தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான்

141

ஆப்கானிஸ்தான் கிரிகெட் சபையின் ஏற்பாட்டில் இந்திய மண்ணில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி என முழுமையான கிரிகெட் தொடரின் முதலாவது தொடரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டி இன்று (21) நடைபெற்றது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியை 132 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஒரு கட்டத்தில் 65 ஓட்டங்களுக்கு தமது முதல் 6 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறிய அயர்லாந்து அணியை 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த ஜோர்ஜ் டொக்ரெல் மற்றும் ஸ்டுவர்ட் போய்ன்டர் ஆகியோர் 67 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் டொக்ரெல் 34 ஓட்டங்களையும் போய்ன்டர் 31 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் மொஹமட் நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஒரு வருட இடைவெளியின் பின்னர் டேவிட் மாலன், சேம் பில்லிங்ஸ்

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரிலே 16 ஓட்டங்களை குவித்து அதிரடியாக தமது இன்னிங்ஸை ஆரம்பித்து இருந்த போதும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த அவ்வணி 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அனுபவ வீரர் மொஹமட் நபி மற்றும் நஜிபுல்லாஹ் ஜத்ரான் ஆகியோரின் நிதானமான ஆட்டம் அவ்வணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

இருவரும் இணைந்து 6 ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 86 ஓட்டங்களை பெற்று 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து ஆப்கானிஸ்தான் அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற உதவினர். நபி 49 ஓட்டங்கள் மற்றும் ஜத்ரான் 40 ஓட்டங்கள் என ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றிய ஆப்கான் வீரர் மொஹமட் நபி ஆட்ட நாயகனாக தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி சனிக்கிழமை (23) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து – 132/6 (20) – ஜோஜ் டொக்ரெல் 34, ஸ்டூவர்ட் போய்ன்டர் 31, மொஹமட் நபி 16/2, ரஷித் கான் 21/2

ஆப்கானிஸ்தான் – 136/5 (19.2) – மொஹமட் நபி 49*, நஜிபுல்லாஹ் ஜத்ரான் 40*, போய்ட் ரான்ங்கின் 39/2

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க