இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது அயர்லாந்து

129
@ICC

சுற்றுலா அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி இன்று (10) நடைபெற்றது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய அயர்லாந்து அணி ஒருநாள் தொடரை 2-2 என சமப்படுத்தியது.

கடந்த நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியைப் போன்றே நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஜாஹிர் கான் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

>> ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற ஆப்கானிஸ்தான்

போட்டியின் ஆரம்பம் முதல் அயர்லாந்து பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்து என்றால் மிகையாகாது. போட்டியின் முதலாவது ஓவரிலே மொஹமட் ஷஸாட் 6 ஓட்டங்களுடன் வெறியேறினார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த அவ்வணி ஒரு கட்டத்தில் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் மற்றும் மொஹமட் நபி ஜோடி அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டது.  

இருவரும் இணைந்து 76 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மொஹமட் நபி 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த நஜிபுல்லாஹ் ஜத்ரான் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் ராஷித் கான் அணித்தலைவருடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இறுதி ஓவரில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அஸ்கர் ஆப்கான் மற்றும் ராஷித் கான் ஆகியோர் முறையே 82 மற்றும் 35 ஓட்டங்களை பெற்று அணிக்கு பங்களிப்பு செய்திருந்தனர். பந்துவீச்சில் ஜோர்ஜ் டொக்ரெல் 2 விக்கெட்டுகளையும் ஏனைய நால்வர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்த அயர்லாந்து அணி, ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகள் முடிவுற்றிருந்த நிலையில் 1-2 என பின்தங்கியிருந்தது. ஒரு போட்டி மழை காரணமாக முடிவுகள் இன்றி கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை சமப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 217 ஓட்டங்கள் என்ற இலக்கை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து அணி 16 பந்துகள் எஞ்சியிருக்க 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

கடந்த நான்காவது போட்டியில் 224 ஓட்டங்கள் பெற முடியாமல் தோல்வியடைந்த அயர்லாந்து அணி அப்போட்டியில் விட்ட தவறுகளை நிவர்த்தி செய்து இன்றைய தினம் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தது. குறிப்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான வில்லியம் போர்டபீல்ட் மற்றும் போல் ஸ்டேர்லிங் ஆகியோர் அணிக்கு 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சிறந்த அடித்தளத்தை இட்டனர். தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக ஸ்டேர்லிங் மற்றும் அன்டி பல்பைர்னி ஆகியோர் 81 ஓட்டங்களை தமக்கிடையே பகிர்ந்ததன் மூலம் அணியின் வெற்றி வாய்ப்பு அதிரித்தது.

>> சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியுடன் மஹேந்திர சிங் டோனிக்கு திடீர் ஓய்வு

பின்னர் கெவின் ஓப்ரைன் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் அயர்லாந்து அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இவ்வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2-2 என சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், அன்டி பல்பைர்னி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். தொடரின் இறுதிப் போட்டியான இரு அணிகளுக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 216/6 (50) – அஸ்கர் ஆப்கான் 82*, மொஹமட் நபி 40, ராஷித் கான் 35*, ஜோர்ஜ் டொக்ரெல் 46/2

அயர்லாந்து – 219/5 (47.2) – போல் ஸ்டேர்லிங் 70, அன்டி பல்பைர்னி 68, ஜாஹிர் கான் 55/2

முடிவு – அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<