அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வருடத்தின் அதிவேக பாடசாலை வீரர்களைத் தெரிவு செய்கின்ற 100 மீற்றர் ஓட்டப்பந்தயப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் 5 வயதுப் பிரிவுகளின் கீழ் இன்று (12) நடைபெற்றன.

இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வடமேல் மாகாணம், நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.எம் சபான், 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை 10.96 செக்கன்களில் நிறைவுசெய்து, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் தொடர்ச்சியாக தனது 2ஆவது வெற்றியைப் பதிவு செய்தார்.

2013ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் பங்குபற்றி வருகின்ற சபான், குறித்த போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் தேசிய மட்டத்தில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். எனினும், 2015ஆம் ஆண்டில் எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யாத சபான், 2016ஆம் ஆண்டில் 200 மீற்றரில் முதலிடத்தையும், 100 மீற்றரில் 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 200 மீற்றரில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இன்று நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு சபான் வழங்கிய விசேட செவ்வியில், ”அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மீண்டுமொருமுறை வெற்றியைப் பெற்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

அதிலும் குறிப்பாக, எனது பாடசாலையான அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலத்தின் அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எனது விளையாட்டுத்துறை ஆசிரியரான ரஹ்மதுல்லாவுக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் சிறுவயது முதல் இன்றுவரை மெய்வல்லுனர் துறையில் ஆர்வத்துடன் விளையாடி வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற எனது பெற்றோர்களையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.

கொழும்பு மரதனில் கென்ய வீரர்களுக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்

“கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன்” அமைப்பு ஏற்பாடு செய்த 17ஆவது சர்வதேச கொழும்பு மரதன்…

அத்துடன் தனது கடைசி பாடசாலை மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியுடன் அடுத்த கட்டத்துக்கு காலடி எடுத்துவைக்கவுள்ள சபான், எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்வதற்கும், சர்வதேச மட்டப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்பதற்கு விரும்புவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

வட மேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், நிகரவெரட்டிய தேர்தல் தொகுதியில் உள்ள அம்புக்காகம என்ற சிறிய கிராமத்தில் 582 மாணவர்களைக் கொண்ட பாடசாலையான அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலத்துக்கு இவ்வாறு அகில இலங்கை மட்டத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்து வருகின்ற சபானின் திறமைகளை மேலும் ஊக்கப்படுத்தி, அவருடைய விளையாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால், நிச்சயம் இலங்கையின் மெய்வல்லுனர் துறை அரங்கில் மற்றுமொரு அஷ்ரப்பை, சப்ரானை, ரஜாஸ்கானை உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இதேவேளை, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த சானுக சந்தீப, போட்டித் தூரத்தை 10.8 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தையும், கொழும்பு நாலந்த கல்லூரியைச் சேர்ந்த கே.எஸ் பெரேரா, போட்டித் தூரத்தை 10.97 செக்கன்களில் நிறைவுசெய்து மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 4 வருடங்களாக பாடசாலை மட்டப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற கண்டி விஹாரமஹாதேவி வித்தியாலயத்தைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், இன்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதன்படி அவர் குறித்த போட்டியை 12.63 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றரில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சபியா, 2014 முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் பங்குபற்றிவருவதுடன், தொடர்ச்சியாக வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியிலும் 2ஆவது இடத்தை அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஏ. டி சில்வா, போட்டியை 12.14 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப்பதக்கத்தையும், ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த சேர்மிலா ஜான், போட்டியை 12.60 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.