பாடசாலை மெய்வல்லுனரில் யாழ் மாணவர்களின் பதக்க வேட்டை ஆரம்பம்

547

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது நாளான இன்றைய தினம் நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வடமாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் 4 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

சத்விகாவுக்கு முதல் தங்கம்

இதில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.10 மீற்றர் உயரம் தாவி யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி வி. சத்விகா முதற்தடவையாக தங்கப்பதக்கம் வென்றார். எனினும், அவருடன் போட்டியிட்டு அதே அளவு உயரத்தைத் தாவிய நீர்கொழும்பு நிவ்ஸ்டெட் மகளிர் கல்லூரி மாணவி தினிதி நிமாயாவும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சத்விகா, தினதி நிமாயாவுடன் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் கிரிஜாவும் தெரிவாகியிருந்தனர். எனினும், 3.10 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு கிரிஜா எடுத்த 3 முயற்சிகளும் கைகூடாமல் போனதால் அவருக்கு இம்முறையும் வெண்கலப் பதக்கத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலை விளையாட்டு விழாவில் 19 வயதுக்கு உட்டப்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றியிருந்த கிரிஜா வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆரம்பம் முதல் பலத்த போட்டியுடன் விளையாடியிருந்த சத்விகா மற்றும் தினிதி நிமாயா ஆகிய வீராங்கனைகள் முதல் சுற்றுக்களில் ஒரு சில தவறான உயரங்களை மாத்திரம் பதிவு செய்து முதலிரண்டு இடங்களுக்காக கடுமையாக போட்டியிருந்தனர். எனினும், இறுதிச் சுற்றுக்காக வழங்கப்பட்ட 3.10 மீற்றர் உயரத்தை அவர்களால் தாவுவதற்கு முடியாமல் போனது.

இதன்படி, இரு வீராங்கனைகளுக்கும் மேலும் இரு சந்தர்ப்பங்களை வழங்க போட்டியின் பிரதான நடுவர் நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் குறித்த வீராங்கனைகள் தொடர்ந்து விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்ததால், இருவரது ஒருமித்த சம்மதத்துடன் முதலிடங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாடசாலை மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆபித்துக்கு வெண்கலப்பதக்கம்

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில்..

இதன்படி, 3.00 மீற்றர் உயரத்தைத் தாவிய யாழ். அருணோதயா கல்லூரி மாணவி வி. சத்விகா மற்றும் நீர்கொழும்பு நிவ்ஸ்டெட் மகளிர் கல்லூரி மாணவி தினிதி நிமாயா ஆகியோர் முதலிடங்களையும், 2.85 மீற்றர் உயரத்தைத் தாவிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் கிரிஜா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ். அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த சத்விகா முன்னதாக இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 2.90 மீற்றர் உயரத்தைத் தாவி 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், புதிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை வர்ண சாதனை உயரமான 2.80 மீற்றர் உயரத்தை இம்மூன்று வீராங்கனைகளும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு சத்விகா கருத்து வெளியிடுகையில், ”நான் 2014ஆம் ஆண்டு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதற் தடவையாகக் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்றுக்கொண்டேன். எனினும், கடந்த காலங்களில் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்தாலும், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மறுபடியும் வெற்றி கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

எனது அப்பா தற்போது கட்டாரில் தொழில் புரிந்து வருகின்றார். அம்மாவுடன் வாழ்ந்து வருகின்ற எனக்கு 2 தங்கைகள் மற்றும் ஒரு தம்பியும் உள்ளனர். அத்துடன் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலும் இவ்விளையாட்டை எந்தவொரு இடையூறுமின்றி மேற்கொள்வதற்கு எனது குடும்பத்தாரும், பாடசாலையும் தொடர்ந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமைக்கு இந்த தருணத்தில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், எஸ். பாஸ்கரன் ஆசிரியரின் வழிகாட்டலுடன் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று இந்நாட்டுக்கு பெருமையை தேடிக் கொடுப்பேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலை விளையாட்டு விழாவில் 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு இறுதித் தடவையாக களமிறங்கிய கோலூன்றிப் பாய்தலின் தேசிய சாதனையாளரும், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவியுமான அனித்தா ஜெகதீஸ்வரன், குறித்த போட்டியில் 3.30 மீற்றர் உயரம் தாவி பாடசாலை விளையாட்டு விழா சாதனையொன்றை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோலூன்றிப் பாய்தலில் ஜொய்சன் மீண்டும் சாதனை

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் தொடர்ச்சியாக 4ஆவது வருடமாகவும் தங்கப் பதக்கத்தை வென்று புதிய மைல்கல்லை எட்டினார்.

பாடசாலை விளையாட்டு விழாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இம்முறையும் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.

இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் 4.45 மீற்றர் உயரம் தாவி புதிய பாடசாலை வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதிவேக வீரராகும் வாய்ப்பை தவறவிட்ட மொஹமட் சபான் மற்றும் சபியா

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில்..

எனினும், ஜொய்சனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த சக வீரரான தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். டிலக்ஷன், 4.15 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஆரம்பத்தில் 4.15 மீற்றர் உயரத்தை ஒரே முயற்சியில் தாவிய ஜொய்சன், டிலக்ஷன் தாவிய 4.25 மீற்றர் மற்றும் 4.35 மீற்றர் உயரங்களைக் கடந்து நேரடியாக 4.45 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு தீர்மானித்தார். எனினும், குறித்த உயரத்தை இறுதி முயற்சியில் வெற்றிகொண்ட அவர், மற்றுமொரு முயற்சியாக 4.62 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு தீர்மானித்தார்.

எனினும், சீரற்ற காலநிலை காரணமாக மைதானத்தில் காணப்பட்ட ஈரலிப்பு தன்மையால் ஜொய்சனுக்கு அந்த உயரத்தை தாவ முடியாமல் போனது. இதனையடுத்து அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய 4.45 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஜொய்சனுக்கு எப்பொழுதும் போட்டியாக இருக்கின்ற மகாஜனா கல்லூரி மாணவனான எஸ். டிலக்ஷன், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 4.30 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாடசாலை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் வகிக்கின்ற நெப்தலி ஜொய்சன், ஆரம்ப காலத்தில் பாஸ்கரன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்வரன் மற்றும் பிரதீப் ஆசிரியர்களிடம் பயிற்சிகளைப் பெற்றுவந்த அவர், 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை பங்குபற்றிய போட்டிகளில் 7 தேசிய சாதனையுடன் 10 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றிய ஜொய்சனுக்கு தவிர்க்க முடியாத ஒரு சில தடங்களினால் வெற்றிபெற முடியாமல் போனது.

இந்நிலையில் போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில் ஜொய்சன் கருத்து வெளியிடும் போது, ”அகில இலங்கை மட்டத்தில் 10ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான எனது பயிற்சியாளருக்கும், பாடசாலைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி தொடர்ந்து தங்கப்பதக்கங்களை வென்று வருகின்ற நெப்தலி ஜொய்சன், 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு இடம்பெறவுள்ள தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொள்ளவும், அதன்பிறகு தெற்காசிய மற்றும் ஆசிய போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கமொன்றை பெற்றக்கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, 4.05 மீற்றர் உயரத்தைத் தாவிய நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த உஷான் திவங்க பெரேரா வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

ஈட்டி எறிதலில் சங்கவிக்கு 2ஆவது தங்கம்

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் சங்கவி, இவ்வருடத்தில் தான் பங்குபற்றிய தேசிய மட்டப் போட்டிகளில் 2ஆவது தடவையாகவும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் குறித்த போட்டியில் 37.44 மீற்றர் தூரத்தை எறிந்து 35.00 மீற்றர் வர்ண சாதனையை முறியடித்து சாதனையையும் படைத்தார்.

2014ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் ஆகிய இரு மைதான நிகழ்ச்சிகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற சங்கவி, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதலில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலும் சங்கவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாள் முடிவுகள்

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம்..

எனினும், கோலூன்றிப் பாய்தலில் அதிக திறமைகளை வெளிப்படுத்திய அவர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 2ஆவது இடத்தையும், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் விளையாட்டுத்துறை ஆசிரியரான மதனரூபனிடம் பயிற்சிகளைப் பெற்றுவருகின்ற சங்கவி, எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி தேசிய சாதனையொன்றை நிகழ்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக எமது இணையத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.

இந்நிலையில், 36.44 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய வர்ண சாதனையுடன் கொழும்பு மியூசியஸ் கல்லூரியைச் சேர்ந்த நெலும் இமல்சா 2ஆவது இடத்தையும், 33.80 மீற்றர் தூரத்தை எறிந்து அம்பாந்தோட்டை கஹவத்தை மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹசினி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

உயரம் பாய்தலில் ஹெரினா அபாரம்

கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் கலந்துகொண்ட தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரகுமார் ஹெரினா, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் குறித்த போட்டியில் 1.58 மீற்றர் உயரத்தைத் தாவி இவ்வெற்றியைப் பதிவு செய்ததுடன், 1.55 மீற்றர் உயரத்தைக் கொண்ட பாடசாலை வர்ண சாதனையையும் அவர் முறியடித்தார்.

இந்நிலையில், எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த வி.சந்துனிகா, 1.58 மீற்றர் உயரத்தைத் தாவி 2ஆவது இடத்தையும், அம்பாறை டி.எஸ் சேனநாயக்க தேசிய பாடசாலையைச் சேர்ந்த துல்ஷானி பெர்ணாந்து, 1.55 மீற்றர் உயரம் பாய்ந்து 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி போட்டிகளின் 2ஆவது நாளில் மெய்வல்லுனர் போட்டிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் 66 புள்ளிகளைப் பெற்ற வட மாகாணம் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.