ஏகல விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற டிவிஷன் 1 பிரீமியர் லீக் மகளிர் பிரிவுக்கான தீர்மானம் மிக்க போட்டியில், ராணுவப்படை மகளிர் அணியை விமானப்படை மகளிர் அணி 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது. இதன்மூலம் ராணுவப்படை அணியின் சம்பியன் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாண்டுக்கான சம்பியன் பட்டதினை தக்க வைக்க வேண்டிய நிலையில், லீக் போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கும் வலிமைமிக்க ராணுவ அணியை கட்டாயமாக வெற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இலங்கை விமானப்படை மகளிர் அணி இந்த போட்டியில் களமிறங்கியது.   அதேபோன்று தமது சம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ராணுவப்படைக்கும் இருந்தது.

இந்நிலையில், போட்டி ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்திலேயே கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட . எம். விதானகே முதலாவது கோலை பெற்று விமானப்படை அணியை முன்னிலைப் படுத்தி ராணுவப்படை அணிக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் விமானப்படை அணியினர் அர். எஸ். குனசேகரவின் மூலம் இரண்டாவது கோலையும் அடித்து கோல் கணக்கை இரண்டு கோலாக மாற்றி ராணுவ அணியின் வெற்றியை கேள்விக்குறியாக்கினர்.

தொடர்ந்து சில நிமிடங்களில் கிடைக்கப்பெற்ற இலவச உதையை (ப்ரீ கிக்) சி. எஸ். பிரான்சிஸ் கோலாக மாற்றினார். இதன்மூலம் முதல் பாதி முடிவடைவதற்கு முன்னரே விமானப்படை வீரர்கள் அதிரடி ஆட்டம் மூலம் ஆதிக்கம் செலுத்தினர்.

மறுமுனையில் ராணுவப்படை அணிக்கு கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு . கே. லியனகேவினால் தவறவிடப்பட்டது.

இதன் காரணமாக போட்டியில் ஆதிக்கம் செலுத்த ராணுவ மகளிர் அணிக்கு நான்கு கோல்களை பெற வேண்டிய கடினமான இலக்குடன்  முதல் பாதி நேரம் முடிவுற்றது.

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் : 3 – 0 ராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்தவுடனேயே ராணுவப்படை மகளிர் அணியின் அபாரத்தின் மூலம் அவர்கள் முதல் கோலைப் பெற்றுக்கொண்டனர். முன்கள வீராங்கனை பி. எச். கருணாரத்ன 47ஆவது நிமிடத்தில் குறித்த கோலைப் பெற்றுக்கொடுத்தார்.   

அதனை தொடர்ந்து ராணுவ அணி மீண்டும் கோல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும், விமானப்படை மகளிர் தரப்பு அந்த தாக்குதல்களை முறியடித்தனர்.

ராணுவப்படை தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் எதிரணியின் தடுப்பு வீராங்கனைகளை ஊடுறுத்து பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற இலவச உதை மூலமாக ராணுவப்படையின் இ. கே. லியனகே இரண்டாவது கோலை பதிவு செய்து போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கினார். எனினும், மீண்டெழுவதற்கான இறுதி கோலினை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 3 – 2 இராணுவ விளையாட்டு கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீராங்கனை: பி. எச். கருணாரத்ன (ராணுவப்படை விளையாட்டு கழகம்)

போட்டியின் பின்னர் ThePapare.comக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த விமானப்படை விளையாட்டுக் கழக அணியின் உதவி பயிற்சியாளர் என். தர்ஷன, போட்டியின் முதலாவது பாதி நேரத்தில் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தோம். எனினும், மைதானத்தினூடாக சென்ற பலத்த காற்று காரணமாக இரண்டாம் பாதி நேரத்தில் பந்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. ஆனாலும், எமது அணி வெற்றியை தக்க வைத்துக்கொண்டது. முதல் பாதி நேரத்தில் பெற்றுக்கொண்ட கோல்களை விட இரண்டாம் பாதி நேரத்தில் கோல்களை பெற்றிருக்க வேண்டும். எனினும், அதிகளவான வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.

கோல் பெற்றவர்கள்

விமானப்படை விளையாட்டுக் கழகம்: . எம். விதானகே 3’, அர். எஸ். குனசேகர 18’, சி. எஸ். பிரான்சிஸ் 33’  

ராணுவப்படை விளையாட்டுக் கழகம்: பி. எச். கருணாரத்ன 47’, . கே. லியனகே 77’