ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) இந்தியாவுடன் ஆரம்பமாகவிருக்கும் ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை ஒருநாள் அணிக்கு உபுல் தரங்கவுக்கு பதிலாக புதிய அணித் தலைவர் ஒருவரை நியமனம் செய்ய ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை அணி 16 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதோடு இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் நடைபெற்ற மூன்று தொடர்களில் வைட் வொஷூம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணி இந்த வருடம் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றது. அத்தோடு இறுதியாக தாம் பங்குபற்றிய 12 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி தமது சொந்த மண்ணில் வைத்து ஜிம்பாப்வே உடனான ஒரு நாள் தொடரை 3-2 என பறிகொடுத்த பின்னர் அப்போதைய அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் பதவி விலகியதை அடுத்து இலங்கையின் (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான) அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தரங்க, குறித்த தொடரில் 6 இன்னிங்சுகளில் விளையாடி 41.40 என்ற ஓட்ட சராசரியோடு மொத்தமாக 207 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய அணித் தேர்வாளர்கள் மெதிவ்சை மீண்டும் இலங்கை அணித் தலைவராக நியமிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும் காயத்திலிருந்து மீண்டு தனது பழைய ஆட்டத்துக்கு மீள முயற்சிக்கும் இலங்கையின் முன்னாள் தலைவருக்கு அதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை உள்ளூர் பருவகால கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் முதல்

இலங்கை டெஸ்ட் அணித் தலைவரான தினேஷ் சந்திமால் ஒரு நாள் போட்டிகளில் இலங்கையை தலைமை தாங்க பொருத்தம் இல்லாதவராக கருதப்படுவதனால், 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை அணியை வழிநடாத்த திசர பெரேரா மற்றும் அசேல குணரத்ன ஆகியோரின் பெயர்களும் மொழியப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இன்னும் சில ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கை அணித் தலைவராக அதிரடி துடுப்பாட்ட வீரரான திசர பெரேரா நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக அறிமுகமாயிருந்த பெரேரா 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 17.57 என்ற துடுப்பாட்ட சராசரியையும், 32.62 என்ற பந்து வீச்சு சராசரியையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அனுபவமற்ற குழாமுடன் கூடிய இலங்கை அணிக்கு  தலைமை தாங்கிய பெரேரா அப்பொறுப்பு மூலம் பாகிஸ்தானுடனான T-20 தொடரில் அனைவரையும் வியக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக சகல துறை வீரராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வெற்றிகளில் பிரதான பங்கெடுத்துக் கொண்ட அசேல குணரத்ன கை உபாதை ஒன்றின் காரணமாக துரதிஷ்டவசமாக அணியில் இருந்து கடந்த சில மாதங்களாக விடுவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பூரணமாக தனது உபாதையிலிருந்து குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியானது இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் T-20 தொடர் ஆகியவற்றில் விளையாடுகின்றது. இதற்கான பயிற்சிகளில் ஈடுபட தற்போது பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வரும் அனைத்து இலங்கை வீரர்களும் திங்கட்கிழமை (27) விடுவிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு ஒரு நாள் போட்டிகளில் யார் அணித்தலைவராக வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? உங்களது கருத்துக்களை கீழே பதிவிடவும்.