தனது சுழலால் அயர்லாந்து அணியை துவம்சம் செய்த ரஷீத் கான்

433

சுற்றுலா அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் இன்று (24) இடம் பெற்ற மூன்றாவது போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3-0 என தொடரை வைட் வொஷ் செய்தது.

நேற்று (23) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பல உலக சாதனைகளுடன் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஷியாஹுர் ரஹ்மான் அறிமுக வீரராக அணியில் இணைக்கப்பட்டிருந்தது விஷேட அம்சமாகும்.

சாதனைகளுடன் டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

தமது வழமையான பாணியில் அதிரடியாக இன்னிங்ஸை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹசரதுல்லாஹ் ஷஸாய் மற்றும் உஸ்மான் கனி ஆகிய இருவரும் இணைந்து 46 ஓட்டங்களை பெற்றிருந்த போது கனி 13 ஓட்டங்களுடனும் தொடர்ந்து ஷஸாய் 31 ஓட்டங்களுடனும் அதே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும் அனுபவ வீரர் மொஹமட் நபி அதிரடியாக 7 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 36 பந்துகளில் 81 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியிருந்தார்.  

இறுதியில் தமது இன்னிங்சுக்காக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் போய்ட் ரான்ங்கின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 32 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிது.

அயர்லாந்து அணி 32 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது முதலாவது விக்கெட்டை இழந்தது. எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த கெவின் ஓப்ரைன் மற்றும் அன்டி பல்பைர்னி ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். 96 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற அவர்களால் அணியை வெற்றியை நோக்கி நகர்த்துவதற்கு ஆப்கான் அணியின் சுழல் ஜாம்பவான் ராஷித் கான் முட்டுக் கட்டையாக இருந்தார் என்றால் மிகையாகாது.

சிறப்பாக பந்து வீசிய ராஷித் கான் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதலாவது ஹெட்ரிக் சாதனையை நிலைநாட்டியிருந்தார். அது மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை புரிந்த 7 ஆவது வீரராகவும்  முதலாவது ஆப்கான் வீரராகவும் தனது பெயரை சாதனை ஏட்டில் பதிவு செய்தார். இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் 16 ஆவது ஓவரின் இறுதிப் பந்து மற்றும் 18 ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிலைநாட்டினார். முன்னதாக இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இச்சாதனையை நிலைநாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து ஹஷிம் அம்லா நீக்கம்

போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும், தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் நபி தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 210/7 (20) – மொஹமட் நபி 81, ஹசரதுல்லாஹ் ஷஸாய் 31, ரான்ங்கின் 53/3

அயர்லாந்து – 178/8 (20) – கெவின் ஓப்ரைன் 74, அன்டி பல்பைர்னி 47, ரஷித் கான் 27/5

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<