டெஸ்ட் வரலாற்றில் இளம் அணித்தலைவராக இடம்பிடித்த ரஷீட் கான்

56
DNA India

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (05) ஆரம்பமான ஒற்றை டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக விளையாடிய ரஷீட் கான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அணிக்கு தலைமை தாங்கிய பெருமையை பெற்றுள்ளார். 

பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களுக்குள் இடம்பெறாததன் காரணமாக குறித்த போட்டியானது டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்குள் உள்ளடக்கப்படவில்லை.

ரஷீட் கான் தலைமையில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான்

ரஷீட் கான் தலைமையில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம்….

ஆப்கான் கிரிக்கெட் சபையானது ஆரம்பத்தில் மூவகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் மூன்று அணித் தலைவர்களை நியமித்திருந்தது. கடந்த உலகக் கிண்ண தொடரிலிருந்து ஒருநாள் அணித் தலைவராக குல்படீன் நயீப், டி20 அணித் தலைவராக ரஷீட் கான் மற்றும் டெஸ்ட் அணித் தலைவராக ரஹ்மத் ஷாஹ் ஆகியோர் செயற்பட்டிருந்தனர். 

நிறைவுக்கு வந்த உலகக் கிண்ண தொடருடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் பல அதிரடியான நிகழ்வுகள் இடம்பெற்றன. அதில் ஒரு அம்சமாக அணித் தலைவர் மாற்றம் நிகழ்ந்தது. கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையானது புதிய அணித்தலைவரை அறிவித்தது. அதன்படி மூவகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே அணித்தலைவர் என்ற அடிப்படையில் 20 வயது இளம் சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான் நியமனம் பெற்றிருந்தார். 

அன்று அணித் தலைவராக நியமனம் பெற்றதன் பின்னர் இன்று (05) பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் அணித் தலைவராக களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இளம் அணித் தலைவராக ரஷீட் கான்  பதிவாகியுள்ளார். ரஷீட் கான் சரியாக 20 வயது 350 நாட்களில் டெஸ்ட் அணித்தலைவராக விளையாடி, ஜிம்பாப்வே டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் டடெண்டா தைபுவின் 15 வருட பழைமை வாய்ந்த வரலாற்று சாதனையை முடியடித்துள்ளார். 

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு ஹராரேயில் இலங்கை அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் தலைவராக டடெண்டா தைபு தனது 20 வயது 358 நாட்களில் அணித்தலைவராக விளையாடியிருந்தார். தற்போது ரஷீட் கான் வெறும் 8 நாட்களில் இவ்வாறு 15 வருட பழமை வாய்ந்த சாதனையை முறியடித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மிஸ்பாஹ்

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மிஸ்பாஹ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும்….

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.சி.சி இனால் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இதுவரையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி ஒரு அதில் வெற்றியையும், ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் ஜிம்பாப்வேயை முந்தி பத்தாமிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இளம் வயதில் டெஸ்ட் அணித்தலைவராக விளையாடிய வீரர்கள்

  1. ரஷீட் கான் (ஆப்கானிஸ்தான்) – 20 வயது 350 நாட்கள் 
  2. டடெண்டா தைபு (ஜிம்பாப்வே) – 20 வயது 358 நாட்கள் 
  3. மன்சூர் அலிகான் படௌடி (இந்தியா) – 21 வயது 77 நாட்கள்
  4. வகார் யூனுஸ் (பாகிஸ்தான்) – 22 வயது 15 நாட்கள் 
  5. கிரேம் ஸ்மித் (தென்னாபிரிக்கா) – 22 வயது 82 நாட்கள்
  6. சகீப் அல் ஹசன் (பங்களாதேஷ்) – 22 வயது 115 நாட்கள்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க