பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு அதிர்ச்சியளித்த நாலந்த கல்லூரி

668
U19 schools Cricket

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோர் பங்கு கொள்ளும் சிங்கர் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்று முடிந்த போட்டியொன்றில் நாலந்த கல்லூரி சிறப்பாக செயற்பட்டு மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியை 76 ஓட்டங்களினால் வீழ்த்தி வெற்றியினை சுவைத்துள்ளது.

தர வரிசையில் முன்னிலையில் உள்ள பேதுரு கல்லூரியை முதல் இன்னிங்சில் வெற்றிகொண்ட ரிச்மண்ட் கல்லூரி

நாலந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று,  ஒரு விக்கெட்டினை இழந்து 29  ஓட்டங்களைப் பெற்றவாறு  தமது முதல் இன்னிங்சினை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினர் தொடர்ந்தனர்.

சிறப்பாக செயற்பட்ட நாலந்த கல்லூரியின் மலிங்க அமரசிங்க, கலன பெரேரா ஆகியோரின் பந்து வீச்சின் காரணமாக பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 97 ஓட்டங்களுக்குள் மடக்கப்பட்டது.

அணி சார்பாக திலான் நிமேஷ் மாத்திரம் 30 ஓட்டங்களைக் அதிகமாகப் பெற்றதுடன், பந்து வீச்சில் அசத்தியிருந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான மலிங்க அமரசிங்க 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து நாலந்த கல்லூரி அணி, சகலதுறை வீரரான மலிங்க அமரசிங்க அரைச் சதம் கடந்து பெற்ற  57 ஓட்டங்களின் துணையுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது. பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் அவிந்து பெர்னாந்து ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து, போட்டியின் முன்னைய இன்னிங்ஸ்களின் அடிப்படையில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிக்கு 223 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை பெறுவதற்காக தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அவ்வணி, 55.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மேலதிக 76 ஓட்டங்களினால் நாலந்தவிடம் தோல்வியினை தழுவியது.

இதில், அதிகபட்சமாக திலன்க குணசேகர 44 ஓட்டங்களை குவித்துக்கொண்டதுடன், நாலந்த கல்லூரியினை வெற்றிப்பாதைக்கு கொண்டுவந்த உமேஷ்க தில்ஷான் நான்கு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 175 (52.3) மலிங்க அமரசிங்க 38, அவிஷ்க பெரேரா 33, கௌமல் நாணயக்கார 3/19, திலான் நிமேஷ் 3/66

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 97 (31) திலான் நிமேஷ் 30, மலிங்க அமரசிங்க 4/21, கலன பெரேரா 2/34

நாலந்த கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 144 (37.3) மலிங்க அமரசிங்க 57, சுஹங்க விஜயவர்தன 34, அவிந்து பெர்னாந்து 5/37

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 146 (55.3) திலன்க குணசேகர 44, அவிந்து பெர்னாந்து 40, உமேஷ்க தில்ஷான் 4/29

போட்டி முடிவுநாலந்த கல்லூரி 76 ஓட்டங்களினால் வெற்றி