ஐ.பி.எல் உரிமையாளர்களால் இலங்கை வீரர்ளுக்கு அழுத்தம் – அப்ரிடி குற்றச்சாட்டு

90
AFP

ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள் கொடுத்திருந்த அழுத்தம் காரணமாகவே இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் பலர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணித்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான சஹீட் அப்ரிடி கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி அங்கு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் 27 ஆம் திகதி முதல் விளையாடவுள்ளது.

இதனிடையே, பாதுகாப்புக் கருதி இலங்கை அணியில் உள்ள முக்கிய வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு இளம் வீரர்களைக் கொண்ட அணியொன்றை அனுப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

எனினும், இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தமைக்கு இந்தியாவின் மறைமுக அச்சுறுத்தல் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சௌத்ரி விமர்சித்திருந்தார்.

எனினும், இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்திருந்தார். 

இந்தப் பின்ணியில் இந்தியாவில் உள்ள ஐ.பி.எல் அணிகள் உரிமையாளர்களின் அழுத்தங்கள் காரணமாகவே இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று அந்த அணியின் முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அப்ரிடி பாகிஸ்தானில் உள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறுகையில், இலங்கை வீரர்கள் பலர் இந்தியாவில் உள்ள ஐ.பி.எல் அணிகளின் நெருக்கடியில் சிக்கி இருக்கிறார்கள்.

கடந்த வருடமும் இலங்கை வீரர்கள் பலரிடம் பேசி, பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்க வாருங்கள் என்றேன். அவர்களும் வருவதாகத் தெரிவித்தார்கள். 

ஆனால், இந்தியாவின் ஐ.பி.எல் உரிமையாளர்கள், பாகிஸ்தானுக்குச் சென்று பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடினால் ஐ.பி.எல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவோம், ஒப்பந்தம் தரமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாகவே, பாகிஸ்தான் வருவதற்கு இலங்கை வீரர்கள் மறுக்கிறார்கள் என்றார்.

அதேபோல, இலங்கையை எப்போதும் பாகிஸ்தான் ஆதரிக்கும். நாங்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் எமது அணியில் இருந்த முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்ததாக எப்போதும் நடந்தது கிடையாது. ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து பாகிஸ்தானுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுப்பி வைக்க வேண்டும். பாகிஸ்தான் வரும் இலங்கை வீரர்கள் எப்போதும் பாகிஸ்தானின் வரலாற்றில் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது உறுதி

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் சரியாக இருப்பது உறுதி…

எது எவ்வாறாயினும், இலங்கை அணி வீரர்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், திட்டமிட்டபடி இலங்கை அணி  எதிர்வரும் 24 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<