டயலொக் சம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்ட போட்டிகளில், சூப்பர் 8 சுற்றில் தனது முதல் வெற்றியை விமானப்படை அணியானது பதிவு செய்துகொண்டது. அநேகமான வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து ஒதுங்க, சொலிட் விளையாட்டு கழகம் 7 வீரர்களை களத்தில் இறக்கி, விமானப்படையுடன் தோல்வியுற்றது.

சொலிட் அணியானது வெறும் 7 வீரர்களை மட்டும் கொண்டு விளையாடியதால், பெரும்பாலும் விமானப்படை அணியே முழுப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது. சொலிட் அணி வீரர்கள் முழு நேரம் பந்தை தடுப்பதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் விமானப்படை அணியானது ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடிக்க தவறியது. சொலிட் அணி வீரர்கள் அற்புதமாக தடுக்க, அவர்களுக்கு துணையாக கோல் காப்பாளர் மொகமட் இஷானும் கோல் போக விடாமல் தடுத்து சொலிட் அணிக்கு நம்பிக்கை வழங்கினார்.

விமானப்படை அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தாலும், ஷானக உதேஷ், சதுரங்க பெர்னாண்டோ மற்றும் கெலும் பெரேரா ஆகியோர் குறி தவறி உதைத்ததால், கோல் அடிக்க தவறியது. எனினும் 21ஆவது நிமிடத்தில் விமானப்படை அணியானது தனது முதலாவது கோலை அடித்தது. டில்ஷான் பெர்னாண்டோவின் பலமான உதை விமானப்படை அணிக்கு முதல் கோலை கொண்டுவந்தது. டில்ஷான் அற்புதமான உதை ஒன்றின் ஊடாக மற்றுமொரு கோல் அடிக்க முயற்சித்தாலும், பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது.

6 நிமிடங்களின் பின்னர் விமானப்படை அணியானது நிபுண பண்டார மூலமாக இரண்டாவது கோலை பெற்றுக்கொண்டது. தமக்கு கோலின் அருகாமையில் கிடைத்த பந்தை இலகுவாக கோல் கம்பங்களை நோக்கி நிபுண திசை திருப்பினார்.

32 ஆவது நிமிடத்தில், சொலிட் கழக வீரரான தரிந்த லியனகே காயம் காரணமாக போட்டியை தொடர முடியாது மைதானத்தில் இருந்து வெளியேற, சொலிட் கழகம் 5 கள வீரர்களுடனும் மொத்தமாக 6 வீரர்களுடன் களத்தில் காணப்பட்டது. இதனால் போட்டியின் நடுவரான ப்ரஷாந்த் ராஜ்கிரிஷ்ணா போட்டியை பறிமுதல் செய்தார்.

முழு நேரம் : விமானப்படை விளையாட்டு கழகம் 2 : சொலிட் விளையாட்டு கழகம் 0 (போட்டி பறிமுதல் செய்யப்பட்டது)

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – மொகமட் இஷான் (சொலிட் விளையாட்டு கழகம்)

விமானப்படை அணியின் தலைவரான நிபுண பண்டார நமக்கு கருத்து தெரிவித்த பொழுது  “இவ்வாறான நிலைமைகள் போட்டி நீண்ட காலத்திற்கு நடைபெறுவதினாலேயே ஏற்படும், இது கவலைக்குறிய விடயமாகும். எமது பாகிஸ்தான் விஜயம் சிறப்பாக அமைந்தது. நாம் ஒரு போட்டியை சமநிலையில் முடித்தோம், இரண்டு போட்டிகளில் சிறிய கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றோம். இது எமது அணிக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது. நியூ யங்ஸ் அணியுடனான இறுதி போட்டியில் வெற்றிபெற்று சிறப்பாக தொடரை முடிக்கலாம் என எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.

கோல்களை பெற்றுகொண்டோர்

விமானப்படை விளையாட்டு கழகம் – டில்ஷான் பெர்னாண்டோ 21′, நிபுண பண்டார 27′