ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற ஆப்கானிஸ்தான்

109

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்று (8) நடைபெற்ற நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 109 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 2-1 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியால் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

அன்டி பல்பைர்னியின் சதத்துடன் தொடரை சமன் செய்த அயர்லாந்து

சுற்றுலா அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (5) இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச…

ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆப்கானிஸ்தான் அணி 81 ஓட்டங்களுக்கு முதல் 6 விக்கெட்டுகளையும் இழந்து மிக இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. எனினும் 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் மற்றும் 8 ஆவது வீரராக களமிறங்கிய சகலதுறை வீரர் மொஹமட் நபி ஆகியோர் 50 ஓட்டங்களை பெற்றிருந்த போது அஸ்கர் ஆப்கான் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெறியேறினார்.

பின்னர் களமிறங்கிய ரஷித் கான் மொஹமட் நபியுடன் இணைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியிருந்த போதும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 217 ஆக இருந்த போது மொஹமட் நபி 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  இருவரும் இணைந்து 8 ஆவது விக்கெட்டுக்காக 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்த இரு விக்கெட்டுகளையும் விரைவாக இழந்த ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக ஆட்டமிழந்த ரஷித் கான் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது நான்காவது அரைச்சதத்தை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக பந்து வீசிய அயர்லாந்து வீரர் கெமரன் டோவ்  மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு, அன்டி மெக்பரைனி மற்றும் போய்ட் ரன்கின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

கடந்த மூன்றாவது போட்டியில் 257 ஓட்டங்களை இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றியீட்டிய அயர்லாந்து அணிக்கு 224 ஓட்டங்கள் என்ற இலக்கு மிகவும் கடினமானதாக இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஆப்கானிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சால் அயர்லாந்து அணியை 114 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 109 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

31 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தமது முதலாவது விக்கெட்டை இழந்த அயர்லாந்து அணி, தொடர்ந்து அடுத்த இரு  விக்கெட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிரணிக்கு பெரிய இணைப்பாட்டம் ஒன்றை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காது அடுத்தடுத்து விக்கெட்டுகளை பதம் பார்த்த வண்ணம் இருந்தனர்.

இறுதியில் அயர்லாந்து அணி 35.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 109 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் அப்டாப் அலாம் நான்கு விக்கெட்டுகளையும் ரஷித் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர். 

BCCI புதிய ஒப்பந்தத்தில் பும்ராஹ், ரிஷப் பான்ட் ஆகியோருக்கு அதிக சம்பளம்

இந்திய கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வருடத்துக்கான வீரர்கள் ஒப்பந்தத்தில்…

துடுப்பாட்டத்தில் 52 ஓட்டங்களையும் பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி, ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றுமா அல்லது அயர்லாந்து அணி தொடரை சமப்படுத்துமா என்பதை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 223 (49.1) – மொஹமட் நபி 64, அஸ்கர் ஆப்கான் 54, ரஷித் கான் 52, கெமரன் டோவ் 32/3

அயர்லாந்து – 114 (35.3) – கெவின் ஓ ப்ரைன் 26, அப்டாப் அலாம் 25/4, ரஷித் கான் 22/2, முஜிபுர் ரஹ்மான் 25/2

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 109 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க