஞ்செலோ பெரேரா

359

இலங்கையின் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் 2 இரட்டைச் சதங்களைக் குவித்த முதல் கிரிக்கெட் வீரராக NCC கழகத்தின் தலைவர் அஞ்சலோ பெரேரா புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல் தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் மூன்றாவது வாரத்துக்கான போட்டிகள் நேற்று (03) நிறைவுக்கு வந்தன. இதில் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் அணி இலகு வெற்றியைப் பதிவு செய்ய, எஞ்சிய 3 போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றன.

சிலாபம் மேரியன்ஸிற்கு வெற்றி தேடித்தந்த இந்திய வீரர் சாகர் பரேஷ்

NCC எதிர் SCC

இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த இப்போட்டி 2 இரட்டைச் சதங்கள், மற்றும் 3 சதங்களுடன் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது. இதில் NCC அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் மற்றுமொரு இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார்.

பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய NCC கழகம் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 444 ஓட்டங்களைப் பெற்றது.

NCC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அஞ்செலோ பெரேரா இரட்டைச் சதம் கடந்து 201 ஓட்டங்களைப் பெற்று இம்முறை முதல் தரப் போட்டிகளில் தனது முதலாவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார்.

இதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பாடி SSC கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 480 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி ஆட்டமிழக்காது 189 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

இந்த நிலையில், ஆட்டத்தின் இறுதி நாளன்று தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த NCC  கழகம் சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் சதமடித்து கைகொடுக்க, மறுமுறையில் சிறப்பாகத் துடுப்பாடிய அணித்தலைவர் அஞ்செலோ பெரேரா இரட்டைச் சதம் கடந்து 231 ஓட்டங்களைப் பெற்றார். இந்த இரட்டைச் சதத்தைப் பெற்றுக்கொள்ள 268 பந்துகளுக்கு முகங்கொடுத்து 3 சிக்ஸர்கள் மற்றும் 20 பவுண்டரிகளையும் அவர் விளாசியிருந்தார்.

இதன் மூலம் இலங்கையின் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்சுகளில் 2 இரட்டைச் சதங்களைக் குவித்த முதலாவது இலங்கை வீரராகவும், உலகின் இரண்டாவது வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதற்கு முன், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆதர் பெங் 1938 ஆம் ஆண்டு இவ்வாறு இரு இன்னிங்ஸில் 2 இரட்டைச் சதங்களைப் பெற்று சாதனை படைத்திருந்தார். குறித்த போட்டியில் அவர் 244 மற்றும் 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை A அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற அஞ்செலோ பெரேரா, அண்மையில் நிறைவுக்கு வந்த அயர்லாந்து A அணியுடனான போட்டித் தொடரிலும் பிரகாசித்திருந்தார். எனினும், இதுவரை இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடாத அவர், 4 ஒருநாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் மாத்திரம் இலங்கைக்காக விளையாடியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மாலிங்க – திசர – மெதிவ்ஸை ஒரே மேசையில் சந்திக்கவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 444 (103.3) – அஞ்செலோ பெரேரா 201, பெதும் நிஸ்ஸங்க 95, லசித் அம்புல்தெனிய 26, தம்மிக பிரசாத் 3/86, ஆகாஷ் சேனாரத்ன 3/91, தரிந்து ரத்னாயக்க 2/99

SSC (முதல் இன்னிங்ஸ்) – 480 (129) – சந்துன் வீரக்கொடி 189, சச்சித்ர சேனநாயக்க 89, கிரிஷான் ஆரச்சிகே 48, கவிந்து குலசேகர 46, லசித் அம்புல்தெனிய 4/86, அசித பெர்னாண்டோ 3/98

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 579/6 (112) – அஞ்செலோ பெரேரா 231, பெதும் நிஸ்ஸங்க 165, சதுரங்க டி சில்வா 103*, சதுபம குணசிங்க 2/42, தம்மிக பிரசாத் 2/49

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் நெருக்கடியை சமாளித்த தமிழ் யூனியன் அணி போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடித்துக் கொண்டது.

ஆட்டத்தின் இறுதி நாளில் தமிழ் யூனியன் அணிக்கு 551 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆட்ட நேர முடிவின் போது அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களை பெற்றது.

Photos: Tamil Union v Colts CC – Major Super 8s Tournament

இந்தப் போட்டியில் கோல்ட்ஸ் அணி வீரர் அவிஷ்க பெர்னாண்டோ முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 615 (154.2) – அவிஷ்க பெர்னாண்டோ 223, சங்கீத் குரே 142, ஹஷான் துமிந்து 70, ஜெஹான் டேனியல் 61, ஜீவன் மெண்டிஸ் 4/192

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (84.1) – ஜீவன் மெண்டிஸ் 105, மனோஜ் சரத்சந்திர 87, சிதார கிம்ஹான் 50, பிரவீன் ஜயவிக்ரம 3/35, ஜெஹான் டேனியல் 3/36, தனன்ஞய லக்‌ஷான் 2/34

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 251/8d (51) – சங்கீத் குரே 90*, அவிஷ்க பெர்னாண்டோ 65, கமிந்து மெண்டிஸ் 3/48, ஜீவன் மெண்டிஸ் 2/21

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 331/8 (64) – மனோஜ் சரத்சந்திர 103, ரமித் ரம்புக்வெல்ல 55, ஜீவன் மெண்டிஸ் 61, கமிந்து மெண்டிஸ் 53,  நளீன் பிரயதர்ஷன 4/95

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்கவில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணி வீரர்களும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

தொடர் தோல்வியால் ஒருநாள் தரவரிசையில் நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவு

சரசென்ஸ் அணியின் கமிந்து கனிஷ்க மற்றும் நிபுன் கருணாநாயக்கவின் சதத்தின் உதவியுடன் அவ்வணி முதல் இன்னிங்சுக்காக 516 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, போட்டியின் இறுதி நாளான்று தமது இரண்டாவது இன்னிங்ஸை முன்னெடுத்த இராணுவப்படை அணி, துஷான் விமுக்தியின் சதத்தினால் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 456 ஓட்டங்களை பெற்றது. இதனால் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 350 (98.5) – ஹிமாஷ லியளகே 116, டில்ஷான் டி சொய்சா 101, சன்ஜிக ரித்ம 56, சச்சித்ர பெரேரா 3/42, ரனித்த லியனாரச்சி 3/61, சாமிகர எதிரிசிங்க 3/81

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 516 (155.1) – கமிந்து கனிஷ்க 141, நிபுன் கருணாநாயக்க 129, சாமிகர எதிரிசிங்க 65*, அண்டி சொலமன்ஸ் 62, துஷான் விமுக்தி 4/137

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 456/9 (102.1) – துஷான் விமுக்தி 128, சன்ஜிக ரித்ம 74, அசேல குணரத்ன 68, சாமிகர எதிரிசிங்க 4/176

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<