இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரின் மனதை நெகிழவைக்கும் செயல்

626

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஜமைக்காவில் பயிற்சியின்போது தனது சொந்த பந்து வீச்சு பாதணி ஜோடி ஒன்றை வலை பந்துவீச்சாளர் ஒருவருக்கு அன்பளிப்புச் செய்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு முழுமையான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் தனன்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை A அணி மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் A அணியுடன் ஆடி வருகிறது.

தசுன் சானக்கவின் அதிரடி சதத்தால் இலங்கை A அணி வலுவான நிலையில்

தசுன் ஷானக்க பெற்ற அதிரடி சதத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் …

இதில் இலங்கை அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்துவீச வந்த ஜமைக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரின் பாதணி கீழ் பாகம் ரப்பரினால் இருப்பதால் அவரால் சரியாக பந்துவீச முடியாமல் தடுமாறுவதை வலது கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ கண்டுள்ளார். மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக ஆடும் பெர்னாண்டோ எந்த தயக்கமும் இன்றி கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் தனது சொந்த பூட்ஸ் (Boots) பாதணியை அந்த இளம் வீரருக்கு வழங்கினார்.

”நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் என்ற வகையில் ஆடுகளத்திற்குள் மாத்திரம் இன்றி அடுகளத்திற்கு வெளியிலும் தங்களின் அடையாளத்தை நிலைநிறுத்த நினைக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட்Aஅணி முகாமையாளர் சரித் சேனநாயக்க தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.  

தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கே 56 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் கரையோர நகரொன்றான கட்டுனேரியவைச் சேர்ந்த 20 வயதான பெர்னாண்டோ கட்டுனேரிய, புனித செபஸ்டியன் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தியவர். மிகக் கடினமான பாதை ஒன்றை கடந்து வந்த அவர் கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடந்த இளைஞர் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் வெளிச்சமான காலம் ஒன்றை எட்டினார்.

 

இலங்கை ‘A’ அணி, 23 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் முதல்தர போட்டிகளில் சோபித்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பெர்னாண்டோ தனது கன்னி ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணிக்காக ஆடினார்.

தான் ஆரம்ப காலங்களில் முகம்கொடுத்த கடினமான அனுபவங்கள் அவரை இவ்வாறான செயலில் ஈடுபட தூண்டியிருக்கும். பெர்னாண்டோ போன்ற இளம் வீரர்கள் அடுகளத்திற்கு வெளியிலும் முன்னுதாரணமாக செயற்படுவது மகிழ்ச்சியான ஒரு விடயமாகும்.