இந்தியாவுடனான தொடரில் மெதிவ்ஸ், அசேல மற்றும் குசல் இலங்கை அணியில்

2325

எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் மீண்டும் களமிறங்கவுள்ளதாக இலங்கை ஒரு நாள் அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வெற்றியில் இலங்கைக்கு குவியும் வாழ்த்துக்கள்

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்…

கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு இன்று (31) இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது.

இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது பாகிஸ்தானில் பெற்ற அனுபவம் குறித்து உபுல் தரங்க இவ்வாறு தெரிவித்தார்.

”பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் எதிர்பார்த்தது போன்று எம்மால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. அதிலும் இத்தொடர் முழுவதும் துடுப்பாட்ட வீரர்கள் உரிய முறையில் ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தவறிவிட்டனர்.

உண்மையில் எமது பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என்பன சிறப்பாக இருந்தன. ஆனாலும் ஒரு சில பிடியெடுப்புகளை நாங்கள் தவறிவிட்டாலும், இத்தொடர் முழுவதும் சக வீரர்களினால் கிடைத்த பங்களிப்பினை பாராட்ட வேண்டும். எனினும் துடுப்பாட்ட வரிசை சிறப்பாக விளையாடாமையால் நாம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்ததுடன், எமது திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் முடியாது போனது. நாம் அதிகமாக ஆலோசனைகள் செய்தோம். என்ன செய்ய வேண்டும் என்று மதிப்பீடுகளை செய்தோம். ஆனால் ஆடுகளத்தில் அதனை செயற்படுத்த நாம் தவறிவிட்டோம்.

பாகிஸ்தான் மிகவும் சவால் மிக்க அணியாகும். சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்ட பிறகு பாகிஸ்தான் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் அவ்வணி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஒரு நாள் தொடர் முழுவதும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுப்பதில் எமது துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறியிருந்தனர். இதனால் ஒரு நாள் தொடரை இழக்க நேரிட்டது” என்றார்.

அத்துடன், இவ்வருடத்தில் நடைபெற்ற அனைத்து ஒரு நாள் தொடர்களிலும் துடுப்பாட்டத்தில் நாம் மிகவும் பின்னடைவை சந்தித்தோம். ஆனாலும் இவையனைத்தையும் நல்லதொரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்து ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அங்குள்ள அனைத்து மைதானங்களும் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருப்பதனால் தற்பொழுது முதல் இந்திய அணியை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் நாம் திட்டங்களை வகுத்து வருகின்றோம் என்றும் தரங்க அங்கு குறிப்பிட்டார்.

அணி வீரர்களின் பொறுப்பு குறித்து விளக்கிய அவர், இனிவரும் காலங்களிலும், வீரர்கள் தாம் விளையாடுகின்ற அணி எது? எந்த இடத்தில் விளையாடுகின்றீர்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டு, உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மைதானத்துக்குள் சென்று நிறைவேற்றினால் தொடர் தோல்விகளை குறைத்துக்கொள்ளலாம். எமது வீரர்கள் இனிமேல் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு அணியின் வெற்றிக்காக சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புவதாகவும் பெரேரா தெரிவித்தார்.  

இந்நிலையில், இலங்கை அணியின் முக்கிய தூண்களாகக் கருதப்படும் அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரோ ஆகியோர் குறித்து அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது. கடந்த காலங்களில் அணிக்கு பெரிதும் பங்காற்றிய குசல் மற்றும் அசேல ஆகியோர் உபாதை காரணமாக நீண்ட காலமாக அணியில் இணைய முடியாமல் இருந்தமை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

எனினும் இவர்களின் நிலைமையில் தற்பொழுது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால் குறித்த மூவரும் அணியில் இணைய வேண்டும் என்பது பலரதும் விருப்பாக உள்ளது.  

இது குறித்து கருத்து தெரிவித்த தரங்க, ”மூவரும் தற்போது பூரண குணமடைந்துள்ள போதும் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுவார்களா என்பது தொடர்பில் உறுதியாக எதனையும் கூற முடியாது. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் நிச்சயம் அவர்கள் விளையாடுவார்கள்” என உறுதியாகத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இடம்பெற்ற இந்திய அணியுடனான போட்டித் தொடரின்போது அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளாகியிருந்தனர். இதனால் பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரிலிருந்தும் அவர்கள் விலகியிருந்தனர்.  

இலங்கை அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்..

அதேபோல கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது குசல் ஜனித் பெரேரா உபாதைக்குள்ளாகியிருந்தார். இதனால் ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில் அவரால் விளையாட முடியாது போனது.

இந்நிலையில், மெதிவ்ஸ், குசல் ஜனித் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் எதிர்வரும் சில தினங்களில் உடற் தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று இடம்பெற்ற குறித்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பாகிஸ்தானுடனான T-20 தொடருக்காக நியமிக்கப்பட்ட திஸர பெரேரா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவின் பணிப்பாளர் அஷ்லி டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

>> மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க <<