டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் பிரபல கண்டி கழகம் மற்றும் இலங்கை விமானப்படை அணிகளுக்கிடையிலான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிக்காட்டிய விமானப்படை அணி, யாரும் எதிர்பாராதவாறு 24-21 என்ற அடிப்படையில் வெற்றியை சுவீகரித்தது.

தமது முதல் போட்டியில் CH & FC அணியை 96-௦௦ என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பந்தாடிய கண்டி கழகம் இப்போட்டியில் இலகு வெற்றியைப் பெரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. விமானப்படையானது தனது முதல் போட்டியில் ஹெவலொக்ஸ் அணியிடம் 05-29 என்று தோல்வியை தழுவியிருந்தமையும் இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணியாக இருந்தது.

ரத்மலான விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடிய விமானப்படை வீரர்கள் எதிரணிக்கு பலத்த அழுத்தத்தை கொடுத்தனர். அதன் பிரதிபலனாக 2 நிமிடங்களே கடந்திருந்த நிலையில் விமானப்படை தனது முதல் ட்ரையை பெற்றுக் கொண்டது. சரித செனவிரத்னகன்வெர்ஷன்உதையை வெற்றிகரமாக உதைக்க விமானப்படை 7-௦ என முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்கத் தயாரான கண்டி வீரர்கள் பல தடவைகள் ட்ரை கோட்டை நோக்கி முன்னேறிய போதிலும் விமானப்படை வீரர்களின் அபாரமான தடுப்பாட்டத்தினால் அவர்களால் புள்ளிகளை பெற முடியவில்லை.

எனினும் 15 ஆவது நிமிடத்தில் எதிரணியின் தடுப்பை ஊடுருவிய தனுஷ் தயான் கண்டி கழகத்தின் முதல் ட்ரையை வைத்தார். அர்ஷாட் ஜமால்டீன் உதையை குறிதவறாமல் உதைக்க புள்ளிகள் 7-7 என்று சமனாகின.

தொடர்ந்து தமது ஆக்ரோஷமான ஆட்டத்தினால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த விமானப்படை 2 ஆவது நிமிடத்தில் லஹிரு உதயங்கவின் ஊடாக இரண்டாவது ட்ரையை வைத்தது. இம்முறையும் சரிதவின் உதை கம்பங்களுக்கூடாக செல்ல விமானப்படை 14-7 என மீண்டும் முன்னிலை பெற்றது.

கண்டி அணி, தமக்கு கிடைத்த பல வாய்ப்புக்களை மோசமான பந்து கைமாற்றலினால் தவறவிட்டது. அத்துடன் விமானப்படையின் இளம் வீரர் அஷோக் விஜயகுமார் தனது துல்லியமான உதைகளினால் எதிரணியின் முன்னேற்றத்தை பல தடவைகள் தடுத்தார்.

முதல் பாதி முடியும் தருவாயில் தனது வியக்கத்தக்க வேகத்தினால் தடுப்பாட்டக்காரர்களை கடந்து முன்னேறிய ரிச்சர்ட் தர்மபால ட்ரை கோட்டை நெருங்கிய போதிலும் விமானப்படை அணியின் பின்கள வீரர்களினால் அவர் களத்திற்கு வெளியே தள்ளப்பட்டதால் அவ்வாய்ப்பும் கைநழுவியது.

அத்துடன் முதல் பாதி நிறைவுற்றது. கண்டி கழகத்தின் மந்தமான மற்றும் மோசமான ஆட்டம் பல ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இரண்டாம் பாதியில் தமது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை அவ்வணி வெளிப்படுத்தும் என பலரும் எதிர்பார்த்தனர்.

முதல் பாதி : விமானப்படை 14 – 07 கண்டி கழகம்

அதன்படி இரண்டாம் பாதியை அதிரடியாக ஆரம்பித்த கண்டி கழகம் எதிரணியின் பாதியினுள் வெகுநேரம் அழுத்தத்தை வழங்கியது. மாற்று வீரராக களமிறங்கிய இலங்கை அணியின் பிரபல வீரர் பாசில் மரிஜா அணிக்கு வலு சேர்த்தார்.

தம்பக்க ட்ரை கோட்டின் அருகில் பலத்த அழுத்தத்தை எதிர்நோக்கியிருந்த விமானப்படை அணி, அஷோக்கின் சிறப்பான உதையுடன் எதிர்த்தாக்குதல் கொடுத்தது. சற்றும் எதிர்பாராதவாறு முன்னேறிய விமானப்படை, ருமேஷ் ராமதாஸின் உதவியுடன் மற்றுமொரு  ட்ரை வைத்து அசத்தியது. சரித லாவகமாக உதைக்க புள்ளி வித்தியாசம் 21-07 என அதிகரித்தது.

எனினும் எதிர்த்துப் போராடிய கண்டி கழகம் மீண்டும் ட்ரை கோட்டை நெருங்கி வந்தது. மரிஜாவின் அனுபவம் கைகொடுக்க, இம்முறை சிறப்பான நகர்வுகள் ஊடாக ஷஷிக ஜயவர்தன ட்ரை வைத்து கண்டி அணிக்கு மீண்டும் நம்பிக்கையளித்தார். அர்ஷாட் ஜமால்டீனின் துல்லியமானகன்வெர்ஷன்‘  உதை கம்பங்களை ஊடறுத்துச் சென்றது. (21-14)

விமானப்படை வீரரர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டதால் அவ்வணி அடுத்த 10 நிமிடங்களுக்கு 13 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கண்டி வீரர்கள் மீண்டும் ட்ரை கோட்டை நெருங்கினர். எனினும் இரண்டாவது பாதியிலும் படுமோசமான பந்து பரிமாற்றலினால் பல வாய்ப்புக்கள் கைநழுவிச் சென்றன. அனுபவமிக்க முன்னணி வீரர்களான ரிச்சர்ட், தனுஷ்க ரஞ்சன் மற்றும் ஷஷிக ஜயவர்தன ஆகியோர் இவ்வாறு மோசமான பந்து கைமாற்றலினால் வாய்ப்புக்களை தவறவிட்டமை பலரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

எனினும் மீண்டும் தனது விவேகத்தையும் வேகத்தையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மரிஜா, போட்டியின் 66 ஆவது நிமிடத்தில் கம்பத்தின் அருகாமையில் ட்ரை வைத்தார். இலகுவான உதையை திலின விஜேசிங்க உதைக்க போட்டி மீண்டும் சமநிலையானது. (21-21)

இறுதி 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் சரிசமமான ஆட்டத்தை வெளிக்காட்ட, போட்டி விறுவிறுப்பானது. மீண்டும் சிறு சிறு தவறுகளினாலும் அஷோக் விஜயகுமாரின் அபார தடுப்பாட்டத்தினாலும் கண்டி அணியினால் முன்னிலை பெற முடியவில்லை.

72 ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பத்தை நோக்கி உதைக்க விமானப்படை முடிவெடுத்தது. சரித செனவிரத்ன தனது துல்லியமான உதவியுடன் 24-21 என தமது அணியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார்.

ட்ரை ஒன்றை பெற்று போட்டியை வெற்றிகொள்ள கண்டி கழகம் பல முயற்சிகளை எடுத்த போதிலும், அவையொன்றும் பலனளிக்கவில்லை. தனுஷ்கா ரஞ்சனின் இறுதி முயற்சியையும் விமானப்படையின் தடுப்பு வீரர்கள் முறியடிக்க, விமானப்படை அணி பலரையும் வியப்பில் ஆழ்த்தி அற்புத வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

முழு நேரம்: விமானப்படை 24 – 21 கண்டி கழகம் ௨௧

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: அஷோக் விஜயகுமார்

Match Replay