உலக பதினொருவர் அணிக்காக சஹீட் அப்ரிடி விளையாடுவதில் சந்தேகம்

1103
Image Courtesy - PCB

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக, மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இம்மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் விசேட T20 போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இப்போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக விளையாட அழைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் சகலதுறை நட்சத்திரமான சஹீட் அப்ரிடி, அவருடைய  மூட்டு உபாதையிலிருந்து இன்னும் குணமாகாத காரணத்தினால் குறித்த போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் உருவாகியிருக்கின்றது.

மூட்டு உபாதை தொடர்பாக தனது ட்விட்டர் (Twitter) கணக்கில் கருத்து வெளியிட்டிருந்த அப்ரிடி, அது முழுமையாக குணமாக இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்கள் எடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். எனினும், இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையிலான T20 போட்டி இடம்பெறவிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே, அப்ரிடி இந்த போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கின்றது.

உலக பதினொருவர் அணியில் முதல்முறை இடம்பெற்ற நேபாள வீரர

கடந்த ஆண்டு இர்மா மற்றும் மரியா புயல் தாக்கியதில் மேற்கிந்திய தீவுகளின் 5 கிரிக்கெட் மைதானங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகின. இந்த மைதானங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காகவும், கிரிக்கெட் விளையாட்டுக்கான ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காகவும் நிதி திரட்ட மேற்கிந்திய தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகள் மோதும் இந்த விஷேட T20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

38 வயதாகும் அப்ரிடி இந்த T20  போட்டி மூலம், சர்வதேச கிரிக்கெட்டுக்குள் மறுபிரவேசம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சொந்த காரணங்கள் சிலவற்றை முன்வைத்து உலக பதினொருவர் அணி சார்பாக விளையாடவிருந்த பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் இப்போட்டியில் இருந்து முன்னர் விலகியிருந்தார். சகீப் அல் ஹஸனிற்கு பதிலாக ஐ.சி.சி. இப்போட்டியில் நேபாள அணியின் சுழல் நட்சத்திரமான சந்தீப் லமிச்சானேவுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான உலக பதினொருவர் குழாமை இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் இயன் மோர்கன் தலைமை தாங்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மறுமுனையில், மேற்கிந்திய தீவுகள் அணியை கார்லோஸ் பரத்வைட் தலைமை தாங்குகின்றார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெயில், ஈவின் லூயிஸ் மற்றும் அன்ட்ரூ ரசல் ஆகியோர் அடங்குகின்றனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க